பண்ணைக் கோழிகள் உண்பதால் நமக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. மாற்றாக நாட்டுக்கோழிகள் குறைந்த வளவே விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு நல்ல தீர்வு நம் தேவைக்கானதை நாமே தயாரித்துக் கொள்வதுதான். வீட்டின் முற்றத்திலோ, கொல்லைப்புறத்திலோ சிறிய இடம் இருந்தாலே போதும், நாட்டுக் கோழிகளை வளர்த்து நம் தேவைகளுக்கு வளர்க்கலாம். இட வசதி அதிகமாக இருப்பவர்கள் விற்கவும் செய்யலாம்.
நாட்டுக்கோழிகளுக்கு உணவு:
நாட்டுக்கோழிகளை மேய விட்டுதான் வளர்க்க வேண்டும். நாமே கரையான்களை உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்படிக்கழிவு, காய்கறிக் கழிவுகள், இலை தழைகள் கொடுத்து வளர்த்தாலே போதும் ஐந்தே மாதத்தில் ஒன்றரை கிலோ அளவுக்கு கோழி வளர்ந்துவிடும். வீணாகிற கம்பு, ராகி, அரிசி போன்ற தானியங்களையும் கொடுக்கலாம்.
அடைகாப்பது எப்படி?
ஒரு பெட்டைக்கோழி ஆண்டுக்கு மூன்று முறை முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாக 15 முட்டை வரை போடும். அதை தேதி வாரியாக எழுதி வைத்து. கடைசியாக போட்ட 9 முட்டைகளை அடை காக்க வைக்க வெண்டும். சாம்பலும் மணலும் நிரப்பிய கூடையில்தான் அடைகாக்க வைக்க வேண்டும். நன்றாக வளர்ச்சி அடைந்த ஒரு பெட்டைக்கோழியால் 9 முட்டைகளை மட்டும்தான் அடை காக்க முடியும். கூடையில் மூன்று மிளகாயையும் போட்டு வையுங்கள். இதனால் பூச்சி தொல்லைகள் இருக்காது. ஈரப்பதத்தை உறிந்துகொண்டு கதகதப்பாக வைப்பதற்காக கரித்துண்டும் இடியைத் தாங்கிக்கொள்வதற்காக இரும்புத் துண்டும் கூடையில் போடுங்கள்.
பராமரிப்பு:
குஞ்சுகள் வெளிவந்த முதல் வாரம், தினமும் தண்ணீரில் மஞ்சள்தூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இது நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க. பிறகு முன்று வாரத்துக்கு ஏதாவது வைட்டமின் டானிக்குகளை சில சொட்டுகள் நீரில் கலந்து கொடுங்கள். சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்களில் கோழிக்கு இலவசமாக தடுப்பு ஊசி போடுகிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்கே விற்கலாம்?
நாட்டுக் கோழியை விற்பதற்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. ஒரு முறை உங்களிடம் நாட்டுக் கோழி இருப்பதை, தேவைப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டால், வீடு தேடி வந்து வாங்கிக்கொள்வார்கள்.