கவிதை, காட்டுயிர், நோய்நாடி நோய்முதல் நாடி!

30 ஆயிரம் கண்களால் நம்மைப் பார்க்கும் தும்பி!

நோய்நாடி நோய்முதல் நாடி – 31

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

நமக்குக் கண்கள் இருப்பதுபோலவே விலங்குகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண்கள் இருக்கின்றன. இவைகள் நம்மைப் போலவே பார்க்குமா? நாம் கண்களை பயன்படுத்தும் வகையிலேயே இவைகளும் பயன்படுத்துமா?

பூனைக்கண் என்று சிலரை குறிப்பிடுகிறோம். உண்மையில் பூனையின் கண் அமைப்பு பற்றி யோசித்திருக்கிறோமா? அத்தனை பெரிய யானைக்கு ஏன் இத்தனை சிறிய கண்கள்? இப்படியெல்லாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இதோ இந்தவாரம் இதுபற்றி பேசலாம், வாருங்கள்.

மனிதர்களின் கண்களைவிட விலங்குகள், பூச்சிகளின் கண்கள் மிகவும் வித்தியாசமானவை. இரவிலும் அவைகளுக்கு கண்கள் தெரியவேண்டும் ஆகையால் பயன்பாடுகளும் அமைப்பும் வித்தியாசமானவைதான். பெரும்பாலான பூச்சி இனங்களுக்கு கூட்டுக் கண்கள் எனப்படும் compound eyes இருக்கின்றன. இவற்றைத் தவிர கூடுதலான கண்களும் இருக்கின்றன. இந்தக் கூடுதல் கண்கள் simple eyes (Ocelli) எனப்படுகின்றன. தேனீ, வண்ணத்துப்பூச்சி, வீட்டு ஈ, வெட்டுக்கிளி இவற்றிற்கு இரண்டு பெரிய கண்கள் இருப்பது போலத் தெரியும். ஆனால் இவை பல ஆயிரக்கணக்கான குட்டிகுட்டியான கண்கள் (ommatidia) அல்லது கண்களின் பகுதிகள்தான். இந்தக் கண்களின் எண்ணிக்கை பூச்சியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

டிராகன் ஃப்ளை  (dragonfly) எனப்படும் தும்பி வகைக்கு சுமார் 30,000 குட்டிக்கண்களும் வீட்டு ஈ க்கு 4,000 குட்டிக் கண்களும் உண்டு. இந்த கண்கள் மேற்பரப்பிலும், ஒன்றுடன் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு இணைக்கப்பட்ட லென்ஸும் மூளைக்கு ஒளியையும், உருவத்தையும் அனுப்பும். இதனால் இந்த பூச்சிகளால் ஒரு பொருளை பல்வேறு கோணங்களிலும் பார்க்க முடியும். அப்படியானால் பல உருவங்கள் தெரியுமா என்றால் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே உருவமாகத் தெரியும். என்னே இறைவனின் படைப்பு! கண்கள் தலையில் அமைந்திருக்கும் இடமும் பூச்சி இனங்களில் வேறுபடுகிறது. மற்ற பூச்சிகளை கொன்று தின்னும் பூச்சிகளுக்கு தலையின் முன் பகுதியிலும், இலைகளையும், புற்களையும் தின்னும் பூச்சிகளுக்கு தலையில் சற்று பின்னாலும் அமைந்திருக்கும்.

நம்மைப்போல எல்லா பூச்சிகளுக்கும் தெளிவான பார்வை இருப்பதில்லை. டிராகன் ஃப்ளைக்கு மற்ற பூச்சிகளை விட தெளிவான பார்வை இருக்கும் – அதுவும் பொருளின் அருகில் வரும்போது மட்டும். தூரத்தில் இருக்கும்போதே தெளிவான பார்வையைக் கொண்ட பூச்சி இனம் வண்ணத்துப்பூச்சிதான். கூட்டுக் கண்களால் நம்மைப்போல ஒருமைப்படுத்திப் பார்க்க முடியாதாகையால் இந்தவகைப் பூச்சிகளுக்கு தெளிவான பார்வை இருப்பதில்லை. வீட்டு ஈக்களுக்கு தெளிவாகப் பார்க்கத் தேவையில்லை என்றாலும் வேகமாக நகரும் பொருட்களை பார்க்க முடியும்.

எளிமையான கண்கள் (simple eyes) என்பவை கூட்டுக் கண்களை விட வித்தியாசமானவை. கூட்டுக் கண்களை விட இவை சிறியவை. பூச்சிகளுக்கு மூன்று அல்லது அதைவிட அதிக எளிமையான கண்கள் இருக்கும். இந்த கண்கள் கூட்டுக் கண்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்தக் கண்கள் பார்க்க பயன்படுவதில்லை. மாறாக இவை பூச்சிக்கு ஒளி மற்றும் இருட்டு, இரவு பகல் வித்தியாசத்தை உணர்த்துகின்றன.

சிலந்திகளுக்கு கூட்டுக் கண்கள் கிடையாது. அதற்கு பதிலாக எட்டு எளிமை கண்கள் இருக்கின்றன. இவையெல்லாம் சிலந்தியின் தலையின் முன்பகுதியில் கொத்தாக அமைந்திருக்கின்றன. நடுவில் இருக்கும் ஜோடிக் கண்கள் தான் முக்கியமான கண்கள். இவைகளே சிலந்திக்கு இரையை பார்க்க உதவுகின்றன. மற்ற கண்களைவிட இந்த ஜோடிக் கண்களில் பார்வை தீர்க்கமாக இருக்கும்.

