உபாசனா மகதி, தொழிற்நுட்பம், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக இதழ்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 19

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

நாம் தெருவில் நடந்து போகும்போது, அல்லது போக்குவரத்து நிறைந்த சாலைகளைக் கடக்கும் போது நமக்குப் பக்கத்தில் யாராவது பார்வையிழந்தவர்கள் இருந்தால் கைபிடித்து அழைத்துக் கொண்டு போவோம். அதற்கு மேல் என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நாம் யாரவது நம் எல்லையைத் தாண்டி சிந்தித்திருக்கிறோமா?

அப்படி சிந்தித்த ஒருவரைத்தான் நாம் இந்த வாரம் கண் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

‘நம்மில் நிறைய பேர் காலையில் எழுந்தவுடன் காபி கோப்பையும் ‘ஹிந்து’ வுமாக நம் நாளைத் துவங்குகிறோம். இதை நமக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய சொகுசு என்று நினைத்து சந்தோஷப் படுகிறோம், இல்லையா? அதேபோல பார்வையிழந்தவர்களுக்கும் இந்த சந்தோஷத்தைக் கொடுத்தால் என்ன என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?’

கேட்பவர் உபாசனா மகதி. யார் இவர்? பார்வை இழந்தவர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ப்ரெயில் (Lifestyle) பத்திரிகை ‘வொயிட் பிரின்ட்’ ஐ வடிவமைத்தவர், வெளிக் கொணர்ந்தவர். இதன் முதல் இதழ் இந்த வருடம் மே மாதத்தில் வெளி வந்தது.

இதழியல் படித்து ஒரு நிறுவனத்தில் பொதுத் துறை தொடர்பாளர் ஆக வேலை பார்த்து வந்தவருக்கு ஏதாவது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டதன் விளைவு தான் இந்த வொயிட் பிரின்ட். தான் படித்த படிப்பிற்கு சம்பந்தப்பட்ட தொழிலாக, அதே சமயம் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை செய்யவேண்டும் என்று எண்ணினார். அப்படி ஒரு துறையை தேட ஆரம்பித்தபோது இவர் மனதில் உருவானது தான் ‘வொயிட் பிரிண்ட்’ – பார்வை இழந்தவர்களுக்கான மாத இதழ்.

இந்த மாதிரி ஒரு பத்திரிக்கையை தொடங்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? நமது நாட்டில் பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியன். அதில் படிக்கத் தெரிந்தவர்கள் 56 லட்சம்பேர். இவர்களுக்கென்று பொழுதுபோக்காக அமைந்தவை ஒலி அமைவுகள் (audio). கணினி திரையில் தோன்றுவதை படிக்கும் மென்பொருள், அல்லது வானொலி.

எனது தேடலின் போது கிடைத்த இந்த விவரங்கள் மிகவும் யோசிக்க வைத்தது. இவர்களுக்காக ஏதாவது செய்தால் என்ன என்று தோன்றியது. நம்மைப்போலவே இவர்களையும் செய்தித்தாளுடன் நாளைத் துவங்க வைத்தால் என்ன என்று தோன்றியது. வேகமாக முன்னேறி வரும் இந்த நாட்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நம்மைப் போலத்தானே இவர்களும். இவர்களும் நம்மைப் போலவே இந்த உலகத்தைப் பார்க்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம், வேறு மொழியில் உலகத்தைப் புரிந்து கொள்ளுகிறார்கள். நமக்கிருக்கும் உற்சாகம், அர்பணிப்பு, சின்ன சின்ன விஷயங்களை அறிய விரும்பும் ஆர்வம் எல்லாமே இவர்களுக்கும் இருக்கிறது. இதைத்தவிர தாங்களாகவே படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இவர்களிடத்தில் நிறைய இருப்பதும் எனக்கு சாதகமாக இருந்தது.

