காப்பீடு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம், முதலீடு

நீங்கள் செய்துவிட்டீர்களா ஆரோக்கியத்தில் முதலீடு?

நோய்நாடி நோய்முதல் நாடி – 21

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

வெளிநாடுகளுக்கு போகும் வயதானவர்கள் பயப்படுவது இந்த ஆரோக்கிய முதலீட்டைப் பற்றித்தான். ஆயுள் காப்பு இருந்தால்தான் அங்கு மருத்துவமனையை அணுக முடியும். இல்லையென்றால் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைக் கொடுத்து, நமது அடுத்த தலைமுறைக்கு கடனையும் வைத்துவிட்டு வரவேண்டியிருக்கும்.

நம்மில் நிறைய பேர் பங்குச்சந்தையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். தினமும் கணணி முன் உட்கார்ந்துகொண்டு இந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது அல்லது அந்த நிறுவனத்தில் பங்குகளை விற்பது , இன்று எத்தனை லாபம், அல்லது எத்தனை நஷ்டம் என்று கணக்குப் போட்டு, நாளை இன்னும் நன்றாக பங்கு சந்தையைத் தொடரவேண்டும் என்றெல்லாம் திட்டமிடுபவர்கள் நம்மில் பலர் உண்டு.

ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் ஆரோக்கியத்தில் முதலீடு செய்கிறோம்? ஆரோக்கியக் காப்பீடு வைத்திருக்கிறோம்? அதென்னவோ ஆரோக்கியக் காப்பீடு தண்டம் என்று நினைப்பவர்கள்தான் நம்மில் அதிகம். இப்போதுதான் ஒன்றுமில்லையே, எதற்கு நம் பணத்தைக் கொண்டு போய் அங்கு போடவேண்டும் என்று தோன்றும். இது மிகவும் தவறான எண்ணம். இதோ ஒரு நிகழ்ச்சி:

தொடர்ந்து மார்பில் வலி. ஏதோ அஜீரணக் கோளாறு என்று நினைத்து அலட்சியப்படுத்த 44 வயதில் எங்கள் உறவினரை இழந்தோம். இத்தனைக்கும் இவர் நிறையப் படித்தவர். இரண்டு குழந்தைகள்; வேலைக்குப் போகாத மனைவி. நல்லவேளையாக உறவினரின் நிறுவனத்திலேயே மனைவிக்கு வேலை கிடைக்க குடும்பம் நிமிர்ந்தது.

இன்னொருவரின் நிலையும் இதேபோல ஆனது. ஆனால் அவர் சிறிது அதிர்ஷ்டம் செய்தவர். உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப் பிழைத்தார். அறுவை சிகிச்சைக்குப் பணம்? மனைவியும் வேலைக்குப் போகாதவர். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 25 லட்சம் செலவு! இந்த உறவினரின் அடுத்த தலைமுறையின் மீதும் கடன் சுமை.

நேர முதலீடு:

முதலீடு என்று இங்கு நான் குறிப்பிடுவது வெறும் காப்பீடு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் அதுவும் தொடர்ச்சியாக என்று. இதற்கு என்று நாம் செலவிடும் நேரமும் ஒருவிதத்தில் நாம் செய்யும் ஆரோக்கிய முதலீடு தான். தினமும் இதற்கென்று நேரம் ஒத்துக்குங்கள். நமது ஆரோக்கியத்திற்காக நாம் நிச்சயம் இந்த  முதலீட்டை செய்தே ஆகவேண்டும். ஒருகாலத்தில் இந்த உடற்பயிற்சி பற்றியும் பலர் பலவித கருத்துக்களை சொல்வார்கள். ஒருமணிநேரம் தொடர்ந்து செய்ய வேண்டும். மூச்சு இறைக்க, இறைக்க ஓட வேண்டும். நடப்பது என்பது வயதானவர்களுக்கு மட்டுமே. சின்ன வயதுக்காரர்கள் ஜாகிங் செய்ய வேண்டும். அல்லது வேகமாக ஓட வேண்டும். உடற்பயிற்சி கூடங்களில் சேர்ந்துதான் செய்யவேண்டும்.

foto8 copy

இப்போது இந்தக் கருத்துக்கள் நிறைய மாறிவிட்டன.

 • ஓட்டத்திற்கு பதில் நடக்கலாம்.
 • ஒரே தடவை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை; ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறையாக நேரத்தைப் பிரித்துக் கொண்டு செய்யலாம்.
 • விறுவிறுப்பான நடை தேவை. ஆனாலும் நிதானமாக நடப்பதால் தவறு ஏதுவுமில்லை. அவரவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவு போதும்.
 • ஜாகிங் மற்றும் ஓடுவதால் முழங்கால்கள் பாதிக்கப்படுகின்றன. நடைப்பயிற்சி எல்லோருக்கும் நல்லது.
 • உடற்பயிற்சி என்பதை வீட்டிலேயே, மாடிப்படிகள் ஏறி இறங்குவது, வீட்டினுள் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்காமல் நடமாடிக் கொண்டிருப்பது என்று மாற்றிக் கொள்ளலாம்.
 • ஒரு நாளில் ஒருவர் 10,000 அடிகள் நடக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாக இதைக் கொள்ளலாம். (இதில் நீங்கள் வீட்டில் நடமாடுவதும் சேரும்).

