குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தையா? குரங்குக் குட்டியா?

செல்வ களஞ்சியமே – 39

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

என் உறவினர் ஒருவர் நன்றாக தையல் வேலை செய்வார். ஒருநாள் அவர் தைத்துக் கொண்டிருக்கும்போது அவரது பேரன் அருகில் வந்து, அவர் வைத்துக் கொண்டிருக்கும் நூல் கண்டுகளை எடுக்க ஆரம்பித்தான். இவர் உடனே ‘வேண்டாம் வேண்டாம் எடுக்காதே…!’ என்றிருக்கிறார்.
‘ஒண்ணே ஒண்ணு கொடு’
‘வேண்டாம் நீ வீடு முழுக்க நூலை இழுத்துண்டு போய் நூலை வேஸ்ட் பண்ணிடுவே’
அதற்கு அந்தக் குழந்தை, ‘இவ்வளவு நூல்கண்டு வைச்சிருக்கே, நீ ஷேர் பண்ணிக்க மாட்டியா?’ என்று கேட்டிருக்கிறது. வீட்டிற்கும் வரும் குழந்தைகளுடன் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை ஷேர் பண்ணிக்கச் சொல்லும் பாட்டி, தன் நூல்கண்டுகளை மட்டும் நம்முடன் ஷேர் பண்ணிக்க மாட்டேன் என்கிறாளே என்பது  குழந்தையின் (நியாயமான) கேள்வி.
இந்த உரையாடலிலிருந்து கற்க வேண்டிய பாடம்: நாம் செய்யாத ஒன்றை குழந்தைகளைச் செய்ய சொல்லக்கூடாது.
‘நான் தொலைக்காட்சி பார்க்கணும். நீ உள்ளே போய் படி’ என்று சொல்லும் பெற்றோர்கள் நிச்சயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் படிப்பு முக்கியமா? அல்லது பொருத்தமில்லாத நடிகர்களும், லாஜிக் இல்லாத கதைகளும் கொண்ட நீண்ட தொடர்கள் முக்கியமா?
ஓரளவிற்கு மேல் தொலைக்காட்சி வேண்டாம். அதேபோல DVD போட்டு சாதம் ஊட்டுவதும் தவறுதான். தமிழ் பாடல்கள் உள்ள டிவிடி – க்கள் கிடைக்கின்றனவா என்றும் தெரியவில்லை. ஆங்கில பாடல்கள் நம்மூருக்கு ஒத்து வராது. நாம் ‘மாமழை போற்றுதும்’ என்போம். மழைக்காகத் தவம் கிடப்போம். அவர்கள் ‘ரெயின் ரெயின் கோ அவே ((Rain Rain go away) என்பார்கள்.

அதேபோல இன்னொரு மோசமான பாட்டு:
Piggy on the railway picking up stones
Down came an engine and broke piggy’s legs
‘Oh!’ said the piggy, ‘its not fair’
‘Ah!’ said the engine driver ‘I don’t care!”

ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு நல்லவற்றை அறிமுகப்படுத்துங்கள். வண்ண வண்ண புத்தகங்கள் வாங்கி வந்து குழந்தையுடன் உட்கார்ந்து கொண்டு நீங்களும் படியுங்கள். தினமும் இதைச் செய்யுங்கள். நீங்கள் சொல்லித் தருவது குழந்தையின் மனதில் பசுமரத்தாணி போல பதியும்.

எதற்காகவும் குழந்தையை வற்புறுத்தாதீர்கள். அப்படிச் செய்வது குழந்தையின் மனதில் ஒரு வித வெறுப்பை உருவாக்கும்.

சின்ன வயதிலிருந்தே குப்பைகளை கீழே கண்ட இடத்தில் போடக்கூடாது என்பதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள். சாக்லேட் சுற்றிய காகிதத்திலிருந்து வாழைப்பழத் தோல் வரை குப்பைத்தொட்டியில் போட பழக்குங்கள். குழந்தையை கையைப் பிடித்துக் கொண்டு போய் குப்பை தொட்டியில் போட வேண்டியதை போட்டுவிட்டு வாருங்கள். சிலமுறைகள் இப்படிச் செய்தால் குழந்தை தானாகவே பழகிவிடும்.