White-Print_-Cover

ஓய்வு நேரத்தில் படிக்க என்று இவர்களுக்காக எந்த பத்திரிக்கையும் இல்லை. இவர்களுக்கென்றே ஒரு பத்திரிகை இருந்தால் இவர்களும் எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம், இல்லையா? இவர்களும் இந்த பத்திரிகையில் எழுதுவதன் மூலம் தங்களின் விருப்பங்களை எடுத்துச் சொல்லவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு தொழில் முனைவராக வேண்டும் என்ற ஆர்வமும் சேர்ந்து கொள்ள, எனது இந்த யோசனையை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். என் நண்பர்கள் ஆறு பேருடன், என் யோசனைக்கு வடிவம் கொடுக்க எனது வேலையை விட்டு விட்டு முழுக்க இதில் ஈடுபட்டேன். இந்த ‘வொயிட் பிரின்ட்’ என் சிந்தனையில் பிறந்தது என்று இப்போது மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன். மும்பையில் உள்ள தேசிய பார்வையிழந்தவர் சங்கத்துடன் இணைந்து இந்த பத்திரிக்கையை வெளியிடுகிறேன்.

உங்களுக்கு சவாலாக அமைந்த விஷயங்கள் என்னென்ன? ஆரம்பத்தில் நிறைய தடங்கல்களை சந்தித்தேன். முதலீடு பெரிய அளவில் தேவைபட்டது. 24 வயதே நிரம்பிய என்னை நம்பி யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. முதலில் இலவசமாகவே இந்த இதழை விநியோகிக்க நினைத்தோம். பார்வையிழந்தவர் ஒருவரிடம் இதைச் சொன்ன போது அவர் பட்டென்று சொன்னார்: ‘எங்களுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை. நாங்களும் உங்களைப் போலவே படிக்கிறோம். வேலை பார்க்கிறோம். உங்கள் புத்தகத்தை விலை கொடுத்து வாங்க எங்களால் முடியும்’.

64 பக்கங்கள் கொண்ட இந்த மாதப் பத்திரிக்கையின் விலை 30 ரூபாய். இதன் மூலம் வரும் வருவாய் எங்கள் பத்திரிக்கையின் உற்பத்தி செலவிற்குக் கூட காணாது. இதனால் எங்கள்  இரண்டாவது சவால் எங்கள் பத்திரிகைக்கு விளம்பரங்கள் வாங்குவது. வண்ண வண்ண படங்களோ, வரைகலைகளோ இந்த விளம்பரங்களில் இருக்க முடியாது; வெறும் வார்த்தைகளில் மட்டுமே தங்கள் பொருட்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்பதும் விளம்பரதாரர்கள் எங்கள் பத்திரிகையை விரும்பாததற்கு காரணங்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் இதற்கும் ஏதாவது வழி கண்டுபிடிக்கும் என்று நம்புகிறேன். மூன்றாவதாக இந்த பெயரை என் பத்திரிக்கைக்கு வைப்பதற்கு கேட்டு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டது. மூன்றாவது முறை தான் வெற்றி கிடைத்தது.

இந்தப் புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் வருகின்றன? எனது இந்தப் பத்திரிகை மற்ற பத்திரிகைகளைப் போலத்தான் இருக்கும். சாதாரண மனிதர்களை மையமாகக் கொண்ட கதைகள், ஒலிஅமைவுகள் பற்றிய விமரிசனங்கள், சுற்றுலா, உணவகங்கள், உணவு பற்றிய விஷயங்கள் ஆகியவற்றுடன், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பர்கா தத் எழுதும் அரசியல் பக்கமும் உண்டு. இவை தவிர உலகச் செய்திகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் பிரசுரமாகின்றன. வாசகர் பகுதியில், அவர்கள் விரும்பும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். பத்திரிகையில் வரும் விஷயங்களைப் பற்றியும் எழுதலாம்.

பார்வை இழந்தவர்களுக்கும், பார்வை உள்ளவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை என் பத்திரிகை மூலம் சொல்ல விரும்புகிறேன்.

