அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை சாப்பிட வைக்கும் சூட்சுமம்!

செல்வ களஞ்சியமே – 33

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பிக்கும்போது மேலே கீழே போட்டுக் கொள்ளும். சில அம்மாக்கள் இதெல்லாம் யார் சுத்தம் செய்வது என்று அவர்களாகவே ஊட்டி விட்டு பழக்கப்படுத்தி விடுவார்கள். குழந்தை தன் கையால் எடுத்து சாப்பிடுவது தான் நல்ல பழக்கம். குழந்தை கொஞ்சம் வளர்ந்தவுடன் கீழே சிந்தாமல் சாப்பிடக் கற்றுக் கொடுக்கலாம். அந்தக் காலத்தில் குழந்தைககென்றே பொரி வாங்கி வைத்திருப்பார்கள். தரையிலேயே போட்டு விடுவார்கள். தவழ்ந்து வரும் குழந்தை இதையெல்லாம் பொறுக்கித் தின்னும். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை. ஆனால் சிறிது சாதத்தை அல்லது இட்லியை உதிர்த்து ஒரு தட்டில் போட்டுக் கொடுக்கலாம். அப்பளம் சுட்டது அல்லது பொரித்தது இரண்டுமே வேண்டாம். சாதம், இட்லி, பொரி போல அப்பளம் குழந்தையின் வாயில் கரையாது. அதனால் தொண்டையில் போய் மாட்டிக் கொள்ளும்.

இன்னோரு விஷயம்: சில குழந்தைகள் வெகு விரைவில் அவர்களாகவே சாப்பிடக் கற்றுக் கொண்டுவிடுவார்கள். சில குழந்தைகள் பல மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். தாய்மார்கள் பொறுமை காக்க வேண்டும்.

குழந்தைக்கு திட ஆகாரம் காலை ஒருவேளை நன்றாகப் பழகிய பின் சாயங்காலம் இன்னொரு வேளை கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் சிறிய அளவில் ஆரம்பியுங்கள். அது குழந்தைக்கு நன்றாகப் பழகியபின் மாலை இன்னொரு முறை கொடுக்கப் பழக்கலாம்.

ஒரு வயதுவரை குழந்தைக்கு 2 அல்லது 2 ½ மணிக்கு ஒரு தரம் ஆகாரம் கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேல் அதை மெதுவாக 3 மணி நேரம் என்று பழக்கப் படுத்திவிடுங்கள். இதனால் உங்களுக்கும் கொஞ்சம் நடுவில் மூச்சு விட்டுக் கொள்ள நேரம் கிடைக்கும். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் சாப்பிடும் அளவும் குறையும். அதற்காக குறைந்த இடைவெளியில் உணவு கொடுக்க முயற்சிக்காதீர்கள். குழைந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைக்காதீர்கள்.

என் முதல் குழந்தை வெகு சமர்த்தாக வளர்ந்தாள். டாக்டர் ஸ்பாக் சொல்லியிருப்பது போலவே அவளை வளர்த்தேன். ஒரு வயதுக்கு மேல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆகாரம் என்று பழக்கப்படுத்தினேன். காலை 6 மணிக்கு பால். காலை 9 மணிக்கு திட உணவு. மதியம் 12 மணிக்கு பால். மூன்று மணிக்கு ஏதாவது பழம் கொடுப்பேன். அரை வாழைப்பழம் இல்லை பழ ஜூஸ். 6 மணிக்கு வீட்டில் செய்யும் சிற்றுண்டி இட்லி, தோசை என்று. தயிர் தொட்டுக் கொடுத்தால் சமத்தாக சாப்பிட்டு விடுவாள். 9  மணிக்கு மறுபடி பால். அதாவது அடுத்தடுத்து திட உணவு இல்லாமல் பார்த்துக் கொள்வேன். சீரியலுடன் சிறிது வாழைப்பழம் பிசைந்து கொடுப்பேன். அதேபோல எங்காவது வெளியில் போக வேண்டுமென்றால் வீட்டிலேயே அவளுக்கு ஆகாரம் கொடுத்து, தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துப் போவேன். அதிகமாக பிஸ்கட், சாக்கலேட் கொடுக்காமலே வளர்த்தேன். இரண்டு வயதுக்கு மேல் நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை ஆகாரம் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினேன்.

