அனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு

கண்ணாடி உருவாகி வந்த கதை!

நோய்நாடி நோய்முதல் நாடி – 24

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி. மூக்குப் பாலத்தின் மீது உட்காருவதால் இந்தப் பெயரோ என்னமோ. யார் இந்த மூக்குக் கண்ணாடியை கண்டுபிடித்தவர்?

முதன்முதலாக இதைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ரோமானிய நடிகர் செனேகா (4BC – 65AD) என்பவர் ரோமிலிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிப்பதற்காக நீர் நிறைந்த கண்ணாடி கோளத்தை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தினார் என்று சரித்திரம் சொல்லுகிறது.  பார்வையை மேம்படுத்தும் அல்லது நன்றாகப் பார்ப்பதற்கு உதவும் கண்ணாடிகள் கி.பி. 1000 மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ரீடிங் ஸ்டோன்ஸ் என்று அழைக்கப்பட்டன.

இடைக்காலத்தில் சில துறவிகள் கண்ணாடி கோளங்களை பூதக்கண்ணாடியாக பயன்படுத்தியதாகத் தெரிகிறது. 13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நாட்டிலிருந்த கண்ணாடி தயாரிப்பாளர்கள் கெட்டியான கண்ணாடியால் ஆன ரீடிங் ஸ்டோன்களை தயாரித்தனர்.  இவற்றை மாட்டின் கொம்புகளாலோ, மரத்தாலோ ஆன சட்டத்தில் பொருத்தி ஒரே ஒரு லென்ஸ் ஆக பயன்படுத்தினார்கள். இவை நாம் பயன்படுத்தும் பூதக்கண்ணாடிகள் போன்று இருந்தன. சால்வினோ டி’யார்மேட் என்பவர் இதனைக் கண்டுபிடிப்பிடித்தார் என்று நம்பப்படுகிறது.

முதன் முதல் மூக்குக் கண்ணாடி இத்தாலியில் துறவிகளாலோ அல்லது கைவினைஞர்களாலோ, பைசா நகரத்தில் அல்லது வெனிஸ் நகரத்தில் 1285-1289 களில் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடும். இரண்டு கண்ணாடி வில்லைகள் எலும்பு, உலோகம் அல்லது தோல் இவற்றால் ஆன சட்டத்தில் பொருத்தப்பட்டு மூக்கு பாலத்தின் மேல் பொருந்தும்படி அமைக்கப்பட்டன.

ஓவியம் ஒன்றில் முதன்முதலில் மூக்குக் கண்ணாடியை வரைந்தவர் டோம்மாசோடா மொடேனா என்பவர். இவரது ஓவியத்தில் சில துறவிகள் ஓலைச்சுவடிகளை எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஒரு துறவியின் கையில் பூதக் கண்ணாடி இருக்கிறது. இன்னொரு துறவியின் மூக்கின் நுனியில் மூக்குக்கண்ணாடி உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

முதன்முதலில் கண்ணாடிகள் தூரப்பார்வை, மற்றும் வெள்ளையெழுத்து இவைகளை சரிபடுத்தவே பயன்படுத்தப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் குவி மற்றும் குழி லென்ஸ்களின் பயன்பாடுகள் தெரியவர ஆரம்பித்தன. மூக்குக்கண்ணாடிகள் ஒரே லென்சால் ஆனவையாகவோ, அல்லது படிப்பதற்கும், தூரப்பார்வை பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மல்டிஃபோகல் ஆகவோ இருக்கக்கூடும். குழிலென்ஸ் என்பது கிட்டப்பார்வைக்கும், குவிலென்ஸ் என்பது தூரப்பார்வைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒருதளப்பார்வை (astigmatism)யை சரி செய்ய உதவும் உருளை வடிவ லென்ஸ்களை 1825 இல் கண்டுபிடித்தவர் சர் ஜியார்ஜ் எர்ரி.  1784 இல் ஒரே லென்ஸில் கீழ் பகுதி படிப்பதற்கும், மேல்பகுதி பார்வைக்கும் என்று வடிவமைக்கலாம் என்று யோசனை கொடுத்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.

