அனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, சினிமா, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

நாம் ஏன் அழுகிறோம்?

நோய்நாடி நோய்முதல்நாடி – 32

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

‘கண்ணிலே நீரெதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு!’

அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள்.

உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல. நமது கண்களை கழுவுவதற்கும், ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத் குறைக்கவும்தான். எந்தவிதமான வலுவான உணர்ச்சியாக இருந்தாலும் – துக்கம், ஆனந்தம், அதீத வியப்பு – கண்ணில் நீர் வருவது இயல்பு. அதிகமான சிரிப்பு, கொட்டாவி, கண்களில் எரிச்சல் இவற்றினாலும் அதிகமான கண்ணீர் வரலாம்.

நம் கண்களில் உள்ள கண்ணீர் திரை மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு Lipid layer (கொழுப்பு அடுக்கு) எனப்படுகிறது. இதில் இருப்பது எண்ணெய்கள். அடுத்ததாக இருப்பது நீர் அடுக்கு. மேல் அடுக்கு இந்த நீர் அடுக்கினை காப்பதுடன், கண்ணீர் வழிந்து கன்னங்களில் வழியாமல் தடுக்கிறது. இரண்டாவதாக இருக்கும் நீர் அடுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த கண்ணீர் திரை சமமாக கண்ணினுள் பரவி இருப்பதற்கும் இந்த அடுக்கு உதவுகிறது. மூன்றாவது  அடுக்கு சளி அடுக்கு. விழி வெண்படலத்தின் மேல் உள்ள இந்த அடுக்கும் கண்ணீர்த்திரை சமமாக பரவுவதற்கு உதவுகிறது.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும்  வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது. உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள். ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை. ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெறுவதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் (முக்கியமாகப் பெண்கள்) அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை.  சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும். ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது.  அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா? தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள். அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.   மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன. ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்? ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள். அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள். ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும்  அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள். அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

கண்ணீரைப் பற்றி இன்னும் சில தகவல்களுடன் அடுத்த வாரம் பார்க்கலாம்…

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

“நாம் ஏன் அழுகிறோம்?” இல் 9 கருத்துகள் உள்ளன

 1. ஏன் அழுகிறோம். உணர்ச்சிகளைக், கட்டுப்படுத்தப்பட்டு,செயல்களை நிறைவேற்ற,முடியாமல், சுதந்திரமுமில்லாத நிலையில், அழுகை தானாக வரும்.
  அழுகைக்குப் பின், மன உணர்வுகள் கட்டுக்குள் நிற்கிறது. நிவாரணமும் மனம் பெறுகிறது.
  ஸமயத்தில் அழுகைதான் ஆன்டிபயோடிக்.
  நீலி அழுகை என்று கூட ஒன்று இருக்கிறது. காரியம் சாதிக்க.
  கண் சுத்தமாகிறது. மன உளைச்சல் குறைகிறது.
  நல்ல கட்டுரை உன்னுடயது. படித்தேன் ரஸித்தேன். அன்புடன்

 2. சிறந்த வழிகாட்டல்
  கண்ணீரிலும் மருத்துவக் குணங்கள் உண்டு.
  ஒரு கடகம் ஊர் (சின்ன) வெங்காயம் கண்ணீர் ஒழுக சிறிது சிறிதாக அரிந்தால் கட்புரை (படலம்) சத்திரசிகிச்சை செய்யத் தேவையே இல்லையாம்.

 3. அழுவது பற்றி ஒரு கட்டுரை படித்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை ஆனால் சிலசமயம் வாய்விட்டு அழுதால் மன அழுத்தம் குறைந்து நல்ல தெளிவு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நிறைய் பேர் டி வி பார்த்து சினிமா பார்த்து பிழிய பிழிய அழுவார்கள் அவர்களைப்பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். மிகவும் உபயோகமான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்

 4. கண்ணீரை பற்றி நல்லதொரு பதிவு அம்மா! எனக்கு சிறு வயதில் ஒரு கண்ணில் மட்டும் கண்ணீர் விடாது வழிந்து கொண்டே இருக்கும்! இதை கண்டு பயந்த என் பெற்றோர் கண் மருத்துவரை அணுகி என்ன குறை என்று கேட்டதில் தான் தெரிந்தது எனது கண்ணில் கண்ணீர் வடிந்து உள்ளே செல்வதற்கு கண்ணின் உள்ளே இயற்கையாகவே அமைந்திருக்கு ஓட்டை அடைந்திருந்தது என்று! அந்த மருத்துவர் சரியாக கண்டு பிடித்து சிகிச்சை அளிக்காமல் விட்டிருந்தால் எனக்கு ஒரு கண்ணின் பார்வை பறி போகி இருக்கும்! என்னை பொறுத்தவரை கண்ணீர் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.. எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் இருக்க உறுதுணை புரிகிறது! மேலும் அழுது முடித்த பின்னர் நம் கண்களை நோக்கினால் அது அழகாகவும், சுத்தமாகவும் ஆனது போல் தெரியும்! நன்றி!

 5. மன அழுத்தத்திலிருந்து விடுபட கண்ணீர் ஒரு மாமருந்து தான். கண்ணீர் விட்டு அழுத பின் பிரச்சினையின் தீவிரம் கொஞ்சம் குறையத் தான் செய்கிறது. உணர்ச்சிவசப்பட்டாலே கண்ணீர் வருகிறது சில சமயம்.

  ஏன் அழுகிறோம் என்பதற்கு அழுத்தமான பதில் கிடைத்து விட்டது . நல்ல மருத்துவ கட்டுரை , சாதாரன மனிதர்களும் புரிந்து கொள்ளுமப்டியாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரஞ்சனி .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.