DSC_4822

என்னுடைய இந்த சாமார்த்தியம் என் பிள்ளையிடம் பலிக்கவே இல்லை. அவனுக்கு திட ஆகாரம் ஆரம்பிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பால் கொடுத்தால் சாப்பிடும் குழந்தை திட ஆகாரத்தை அறவே உண்ண மறுத்தது. எல்லா வேளையும் பால் கொடுத்தால் சாப்பிடுவான். அவனுக்குத் தெரியாமல் சீரியலை பாலுடன் கலந்து பாட்டிலில் போட்டுக் கொடுப்பேன். இரண்டு நாட்கள் அவ்வளவுதான் பிறகு சாப்பிட மாட்டான். சாதமே கொடுத்துப்பாருங்கள் என்று மருத்துவர் கூற, சாதம் கொடுக்க ஆரம்பித்தேன். சாதத்தை மையாகப் பிசைந்து பருப்பு போட்டு, நெய் விட்டு அதில் கொஞ்சம் ரசம் ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் நிறைய ஊட்டி விட்டுவிட்டால் ‘உவ்வே’ தான். என் பொறுமையை அப்படி சோதிப்பான். இப்போது நான் ரொம்பவும் பொறுமையாக என் பேரன்களைக் கையாளுவதற்கு முழு பெருமையும் என் பிள்ளையையே சேரும்!

அப்போது நாங்கள் சென்னை அண்ணாநகரில் இருந்தோம். அந்தக் காலனிக்கு அன்பு காலனி என்று பெயர். அவனுக்கென்று ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தோம். எப்பவும் சைக்கிளில்தான் உட்கார்ந்திருப்பான். அந்தக் காலனி முழுக்க சைக்கிளில் சுற்றிச்சுற்றி வருவான். நானும் பின்னாலேயே போவேன். இன்றைக்கும் எனது அண்ணாநகர் தோழிகள் உன் பிள்ளை சரியாகச் சாப்பிடுகிறானா என்று கேட்கும் அளவுக்கு அவன் சாப்பிடப்படுத்தி பிரபலம் அடைந்தான்.

எனது உறவுக்காரப் பெண் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். இரண்டு வயதுக் குழந்தை அவளுக்கு. எங்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து குழந்தைக்கு தான் கொண்டு வந்திருந்த ஆகாரத்தை ஊட்டிக் கொண்டே இருந்தாள். ‘சரியாவே சாப்பிட மாட்டேன்னு ரொம்ப படுத்தல்’ என்றாள். குழந்தை மறுக்க மறுக்க அவனது கவனத்தை திசை திருப்பி ஆகாரத்தை ஊட்டினாள். இரண்டு வாய் சாப்பிட்டக் குழந்தை ‘லொடக்’ என்று எல்லாவற்றையும் வாயிலெடுத்தது. அன்று என் பிள்ளையின் கல்யாண நாள். அதனால் வந்திருந்த உறவுகாரர்களுடன்  ஹோட்டேலுக்குப் போ’னோம். இந்தப் பெண் அங்கு போனதும் மறுபடி குழந்தைக்கு ரொட்டியை ஊட்ட ஆரம்பித்தாள். ‘இப்போ தானே குழந்தை வாயிலெடுத்தான். அதற்குள் மறுபடி ஆகாரம் கொடுக்காதே’ என்றேன். அந்தப்பெண் ‘இல்லை மாமி, எல்லாவற்றையும் வாயிலெடுத்து விட்டான். வயிற்றில் எதுவும் இல்லை’ என்றாள். ‘நீ அம்மா இல்லையா அதனால் உனக்கு அப்படித்தான் தோன்றும். கொஞ்ச நேரம் இடைவெளி விடு. குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் கொடுக்காதே’ என்றேன். ஆனால் அவளுக்கு ‘குழந்தைக்குக் கொடுக்காமல் தான் மட்டும் எப்படி சாப்பிடுவது’ என்று குற்ற உணர்ச்சி! கொஞ்சம் சாப்பிட்ட குழந்தை மறுபடியும் எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிட்டது.

நிறைய இளம் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரி செய்வதால் குழந்தைகளுக்கு ஆகாரம் என்றாலே வெறுப்பு வந்துவிடுகிறது. எப்போதும் சாப்பாடு பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பல இளம் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன். சாப்பாட்டு நேரம் என்பதை இனிமையாக்குங்கள். தயவு செய்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு கொடுக்காதீர்கள்.