காதுகளின் மேல் கண்ணாடியை மாட்டிக் கொள்ளுவதை ஸ்பெயின் நாட்டு கைவினைஞர்கள் 1600 ஆம் ஆண்டில் வழக்கத்திற்குக் கொண்டுவந்தனர். பட்டுத் துணியினால் ரிப்பன் வளையங்களைச் செய்து கண்ணாடியுடன் இணைத்து அதனை பயனீட்டாளர்களின் காதுகளைச் சுற்றி மாட்டிக் கொள்ளும்படி செய்தனர். இந்த புதுவித கண்ணாடிகள் சீன தேசத்திற்கு சென்றபோது மாற்றத்திற்கு உள்ளானது. காதுகளில் மாட்டிக்கொள்ளும் வளையத்திற்கு பதில்  உலோகத்தில் ஆன சிறிய எடையை இந்த ரிப்பன்களுடன் இணைத்தனர். இந்த எடை காதுகளின் பின்புறத்தில் போய் உட்கார்ந்துகொண்டு கண்ணாடி கண்ணிலிருந்து நழுவாமல் பார்த்துக் கொள்ளும். 1730 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்கார்லெட் என்ற கண்மருத்துவர் இப்போது நாம் அணியும் கண்ணாடிகளில் உள்ளது போன்ற உறுதியான, காதுகளை இணைக்கும் செவித்தடங்களை வடிவமைத்தார்.

பென்சில் படத்திற்காக கண்ணாடி அணிந்த ஸ்ரீதிவ்யா
பென்சில் படத்திற்காக கண்ணாடி அணிந்த ஸ்ரீதிவ்யா

ஒருகாலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களின் கண்களைப் பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும். தடிமனான கண்ணாடி வழியாக கண்கள் மிகவும் பெரிதாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது தடிமனான கண்ணாடிகளும் மறைந்துவிட்டன. அதேபோல கண்களும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை.

கண்ணாடி, பிளாஸ்டிக், பாலிகார்போனேட் ஆகியவற்றால் லென்ஸ்கள் செய்யப்படுகின்றன. . துல்லியமாகப் பார்க்க  உதவுவதால், முதன்முதலில் கண்ணாடியாலேயே மூக்குக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் மிகவும் பவர் அதிகமுள்ள கண்ணாடிகள் என்றால் எடை அதிகமாக இருந்தன. பிளாஸ்டிக் லென்ஸ்கள் லேசானதாக இருந்தன. ஆனால் இவற்றில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்பு உண்டு. லேசானதாகவும், மிக மெல்லியதாகவும் இருக்ககூடிய பாலிகார்போநெட் (CR-39) இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்த வாரம் கான்டாக்ட் லென்ஸ்கள்…

“கண்ணாடி உருவாகி வந்த கதை!” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. கண்ணாடி உருவானதிற்கு இப்படி ஒரு கதை இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது ஆனால் அது இல்லாமல் நாம் அரை மனிதர்களாகத்தான் ஆகீவிட்டோம் என்றால் மிகையாகாது பள்ளியில் L K G குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் நிலை வந்து விட்டது நமது உடலில் ஓர் அங்கமாக மாறி வருகிறது வாழ்த்துக்கள்

   1. கண்ணாடிக்குப் பின்னாடி இவ்வளவு கதைகள் இருக்கிறது.
    தலைவலி என்று சொல்லி பேஷனாக கண்ணாடி அணிந்தவர்களும் உண்டு. பழக்கம் காரணமாக கண்ணாடி போடாமலிருக்கவும் முடியாத மனப்பான்மையும் உண்டாகிரது. இது எனக்குப் பொருந்தும்.
    கண்ணாடியின் கதை படிக்கப் பிடித்தது. டைம் இல்லைஉனக்கு,விவரம் கொடுப்பதில் சளைப்பதில்லை.
    இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அன்புடன்

 2. குளிர் கண்ணாடி கூடப் போடப் பிடிக்காது எனக்கு. ஆனால் இப்போ? கண்னாடி இல்லாமல் படிக்கவே முடிவதில்லை. :)))) எல்லாம் 4,5, 6 னு விதம் விதமாத் தெரியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.