கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

நிறமறியா நோய்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 12

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

ஒரு முறை என் உறவினருடன் இங்குள்ள ஆயுர்வேத கண் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு சோதனையாக செய்துகொண்டு வந்த மருத்துவர் ஒரு அட்டையை அவரிடம் கொடுத்தார். அதில் பல நிறங்கள் கொண்ட ஒரு வட்டம் இருந்தது. ஒவ்வொரு நிறமாக பெயர் சொல்லச் சொன்னார் மருத்துவர். ரொம்பவும் யோசித்து யோசித்து சொன்னார். சில நிறங்களை அவரால் சரியாக சொல்லவும் முடியவில்லை. அதுவும் சிவப்பு, பச்சை ஆகியவற்றின் வேறு வேறு நிற மாற்றங்களை சொல்ல தெரியவில்லை. எனக்கு ரொம்பவும் வியப்பு. ரொம்பவும் தெளிவாக நிறங்கள் தெரிகின்றனவே என்று.
பெண்கள் நிறங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச்  சொல்வதில் ரொம்பவும் சமர்த்து. வெளிர் பச்சை, கறுத்த பச்சை, ஆலிவ் பச்சை, மருதாணி பச்சை, கிளி பச்சை, ராமர் பச்சை – (இதிலேயே நீலம் அதிகமிருந்தால் அது ராமர் நீலம்!) மயில் கழுத்துப் பச்சை/ நீலம், ஆர்மி பச்சை என்பதெல்லாம் பெண்களுக்கே உண்டான நிறங்களை பிரித்துச் சொல்லும் திறமையை காண்பிக்கும் சொற்கள்.
ஒரு சில நிறங்களைப் பிரித்துப் அறிய முடியாததால் இக்குறை இருப்பவர்களை நிறக்குருடு என்று சொல்வது அத்தனை சரியில்லை. இதற்காக இப்போது பயன்படுத்தப்படும் ஒரு சொல் Color Visiion Deficiency எனப்படும் CVD. நிறக்குருடு என்றால் இவர்களால் நிறங்களையே பார்க்க முடியாது என்ற  பொருளைக் கொடுக்கும். சில சில நிறங்களின் பல்வேறு வகைகளை இனம் பிரித்துக் காண முடியாது என்பதுதான் இவர்களின் குறைபாடு. இதனால் இவர்களின் பார்வையில் எந்தக் குறைபாடும் இருக்காது. இந்த CVD பரம்பரையாக வருவது. 99% நபர்களுக்கு சிவப்பு, பச்சை நிறங்களின் வேறு வேறு வகைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கும். அதேபோல நீலம், மஞ்சள் கலர்களைக் கண்டறிவதிலும் சிலருக்கு சிரமம் இருக்கும். ஆனால் இந்த வகைக் குறைபாடு மிக மிக அரிது. இந்த வகைக் குறைபாடுகளைக் கண்டறிய சோதனைகள் எதுவுமில்லை.
இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் என்ன?
நாம் இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நம் கண்களின் உள்ளே சில இழை போன்ற அமைப்புகளும் சில கூம்பு வடிவ அமைப்புகளும் இருக்கின்றன என்று பார்த்தோம். இவைகளை photoreceptor (ஒளிஏற்பி) என்கிறோம். விழித்திரையில் சில கூம்பு வடிவ ஒளிஏற்பி இல்லாமல் இருப்பதால் இந்த CVD குறைபாடு தோன்றுகிறது.
எந்தெந்த நிறங்கள் இவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கும்?

இவர்களைப் பொறுத்தவரை    

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை இவையெல்லாம் ஒரே நிறத்தில் வேறு வேறு பெயர்கள்.   

அதே போல வயலட், லாவெண்டர், பர்பிள், மற்றும் நீலம்.   

பிங்க் மற்றும் க்ரே, ஆரஞ்சு மற்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை, பச்சை மற்றும் பிரவுன், பச்சை மற்றும் க்ரே, பச்சை மற்றும் மஞ்சள், மரூன் மற்றும் பிரவுன், பேஜ் (beige) மற்றும் பச்சை. வெளிர் கலர்களை இவர்கள் அதிகம் ‘கண்டு’ கொள்வதில்லை.   

நிறத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களால் பிரவுன் காலுறை, பச்சைக் காலுறைகளை அறியவோ, போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு மற்றும் ஆம்பர் நிறங்களை அறியவோ முடியாது.

RP 03_19

இந்தியாவில் சுமார் 18 மில்லியன் மக்கள் இந்தக் குறைபாடு உள்ளவர்களாகவும், சீனாவில் 2௦ மில்லியன் பேர்களும், ஐரோப்பா, கனடாவில் 39 மில்லியன் பேர்களும் இக்குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களால் சில துறைகளில் வேலை செய்வது கடினம். உடை அலங்காரத்துறையில் நிறங்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன வண்டியோட்டிகள், விமான ஓட்டிகள், மாலுமிகள் போன்றவர்களுக்கு இக்குறைபாடு இருப்பது கூடாது.