பார்வையிழந்தவர்களுக்கு செய்தித்தாள்:

இந்த மாத இதழைத் தவிர ரிலையன்ஸ் நிறுவனத்தில் ‘ரிலையன்ஸ் திருஷ்டி’ என்ற ப்ரெயில் ஹிந்தி செய்தித்தாள் இருக்கிறது. இது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வெளி வருகிறது. இந்த செய்தித்தாள் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இந்த செய்தித்தாளை வெளியிடுபவர் ஸ்வாகத் தோரட் என்பவர். இவர் 2008 ஆம் ஆண்டு ஸ்பர்ஷ்தியான் என்ற மராத்தி ப்ரெயில் செய்தித்தாளையும் வெளியிட்டவர். 15 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 900 காப்பிகள் இந்த ‘ரிலையன்ஸ் திருஷ்டி’ அச்சிடப்படுகிறது. பார்வையிழந்தவர்களின் அமைப்புகளுக்கு இவை இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரதியும் சுமார் 80 பேர்களால் படிக்கப்படுகிறது. ‘இந்த வகையான செய்தித்தாள்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்தால், கூடிய சீக்கிரம் பிரெயில் முறை தினசரியும் வரலாம். ஊடக நிறுவனங்கள் இதைச் செய்ய முன்வரலாம். இல்லாவிடில், ஒரு நாள் நானே ஆரம்பிப்பேன்’ என்கிறார், ஸ்வாகத் தோரட்.

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

“பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக இதழ்கள்!” இல் 23 கருத்துகள் உள்ளன

 1. வொயிட் பிரின்ட். பத்திரிக்கைப் பற்றிய செய்திகளை விரிவாக அறிய தந்தமைக்கு நன்றி ரஞ்சனி.
  வாழ்த்துக்கள் உங்களுக்கு. நல்லவைகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு.

  //பார்வை இழந்தவர்களுக்கும், பார்வை உள்ளவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை என் பத்திரிகை மூலம் சொல்ல விரும்புகிறேன்.//
  அற்புதமானசெய்தி தாளை பார்வைஇழந்தவர்களுக்கு கொடுத்த உபாசனா மகதி.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 2. கண் கிடைத்ததுபோல செய்தித்தாளைப் படித்தவுடன் அவர்களுக்கு, கண்ணிழந்தவர்களுக்கு ஏற்படும் ஸந்தோஷத்தை கற்பனையில் பார்த்தால்
  இதற்கு நிகர் வேறெதுவுமில்லை என்று படுகிரது. உபாஸனா மஹதி.
  பேரைப்போலவே செய்கையும் போற்றதற்குரியதாக இருக்கிரது. வாழ்த்துக்கள். அன்புடன்

 3. மிக அருமையான பதிவு ரஞ்சனி வித்தியாசமாக யோசித்த உபாசனா மகதிக்கு வாழ்த்துக்கள் கண் பார்வையற்றவர்களும் நம்மைப்போல் தினமும் செய்திகளைப் படிக்க முடியும் என்பதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது பாராட்டுக்கள்

 4. மிக்க நன்றி…பார்வை இழந்தோர்க்கான பத்திரிகை…
  அதை(செய்தியை)பதிவில் வெளியிட்ட தாங்கள்…
  நல்லமனம் உடையவர்களும் இருக்கிறார்கள்.

 5. பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது அம்மா… உபாசனா மகதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்… நன்றிகள்… பகிர்ந்து கொண்ட தங்களுக்கும்…

 6. பார்வை இழந்தவர்கள் படிப்பதற்கு ஒரு பத்திரிக்கையை உருவாக்கிய உபாசனா மகதி அவர்களுக்கும், இதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂

 7. மகத்தான சேவை இது. கண்ணில்லாதவர்க்கு இதைவிட
  மகிழ்வு வேறென்ன இருக்க முடியும்…
  அருமையான தகவல். பகிந்துகொண்ட
  உங்களுக்கும் அன்பு நன்றியும் வாழ்த்துக்களும்!

 8. நம்மைப்பற்றி மட்டுமே நினைத்து,நம் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்துகொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில் கண்ணில்லாதவர்களுக்கு உதவ நினைத்து செயல்படுத்திய ‘உபாசனா மகதி’ போன்றவர்களும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.அவர்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க‌.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.