முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.
கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com. எம்பிராய்டரி, குரோஷா, குயவு பொருட்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், ஃபேஷன் ஜுவல்லரி, உணவுப் பொருட்கள்(குக்கீஸ், ஜாம்,ஊறுகாய்), மூலிகைப் பொருட்களால் உருவாக்கிய சுத்திகரிப்பு பொருட்கள் என கலைப் பொருட்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். அதாவது உங்களுக்கு எந்த கலை தெரிந்திருந்திருந்தாலும் அதை விற்கலாம்.
உலகின் மூலைமுடுக்குகளில் உள்ள தீவு நாடுகளைச் சேர்ந்தவர்கள்கூட இந்த தளத்தில் பொருட்களை விற்று வருகிறார்கள். 2012ம் ஆண்டின் விற்பனை மட்டும் கிட்டத்தட்ட 895 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், இந்த தளத்தில் தன்னுடைய கைவினை பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளுக்குள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இந்தத் தளம். ஒரு தொழிலை ஆரம்பித்து ஏற்றுமதி செய்வது என்றால் இங்கே ஏகப்பட்ட உழைப்பும் ஏகப்பட்ட சட்டதிட்டங்களும் சிக்கல்களும் உண்டு. ஆனால் இங்கே அப்படியல்ல சுமாரான பொருளைக்கூட நல்ல லாபத்தில் விற்றுவிட முடியும். ஒரே ஒரு நிபந்தனை, அந்தப் பொருள் விற்பவரின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும்.
இங்கே எத்தனையோ கைவினைக் கலைஞர்கள், குறிப்பாக வீட்டிலிருந்தபடியே கைத் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் தங்கள் தயாரிப்பை விற்கத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கைத்தூக்கி விடக்கூடியது இந்த இணையதளம். இதுமட்டுமல்ல இந்த தளத்தில் இணைந்து வெற்றிகரமான விற்பனையாளராக பல்வேறு யுத்திகளையும் கற்றுத்தருகிறது. 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே தங்களுடைய கலைப் பொருட்களை விற்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்கூட இந்தத் தளத்தில் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?” இல் ஒரு கருத்து உள்ளது