இது ஒரு பரம்பரைக் குறைபாடு என்றாலும் காடராட், க்ளுகோமா, சர்க்கரை நோய், வயதாவதால் வரும் கண் கோளாறுகளுக்கு ஒரு தூண்டுதலாக இது அமையக் கூடும். சில மருந்துகள் சாப்பிடுவதாலும் இது வரக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பத்தில் ஒரு ஆணுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. பெண்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு. அதனாலேயே அத்தனை நிறங்களை நாம் அறிய முடிகிறது. வயதாக ஆக, சிலருக்கு கண் பார்வையில் மாறுதல் ஏற்படுவதால் சில சமயம் நிறங்களை அறிவது கடினமாக இருக்கும்.

இந்தக் குறைபாட்டின் அறிகுறிகள்:
 நிறங்களையும் அதன் ‘பளிச்’ தன்மையையும் பார்க்க சிரமம்.
 ஒரே நிறத்தின் பல்வேறு வகைகளை (வெளிர், கரும்) வித்தியாசம் கண்டுபிடிப்பதில் சிரமம்.
 சிலருக்கு கறுப்பு, வெள்ளை, க்ரே நிறங்கள் மட்டுமே தெரியும்.
 கண் அசைவுகள் அதிகமாகவும், பக்கத்திற்குப் பக்கம் பார்ப்பது போலவும் இருக்கும்.
 இந்த அறிகுறிகள் ரொம்பவும் அதிகமாக இருக்காததால் பலருக்கு இந்தக் குறைப்பாடு இருப்பதே தெரிய வருவதில்லை.
 குழந்தைகள் சரியாக நிறங்களைச் சொல்லத் தடுமாறினால் அல்லது பார்வை வேறு மாதிரி இருந்தால் பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியும்.

இன்னொரு வகைக் குறைபாடு Unilateral dichromacy என்று அழைக்கப்படும். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு கண் சாதாரணமாகவும், ஒரு கண்ணில் மட்டும் CVD யும் இருக்கும். இந்தக் குறைபாடு இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென்றே சில பரிசோதனைகள் இருக்கின்றன. நான் மேலே முதல் பாராவில் குறிப்பிட்டது போல மருத்துவர்கள் செய்வார்கள். இன்னொரு முறையில். பல நிறங்களின் கலவையில் சில அமைப்புகள் (pattern) – வட்டம், சதுரம் போன்றவை இருக்கும். அதை சரியாகக் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்பார்கள். சில எண்கள் இருக்கும். அவற்றை சரியாக கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் விடைகளை வைத்து உங்களுக்கு எந்த நிறத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் என்று மருத்துவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இன்னொருவகையான சோதனையில் ஒரு நிறத்தில் – வெளிர் நிறத்திலிருந்து ஆரம்பித்து கரும் நிறம் வரை – இருக்கும் நிறத் துண்டுகளைக் கொடுத்து வரிசைப் படுத்த சொல்வார்கள். இந்தக் குறைபாடு இருப்பவர்களால் இந்த நிற வரிசையை அமைப்பது கஷ்டமாக இருக்கும்.

சின்னக் குழந்தைகளுக்கு மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுக்குள் சில பரிசோதனைகளை செய்வதன் மூலம் இக்குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளிக்குப் போகும் முன் இந்த கண் பரிசோதனைகளை மேற்கொள்ளுவது அவசியம்.

தொடர்ந்து பேசலாம்.

<http://www.archimedes-lab.org/colorblindnesstest.html#visione>

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

 

“நிறமறியா நோய்!” இல் 14 கருத்துகள் உள்ளன

 1. எனக்கு இந்தக் குறைபாடு உண்டு என்று தெரிகிறது. கருப்பு, வெள்ளை, நீலம் பச்சை என்றெல்லாம் சொல்லி விடுவேன். இந்த ஆலிவ், மஜந்தா, இலைப்பச்சை, கிளிப்பச்சை என்றெல்லாம் கரெக்டாகச் சொல்ல முடியாது! சிலசமயம் எதையாவது குறிப்பிட்டு (‘அந்த டிரஸ் என்ன கலர்?’) என்று கேட்போருக்கு ‘மஞ்சள் மாதிரி, பச்சை மாதிரி, ஆரஞ்ச் கலந்தோ..?’ என்று எல்லாம் குழப்பியிருக்கிறேன்!

  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   இந்தக் கட்டுரையின் கடைசியில் ஒரு இணைப்பு இருக்கிறது, பாருங்கள். அதில் உங்கள் பார்வையை சோதித்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சுவாரஸ்யாமாக இருக்கிறது.
   நன்றி ஸ்ரீராம்!

   இந்த தளத்திற்காக பிரத்யேகமாக நான் எழுதும் கட்டுரை இது. அதனால் இதை முழுவதுமாக என் தளத்தில் வெளியிட முடியாது. ஆனால் நான் இப்படி ஒரு கட்டுரைத் தொடர் எழுதுகிறேன் என்று என் வலைத்தளத்திற்கு வருபவர்களுக்குத் தெரிய வேண்டுமே. அதனால் அங்கு கொஞ்சம் போட்டுவிட்டு, மீதியை இங்கே படிக்கச் சொல்லுகிறேன்.
   இங்கு பின்னூட்டம் போட்டால் போதும். சந்தேகம் தீர்ந்ததா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.