நம்மில் பலர் ஆரோக்கியம் பற்றி பேசினால் ‘பிறந்தவன் எல்லோரும் ஒருநாள் போகத்தானே செய்யணும்?’ என்று தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள். ஒரு சிலர் ‘டாக்டரிடம் போகவே கூடாது. ஏதாவது வியாதிப் பேர் சொல்லிவிடுவாங்க’ என்று மருத்துவரை அணுகுவதே பாவம் என்ற வகையில் பேசுவார்கள். இன்னும் சிலர் இவர்களை தூக்கி சாப்பிட்டுவிடும் வகையில் பேசுவார்கள். அவர்களது கேள்வி : ‘விபத்துல போயிட்டா?’

இவர்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொள்ளுவோம். சில விஷயங்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை நாம் செய்யலாம் இல்லையா? விதிவசத்தால் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் நாமாக நம் முடிவைத் தேடிக்கொள்ள வேண்டாமே. நாம் எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் நம் ஆரோக்கியம் என்பது நம்மைச் சார்ந்தது மட்டுமல்ல; நமக்கு ஒன்று என்றால் நம் குடும்பம் முழுதுமே பாதிக்கப்படும் – மனதளவிலும், பணவிஷயத்திலும்.

அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

 • ‘எனக்கென்ன? என் உடல் நிலை நன்றாகத் தானே இருக்கிறது? ‘ இந்த தவறான சிந்தனையால் பல தவறுகளைச் செய்கிறோம். அப்படியில்லாமல் உங்களுக்கென்றோ குடும்பத்திற்கென்றோ,  ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
 •  உங்கள் கணவன்/மனைவியிடம் பண விஷயம், காப்பீடு செய்திருக்கும் தொகை, உங்கள் ஆரோக்கியம் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். ஒருவர் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் பற்றி நிச்சயம் இன்னொருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
 • ஒரு அவசர நிலை என்று வரும்போது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு அவசரகால திட்டத்தை தயார் செய்யுங்கள். அவசர நிலையில் எமொஷனலாக ஆகாமல், முடிவுகளை ‘பட் பட்’டென்று எடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல  இது உதவும்.

காப்பீடு முதலீடு:

 • உங்கள் வயது 38 ஐ கடந்திருந்தால், தயவு செய்து உங்களை ஒரு காப்பீட்டு திட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப காப்பீடு என்றால் மிகவும் உத்தமம். இது செலவு அல்ல. அது ஒரு முதலீடு. இதில் போடும் பணம் அத்தியாவசியமான காலக் கட்டங்களில்  உதவும் என்பதை மறவாதீர்கள்.
 • சென்ற முறை என் கணவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய நேர்ந்தபோது எங்கள் டாக்டர் கூறிய யோசனையை உங்களுக்கும் சொல்லுகிறேன். ‘தனி நபராக காப்பீடு எடுப்பதைவிட உங்கள் நிறுவனத்தின் மூலம் காப்பீடு எடுப்பது நல்லது. தனி நபரை விட பெரிய நிறுவனங்கள் என்றால் காப்பீடு நிறுவனங்களும் உடனே செயல்படுவார்கள். இது சரியில்லை; அது சரியில்லை என்று சொல்லி உங்களை அலைக்கழிக்க மாட்டார்கள்’
 • உங்கள் குழந்தைகளுக்கும் அவசர நிலையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று கூறுங்கள். பல நேரங்களில் நம் குழந்தைகளே நமக்கு தைரியத்தை கொடுக்கிறார்கள்.

ஆரோக்கிய பரிசோதனைகள்:

 • 37 வயது கடந்தவர்கள் அனைவரும் (ஆண் மற்றும் பெண் இருபாலரும்) தயவு செய்து ஆரோக்கிய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதன் செலவு ரூ 800 முதல் 1000 மட்டுமே. முன்கூட்டி நமது ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வது நல்லது.

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்!
அடுத்த வாரம்…

“நீங்கள் செய்துவிட்டீர்களா ஆரோக்கியத்தில் முதலீடு?” இல் 13 கருத்துகள் உள்ளன

 1. அயல்நாட்டில் மருத்துவ இன்ஷியூரன்ஸுக்கு இன்றும் எங்களுக்காக பிரிமியம் கட்டப்பட்டு வருகிறது. எவ்வளவோ உபயோகரமாக இருந்தது.
  இன்றும் தொடர்கிறது. லாப நஷ்டத்திற்காக இல்லை. நிமமதியாக இருக்க முடிகிரது. வயதானவர்களுக்கு, நல்ல மருத்துவ உதவி எந்த நேரத்திலும்
  தேவைப்படும். இது எங்கள் பிள்ளையின் ப்ளான்.
  பொதுவாகவே, அயல் நாடுகளில் வயதானவர்களுக்கு மருத்துவப்ளான்கள்
  அரசாங்கமே ஆரம்பமுதலே நிர்வகித்து வருகிறது.
  தனி நபர்களுக்கு,கார்டியன் பொறுப்பேற்று காப்பீடு எடுத்தால்தான் அவர்களுக்குஅவ்விடம் வசிக்க விஸா வழங்கப்பெறும்.
  மொத்தத்தில் காப்பீடு மிகவும் அவசியம்.
  கட்டுறை அழகுறச் சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கும் காப்பீடு எடுத்தவர்கள் மிகவும் பயனடைகிரார்கள். அருமை.அன்புடன்

 2. தங்கள் காப்பீட்டு மதியுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
  அதைவிட
  நேர முதலீடு, நோயற்ற வாழ்வில் (ஆரோக்கிய) முதலீடு நன்று.
  தங்கள் பதிவு சிறந்த வழிகாட்டல்.

 3. பயனான பல தகவல்கள்.
  இது ஊரைத்தான் ஞாபகப் படுத்துகிறது.
  அங்கு இவைகளில் சேர முயற்சித்தவை.
  அத்தனையும் விட்டு இங்கு வாழ்கிறோம்.
  மிக பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.