பண்டிகை ஸ்பெஷல்!
கிறுஸ்துமஸ் ஸ்பெஷலுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று நினைப்பவர்கள் இந்த அரிசி அல்வாவை முயற்சித்துப் பார்க்கலாம். தென் மாவட்டங்களில் கிறிஸ்துமஸின்போது இந்த பண்டம் நிச்சயம் இருக்கும்.
தேவையானவை:
பச்சரிசி – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
தேங்காய் – 3 மூடி
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – ஒரு கைப்பிடி
நெய் – 2 கப்
எப்படி செய்வது?
அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடியவிட்டு, உலர்த்தி, மாவாக அரைக்கவும். வெல்லத்தைப் பொடிக்கவும். தேங்காயைத் துருவி, சிறிது நீர் விட்டு அரைத்து, பால் எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நீர் விட்டு, பொடித்த வெல்லத்தைப் போட்டு, கரையவிட்டு, மண் இல்லாமல் வடிகட்டவும். இந்த வெல்ல நீருடன் அரிசிமாவு, தேங்காய்ப்பால் சேர்த்து நீர்க்கக் கரைத்து, அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கொதிக்கும்போது கொஞ்சம், கொஞ்சமாக நெய்விட்டுக் கிளறவும். கூடவே வறுக்காத முந்திரி, திராட்சை ஏலக்காய் தூள் போட்டு நன்கு கிளறவும்.
ஓரளவு அரிசி மாவு வெந்ததும் தீயை அதிகரித்து, கைவிடாமல் கிளறினால் அல்வாவின் கலர் மாறி, அழுத்தமான பழுப்பு நிறத்தில் கலவை வரும். அப்போது நெய் பிரிந்து வரும். மேலும் சிறிது நேரம் வேகவிட்டு, கலவை கெட்டியானதும் அதாவது கையில் எடுத்து உருட்டினால் உருட்ட வரும் பதத்தில், ஒரு தட்டில் கொட்டிப் பரப்பவும். இதை வில்லைகளாகப் போட்டு ஆறியதும் சாப்பிடலாம். இந்த அல்வாவை ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.