ஒரு விஷயம்: குழந்தைக்குச் சொல்லிவிட்டு நீங்கள் செய்யாமல் இருக்கக்கூடாது. சிலசமயங்களில் நீங்கள் சொல்லிக் கொடுப்பதே உங்களுக்கு சங்கடத்தை விளைவிக்கக் கூடும். எல்லோர் முன்னிலையிலும் குழந்தை உங்களை கேள்வி கேட்கக் கூடும். அதனால் உஷார்!

குழந்தை நிறைய பாடல்கள் பாடுகிறாள். தொலைக்காட்சியைப் பார்த்து நடனம் ஆடுகிறாள். அதற்காக வீட்டிற்கு வருபவரிடம் எல்லாம் பண்ணி காண்பிக்கச் சொல்லாதீர்கள். அது என்ன குழந்தையா? குரங்குக் குட்டியா? இதில் இரண்டு வித அபாயங்கள் உண்டு.

முதலில் நீங்கள் சொல்லி குழந்தை செய்யவில்லை என்றால் உங்கள் மதிப்பு வெளியாரிடம் சரியும். இதனால் சில பெற்றோர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ‘இப்போ நீ செய்யலைன்னா நான் உன்னோட பேச மாட்டேன்; நீ கேட்ட விளையாட்டு சாமான் வாங்கித் தரமாட்டேன்’ என்றெல்லாம் பயமுறுத்துவார்கள். அதாவது Emotional Blackmail! பாவம் குழந்தை!

இரண்டாவதாக, குழந்தைக்கு உங்கள் மேல் கோபம், வெறுப்பு வளரும். வந்திருப்பவர்கள் குழந்தைக்கு அவ்வளவாக தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது அன்று குழந்தைக்கு ‘மூட்’ சரியில்லாமல் இருக்கலாம்.  சமீபத்தில் சென்னை போயிருந்தபோது உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். அவர்கள் வீட்டிற்கு அவர்கள் உறவினர் ஒரு தம்பதி வந்தார்கள். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தவுடன், என் உறவினர் அவர்களுடன் பேச ஆரம்பித்தார். அவரது பேத்தி அவர் (பாட்டி)  மடியில் வந்து உட்கார்ந்து கொண்டது. வந்தவர்கள் அந்தக் குழந்தையை அருகில் கூப்பிட்டார்கள்; ஊஹூம் போகவில்லை. வெளியில் போகலாம்; சாக்லேட் வாங்கித் தருகிறோம்; காரில் கூட்டிக்கொண்டு போகிறோம் என்று என்னென்னவோ சொன்னார்கள் வந்திருந்தவர்கள். எதற்கும் குழந்தை அசையவில்லை! பாட்டி மடியைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை. எனக்கு ரொம்பவும் வியப்பு. ஏன் இந்தக் குழந்தை இப்படிச் செய்கிறது என்று ரொம்பவும் யோசனையாக இருந்தது.

‘மாமா, மாமிக்கு காப்பி போடலாம் வா’ என்று குழந்தையின் பாட்டி சொல்ல அப்பவும் அந்த குழந்தை அசையவில்லை. தான் உட்கார்ந்த இடத்திலேயே உறுதியாக தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தது. வந்திருந்தவர்களுக்கும் ஆச்சரியம்தான். கடைசியில் நான் அவர்களுக்கு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தேன். இன்னும் வியப்பு என்ன தெரியுமா? அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன், இந்தக் குழந்தை எழுந்து விளையாட ஆரம்பித்துவிட்டது!

குழந்தைகளின் உள்ளுணர்வு ரொம்பவும் கூர்மையானது. அவர்களுக்கு சிலரைப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். குழந்தை என்று நாம் நினைத்தாலும் அதற்கென்று ஒரு விருப்பம், வெறுப்பு எல்லாம் உண்டு. அவற்றிக்கு நாம் கட்டாயம் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

இப்போது சொல்லப்போகும் நிகழ்ச்சியின் கதாநாயகி எனக்குத் தெரிந்த பெண். குழந்தைகளை ரொம்பவும் கண்டிப்புடன் வளர்ப்பவள்.  வெளியிடத்தில் எப்படி பழக வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பவள்.