சில பூச்சிகளுக்கு அவைகளின் உடல் மீது கண்கள் போன்ற அமைப்புகள் இருக்கும், இவற்றை போலிக்கண்கள் என்று சொல்லலாம். தங்களை உண்ணவரும் மற்ற பூச்சிகளை பயமுறுத்தி தங்களை காத்துக்கொள்ள இவற்றை பயன்படுத்துகின்றன இந்த பூச்சிகள். கூட்டுப்புழுக்களுக்கு (வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு முன் இருக்கும் புழு) இதைபோல போலிக்கண்கள் இருக்கின்றன. இவைகள் ஐ ஸ்பாட் (eye spot) எனப்படுகின்றன. கண்களைப்போல தோற்றமளித்தாலும் இவைகளால் பார்க்க முடியாது. கூட்டுப்புழுவின் கண்கள் அதன் தலையின் பக்கங்களில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஆறு கண்கள் உள்ளன. இந்தப் புழுக்கள் வண்ணத்துப்பூச்சியாக மாறும்போது இந்தக் கண்கள் கூட்டுக் கண்களாக மாறுகின்றன. கூட்டுப்புழுவாக இருக்கும்போது இந்த கண்கள் வெளிச்சத்தையும், இருட்டையும் அறிய உதவுகின்றன.

சரி, இப்போது பூனையின் கண் பற்றி பார்ப்போமா? பூனைகளின் கண்கள் நம் கண்களைப்போலவே முகத்தில் இருந்தாலும் அவைகளின் நிறத்தால் நம்மை கவருகின்றன. பூனையின் ஐரிஸ் (கருவிழி) பச்சை, தங்கம், ஆரஞ்சு, நீலம் என்று பல வண்ணங்களில் இருக்கும். நடுவில் இருப்பது பாப்பா. பூனையின் கண்களை பகலில் பார்த்தால் ஒரு மெல்லிய கீற்றாகத் தெரியும் ‘பாப்பா’ இரவில் வட்டமாகத் விரியும். நம் கண்களைப்போலவே வெளிச்சத்தில் பூனையின் கண்களிலுள்ள பாப்பா சுருங்குகிறது. பூனை வேட்டையாடும் பிராணி. இரவில் தான் அதன் வேட்டை நடப்பதால் இருட்டில் தனக்கான உணவினை பார்க்க தோதாக அதன் பாப்பா விரிகிறது. நமது பாப்பாவினுள் இருக்கும் தசை வட்ட வடிவானது. ஆனால் பூனையின் கண்களில் இருக்கும் பாப்பாவின் தசைகள் நீள்வடிவமானவை. அதனால் தான் பூனையின் கண்களில் உள்ள கருவிழி பகலில் நீளமான ஒரு கீற்றாகத் தெரிகிறது. இதே இனத்தை சேர்ந்த சிங்கம், புலி இவற்றின் கண்களின் அமைப்பும் இதே போலத்தான்.

பூனையின் கண்களைப் பார்த்தாயிற்று. இப்போது யானையின் கண்களைப் பார்ப்போமா?

DSC_0173- AMARAVATHI ELEPHANT

யானையின் கண்கள் அதன் தலையின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.  பக்கவாட்டுப் பார்வை நன்றாக இருக்கும். யானை விழிகள் சுமார் 3.8 செ.மீ. விட்டமுள்ளவை. பார்வையும் அத்தனை கூர்மையானது இல்லை. யானைகள் தங்களது துதிக்கையினாலேயே பல விஷயங்களையும் அறிகிறது. கண் பார்வை அதற்கு இரண்டாம் பட்சம்தான். சில சமயங்களில் யானையின் கூட்டம் ஒரு பார்வையற்ற யானையின் தலைமையில் காடுகளில் உலா வருவதை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்வை இல்லாததால் தலைவர் தடுமாறுவதில்லை.

யானைகளின் இமைமுடிகள் மிகவும் நீளமானவை. இதனால் அவற்றின் கண்களுக்குள் தூசி, மணல் இவை போகாமல் காக்கப்படுகின்றது. கீழ் இமை, மேல் இமை தவிர மூன்றாவது இமை கண்களின் உள்ளே செங்குத்தாக நகரும் வகையில் அமைந்துள்ளது. மரக்கிளைகளை உடைத்து தின்னும்போதும், குளிக்கும்போதும், தலையின் மேல் மண்ணைப் போட்டுக் கொண்டு இளைப்பாரும்போதும் கண்களை இந்த இமைகள் காக்கின்றன. வயதான யானைகளின் கண்களில் கருவிழியைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் உருவாவது உண்டு. இதனால் அதன் பார்வை பாதிக்கப் படுவதில்லை.

கீழே ஒரு ஆங்கில கவிதை இருக்கிறது. யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதையும் அதனால் அவைகள் துன்பப்படுவதையும் சொல்லும் கவிதை. படித்துப் பாருங்கள்.

வரும் வாரம் வரை…… The Eyes of an Elephant

“30 ஆயிரம் கண்களால் நம்மைப் பார்க்கும் தும்பி!” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. ‘இந்த பூச்சிகளால் ஒரு பொருளை பல்வேறு கோணங்களிலும் பார்க்க முடியும். ‘
    நிஜமாகவே இறைவனின் படைப்பை நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். பூனைகளுக்கு கண்களில் இருக்கும் பாப்பா நீள் வடிவத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன், ஆனால் ஏன் இது போல இருக்கிறது என்று யோசித்ததில்லை! ஆச்சரியமான, தெரியாத பல உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் அம்மா 🙂

  2. ஒவ்வொரு ஜீவனுக்கு அதற்கேற்றாற்போல கண்கள். பார்வைகள் பலவிதமென விஷயங்கள் தெரிந்து கொள்ளும் போது விசித்திரமான உலகில் நாம் வாழ்கிறோமென்ற எண்ணம் உண்டாகிறது. அறிய தகவல்கள். நன்றி. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.