குழந்தையுடன் பேசுங்கள். ‘இன்னிக்கு பாப்பாவுக்கு அம்மா என்ன பண்ணியிருக்கேன் பாரு. கலர்புல் மம்மு. பப்பு போட்டு, மம்மு போட்டு நெய் ஊற்றி கொண்டு வந்திருக்கேன். மம்மு என்ன கலர்? வெள்ளை. பப்பு மஞ்சள் கலர். நெய் கலரே இல்லை. இந்த வெள்ளை மம்முல மஞ்சள் பப்பு போட்டு நெய் போட்டுக் கலந்தா……நெய் பாரு என்ன வாசனை! பாப்பாவுக்கு கொஞ்சம் நெய் கொடுக்கலாமா? (கொஞ்சம் நெய்யை குழந்தையின் வாயில் தடவுங்கள்) நன்னா இருக்கா? இப்போ மம்மு சாப்பிடலாமா? ஒரு வாய் பாப்பாவுக்கு. இன்னொரு வாய் காக்காவுக்கு. இன்னொரு வாய் குருவிக்கு….’ ஆனால் நீங்கள் கொடுக்கப் போவது குழந்தைக்குத்தான். எல்லாப் பறவைகளையும் கூப்பிடுங்கள். பாட்டு பாடுங்கள். பாட்டு என்றால் ரொம்பவும் அழகான ஸ்வரத்துடன், தாளத்துடன் இல்லை. உங்களுக்குத் தெரிந்த இல்லையென்றால் நீங்களே கற்பனை செய்து பாடுங்கள்.

பாட வரவில்லையா? கதை சொல்லுங்கள். குழந்தையை மையப்படுத்தி கதையை அமையுங்கள். உங்கள் கதை எல்லாவற்றிலும் உங்கள் குழந்தைதான் நாயகி அல்லது நாயகன். வண்ண வண்ணப் புத்தகங்கள் காண்பியுங்கள்.

ஆக மொத்தத்தில் குழந்தை ஆசை ஆசையாக நீங்கள் கொடுக்கும் உணவை சாப்பிட வர வேண்டும். எப்படி இதை சாதிக்கப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில்!

அடுத்த வாரம் பார்க்கலாம்.

செல்வ களஞ்சியமே ஒவ்வொரு வெள்ளியன்றும் வெளியாகும் குழந்தை வளர்ப்பு பற்றிய தொடர்.

“குழந்தைகளை சாப்பிட வைக்கும் சூட்சுமம்!” இல் 17 கருத்துகள் உள்ளன

 1. எனக்கு முதலில் பெண் குழந்தை. சாப்பிட மிகவும் படுத்தினாள், மகன் சமத்து.
  பேத்திக்கு கதை சொல்லி , பாட்டு பாடி, விளையாட்டுக் காட்டி கொடுத்து இருக்கிறேன் உங்களைப்போல். பருப்பு சாதத்தை அழகாய் சின்ன சின்னதாய் உருட்டி வைத்து இந்த உருண்டை காக்காவிற்கு, இது குருவிக்கு, இது புறாவுக்கு, இது கிளிக்கு என்று சொல்லி நான் கண்ணை மூடிப்பேனாம் காக்கா வந்து கொத்திக்கிட்டு போகுமாம் என்றால் உருண்டையை எடுத்து வாயில் போட்டு விட்டு ஆச்சி காக்கா கொத்தி போய் விட்டது, கண்ணை திறந்து பார் என்று விழுந்து விழுந்து சிரிப்பாள் பேத்தி. பேரனிடம் ஏமாற்றிக் கொடுப்பது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கிறது. வேண்டாம் என்று சொல்வதற்கு அம்மாதான் கொடுக்க வேண்டும் என்பான், அம்மா கொடுத்தால் ஆச்சி கொடுக்க வேண்டும் என்பான் தப்பிக்க என்ன வழி என்று மிகவும் தந்திரம் செய்வான்.
  நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பொறுமை வேண்டும்.
  மிக நன்றாக இருக்கிரது பதிவு வாழ்த்துக்கள்.

  1. வாருங்கள் கோமதி!
   என் மகனை சாப்பிட வைக்க நான் என்னென்னவோ செய்திருக்கிறேன். ஒவ்வொன்றாக சொல்லுகிறேன். ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

   என்னைபோலவே நீங்களும் பல சாகசங்கள் செய்திருக்கிறீர்கள் என்று உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிந்து கொண்டேன். நம் குழந்தைகள் தான் நமக்குப் பொறுமையை கற்றுத் தருகிறார்கள், இல்லையா?