ஒரு திருமணத்தில் சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்திருந்தாள் தனது குழந்தையுடன். பரிமாற ஆரம்பித்தார்கள். குழந்தை இலையில் கை வைக்கவே இல்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவர் ரொம்பவும் வியப்பாக, ‘ஏம்மா!, இந்த கறிவகைகள் உனக்குப் பிடிக்காதா? இந்தப் பக்கம் பாயசம் இருக்கிறது, பாரு, இனிப்பு உனக்குப் பிடிக்குமா? பாயசம் சாப்பிடு’ என்று சொன்னார். குழந்தை சொல்லிற்று: ‘ நெய் ஊற்றும் வரை சாப்பாட்டு இலையில் கை வைக்கக் கூடாது என்று எங்க அம்மா சொல்லியிருக்கா!’ பாவம் அந்த மனிதர்! குழந்தை இப்படிச் சொல்லும்போது அவராலும் சாப்பிட முடியவில்லை! குழந்தைகளிடம் இப்படித்தான் என்று சொல்லாதீர்கள். சிலசமயங்களில் நிலைமை வேறு மாதிரியும் இருக்கும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.

அடுத்த வாரம் பார்க்கலாம்!

“குழந்தையா? குரங்குக் குட்டியா?” இல் 18 கருத்துகள் உள்ளன

 1. அருமை அம்மா.. என் இரு குழந்தைகளும் பிறரிடம் பேசுவதற்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். முதல் குழந்தை ஒரு வயது இருக்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவள் வளர்ந்தவுடன் சரியானதால், இப்பொழுது இரண்டாவது குழந்தைக்கு வருந்துவது இல்லை.

  1. வாருங்கள் தியானா!
   குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். முதல் குழந்தையைப் பார்த்து இரண்டாவது குழந்தை நிறைய கற்றுக் கொள்ளும்.
   வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

 2. குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் பெற்றோரே காரணம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். குழந்தைகளின் பேச்சு சில சமயங்களில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தக் கூடும்.
  நண்பர் ஒருவரின் 5 வயதுப் பெண் குழந்தை கொஞ்சம் வயதுக்கு மீறி பேசுவாள். ஒரு முறை என்னைப் பார்த்து அந்தக் குழந்தை நீங்க குரங்கு மாதிரியே இருக்கீங்க என்றாள். நான் கண்டுகொள்ளாமல் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மீண்டும் அழைத்து.’அங்கிள், நீங்க குரங்கு மாதிரியே இருக்கீங்க ” என்றாள் சத்தமாக .அதைக் கேட்டுக கொண்டிருந்த நண்பரோ சிரித்துக் கொண்டிருந்தார். அதனால் பல சமயங்களில் குழந்தைகளிடம் பேசவே தயக்கம் வருவதுண்டு.

