புத்தம் ஓர் அறிமுகம்
மயிலை சீனி. வெங்கடசாமி
பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகத்தை சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவிலிருந்து அவர்கள் என்னென்ன நூல்களை இயற்றினார்கள் என்பதைப் பார்ப்போம்.
தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப் பட்டன. மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த மூன்றில் மணிமேகலையைத் தவிர மற்ற இரண்டும் இறந்துவிட்டன. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை
‘ மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய
சிலப்பதிகார முற்றும் ‘
என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டனையும் வெவ்வேறு காப்பியங்களாகவே கொண்டனர்.
மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை ஏற்கனவே பார்த்தோம்.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. ‘கதை பொதி பாட்டு’ என்னும் பதிகத்தைத் தவிர்த்து, ‘விழாவறை காதை’ முதலாகப் ‘பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை’ இறுதியாக முப்பது காதைகளையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோவேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். இவற்றை,
‘ இளங்கோ வேந்த னருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் டமிழ்த்திற மணிமே கலைதுற
வாறைம் பாட்டினு ளறியவைத் தன்னென் ‘
எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.
மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல், சொல் வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியமட்டும் அன்று. பண்டைத்தமிழ் நாட்டின் வரலாற்றினையும், கலைகளையும், நாகரிகத்தினையும், அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணி செய்யும் மணிமேகலையாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.
சுவை மலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்களாவர். 1894 – ஆம் ஆண்டுக்கு நேரான ‘விஜய தனுர் ரவி’யில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச்சுவடியைமட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898 -ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத்தினாலோ, ஐயரவர்கள் பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப்பற்றிக் குறிப்பிடாமலேயேயிருந்துவிட்டார்கள். பிள்ளையவர்களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப்பெற்றன. எஞ்சி நின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளில் திருத்தப்பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ் நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.
இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக்காட்டுவோம். புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ்சோலையைக் கூறும் பகுதி இது :-
‘ குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்
திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய வுவவனந் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். ‘
(மலர்வனம் புக்க காதை, 160 – 171.)
மேற்சொன்ன உவவனத்திற் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப்பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணிமேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள். அப்பகுதி இது :-
‘ பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்
கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் !
மாசறத் தௌ¤ந்த மணிநீ ரிலஞ்சிப்
பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்ன மாங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய் !
இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த
வால்வெண் சுண்ண மாடிய திதுகாண் !
மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து
தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்
அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்
கெறிந்தது பெறா’அ திரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணித்திரல் காண் ! எனப்
பொழிலும் பொய்கையஞ் சுதமதி காட்ட
மணிமே கலையம் மலர்வனம் காண்புழி. ‘
(பளிக்கறை புக்க காதை, 1 – 26.)
கீழ்க்காணும் பகுதி மாலைப்பொழுதின் இயற்கையை இனிது விளக்குகின்றது :-
‘ அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
அன்றிற் பேடை யரிக்குர லழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி யந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழன்மேற் கொள்ள
அமரக மருங்கிற் கணவனை யிழந்து
தமரகம் புகூஉ மொருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். ‘
(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 123 – 141.)
காலை வேளையின் இயற்கையைச் சாத்தனார் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார் :-
‘ காவ லாளர் கண்டுயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்பப்
பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தால
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
ஊர்துயி லெடுப்ப வுரவுநீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்’.
(துயிலெழுப்பிய காதை, 111 – 126.)
(தொடரும்)
அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் அத்தியாயங்கள் பகுதி கட்டுரைகளாக பிரசுரிக்கப்படுகின்றன.