  1. வாருங்கள் முரளிதரன்!
   பல வீடுகளில் இதை செல்லம் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். வெளி ஆட்களை இந்த மாதிரி சொல்லும் குழந்தைகள் ஒருநாள் அம்மா அப்பாவையே பார்த்து இப்படிச் சொல்லும்போது புரியும் குழந்தையின் ‘அருமை!’
   நீங்களே ‘பட்’டென்று ஒன்று கொடுத்திருக்க வேண்டும் – குழந்தையின் கன்னத்தில்!
   இன்னொருவர் வந்து அடித்து திருத்தும் அளவிற்கு குழந்தையை ‘நன்றாக’ வளர்த்திருப்பது புரிந்திருக்கும் அந்தப் பெற்றோர்களுக்கு.
   எங்கள் உறவினரின் இரண்டு வயதுக் குழந்தை எல்லோரையும் ‘இடியட்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து சொல்ல, அந்த அப்பாவிற்கு கோவம் வந்தது பாருங்கள், குழந்தையின் கன்னம் பழுத்துவிட்டது! அன்றிலிருந்து அந்தக் குழந்தை அந்த வார்த்தையை சொல்வதை நிறுத்திவிட்டது.
   முதலில் அப்பா அம்மாக்கள் கற்க வேண்டும்.
   வருகைக்கும், உங்கள் கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 3. குழந்தைகளுக்கு வெளியில் எங்காவது போகும் போது, இப்படியிரு, அப்படியிரு என்று நாம் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று நினைக்க ஸமயத்தில் நம் காலை வாரிவிட்டு விடுவார்கள்.
  ஸரியாகச் சொன்னீர்கள்.
  குழந்தையா,குரங்குக் குட்டியா? அசத்தலான தலைப்பு.
  சாப்பாட்டுப் பந்தி உதாரணம் இருக்கே, அது பொதுவா பெரியவர்களே மீற ஆரம்பித்து விடுவார்கள். குழந்தை சொன்னபோது அவருக்குச் சங்கடமேதவிர விதி முறை ஸரிதான்.
  பொருமை இந்த இடத்தில் இடம் பெறுகிறது. திரும்ப ஒரு வியஞ்ஜனம் வருதற்குள் இலை காலி. இதுவும் ரஸிக்கும்படியாகத்தானிருக்கும்.
  இப்போதெல்லாம் சின்னச் சின்ன கப்புகளில் எல்லாவற்றையும் வைத்துவிடுகிறார்கள்.
  பருப்பு சாதத்தில் மோர்க்குழம்பிற்காக ஒரு அணையே கட்டிவிடும் காலமெல்லம் இருந்தது. இந்தக் குழந்தைகளால் பெரியவர்களும் சில விஶயங்கள் கற்றுக்கொள்கிரார்கள்.
  குழந்தைகளுக்கு ஜே. அன்புடன்

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   குழந்தைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லையா?
   //பருப்பு சாதத்தில் அணை கட்டும் // ரொம்பவும் ரசித்தேன்.

 4. சிலர் கூச்சப்படும் பிள்ளைகளைப்போட்டு பாடாய் படுத்துவார்கள்.அதன் இயல்புக்கு விட்டுவிட வேண்டும்.வெளியாட்கள் முன்னிலையில் குழந்தையை விமர்சனம் பண்ணுவதையும் விடுதல் நலம்.

  இங்குள்ள பப்ளிக் சானலில் குழந்தைகளுக்கான கதைகள் ஒரு சிறு (நல்ல) கருத்துடன் நன்றாகவே இருக்கும்.

  அவர்களும் சின்னஞ்சிறு ‘மனிதர்கள்’தானே.நம்மை விடவும் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.இவர்களை வழிநடத்துவது கஷ்டம்தான்.எல்லா விஷயத்திலும் அடிபடுவது பாவம் பெற்றோர்தான்.தலைப்பு முதற்கொண்டு பதிவு முழுவதுமே அருமையா இருக்கு.தொடருங்கள்…

  1. வாருங்கள் சித்ரா!
   குழந்தைகளை வழி நடத்துவது கஷ்டம் தான். ஆனாலும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம், இல்லையா?
   மேலே திரு முரளிதரன் அவர்களின் அனுபவம் படித்தீர்களா? இந்த நிலையில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? இப்படியெல்லாம் அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லவேண்டும் இல்லையா?
   கொஞ்சல், கண்டிப்பு இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து இருக்க வேண்டும்.
   வருகைக்கும், பெற்றோர் சார்பில் கருத்துரை கொடுத்ததற்கும் நன்றி!

 5. குழந்தையை குழந்தையாக பார்க்க வேண்டும் நாம் நினைத்த போது ஆடவைக்கும் குரங்கு குட்டியாக்க கூடாது . அருமையான தலைப்பு.
  சொல்லிய செய்திகள் யாவும் பயனுள்ளவை.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

 6. மிகவும் நல்ல ஆலோசனைகள்! என் குழந்தைக்கு மிகவும் பயன்படும்! நாங்கள் குழந்தையை நல்ல தமிழில் பேச பழக்குகிறோம்! என் பெண்ணும் மிகவும் நன்றாக தமிழ் பேசுகிறாள்! மிக்க நன்றி அம்மா!

  1. வாருங்கள் சுரேஷ்!
   வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும், உங்கள் குழந்தைகளுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.