   வருகைக்கும், உங்கள் பேரன், பேத்தி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 2. வணக்கம்
  அம்மா
  யாவருக்கும் பயன்னுள்ளவாறு நல்ல கருத்தை திறமையான விளக்கத்துடன் பதிவு செய்தமைக்கு எனது வாழ்த்துக்கள் அம்மா படம் மிகஅருமை அதுவும் எனக்கு பிடித்த நடிகனின் படம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாருங்கள் ரூபன்!
   தொடர் வருகைக்கும், சின்ன சின்ன விஷயங்களை கவனித்துப் பின்னூட்டம் கொடுப்பதற்கும் நன்றி!
   படங்கள் போடுவது நான்குபெண்கள் தளம். உங்கள் வாழ்த்து அவர்களை சேரட்டும்!

 3. சிறிய வயதில் எந்த பிரச்சனையுமின்றி சாப்பிட்டவர்கள் வயதாகத்தான் இங்கே அத்தனை படுத்தல்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

  உங்களுக்கு டேஸ்டா சமைக்கத்தெரியல என்று தொடங்கி இதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியாதா? என்பது வரைக்கும்.

  1. வாருங்கள் ஜோதிஜி!
   நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. அதுவும் பள்ளிக்குப் போகும் குழந்தைகள் ரொம்பவும் சாப்பிடப்படுத்துகிறார்கள். என் தோழி இன்னிக்கு எவ்வளவு ருசியா ஒரு டிபன் கொண்டுவந்தா தெரியுமா? என்பார்கள். நாம் கொடுத்தனுப்பும் சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, நம் குழந்தை ஒன்றும் சாப்பிடாமல் வரும்! எல்லார் வீட்டிலும் நடப்பதுதான் இது!
   இதுவும் கடந்து போகும்!
   வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 4. என் மகன்கள் பிரச்னை செய்யாமல் சாப்பிட்டார்கள். தேவை இல்லாமல் ஊட்டி விட்டெல்லாம் பழக்கவில்லை. என் சகோதரி குழந்தைகளை (இரண்டுமே பெண் குழந்தைகள்) நானும் என் மனைவியுமே அடிக்கடி பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு இருந்தது. நீங்கள் சொல்லும் ‘எது கொடுத்தாலும் வாந்தி’ கேஸ். எவ்வளவு நேரம் ஆனாலும் பசி என்று அழமாட்டார்கள்! இன்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது.

  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   உங்கள் சகோதரி குழந்தைகள் போலத்தான் என் பிள்ளையும். பசி என்று அவன் சொன்னதே இல்லை. அவனுக்காக ஆனை தோசை, பூனை தோசை எல்லாம் செய்திருக்கிறேன்!

   வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 5. என் பெண் மிகவும் படுத்தல் கேஸ். ஆனால் என் பையன் ரொம்பவும் சமர்த்தாக சாப்பிடுவான். பெண்ணிற்காக இரண்டாவது மாடியிலிருந்து தரை தளத்திற்கு வந்துபிறகு ஏறி(லிப்ட் எல்லாம் அப்போது கிடையாது)……இப்போது நினைத்தாலே மூச்சு வாங்குகிறது.

  உங்கள்; பதிவு அழகாய் தீர்வு சொல்கிறது குழந்தையின் இந்தப் பிரச்சினைக்கு.(தாய்மார்களின் தலையாயப் பிரச்சினயும் இது தானே!)

  1. வாருங்கள் ராஜி!
   என் பிள்ளையின் கதையும், உங்கள் பெண்ணின் கதையும் ஒன்றாக இருக்கிறதே! என் பிள்ளை அந்தக் காலனி முழுக்க சைக்கிளில் பறப்பான். நான் அவன் பின்னால் ஓடிக் கொண்டிருப்பேன்! இத்தனை சைக்கிள் ஓட்டுகிறானே, பசிக்காதோ என்றிருக்கும்.

   வருகைக்கும் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 6. மிக அருமையான அழகான ஆலோசனைகள்! என் பெண் குழந்தை ஜனனியும் சரிவர திடஆகாரம் உண்பது கிடையாது. உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயன் அளிக்கும் என்று நம்புகிறேன்! மிக்க நன்றி!

  1. வாருங்கள் சுரேஷ்!
   ஜனனி என்று மிக அழகிய பெயர் வைத்திருக்கிறீர்கள் குழந்தைக்கு. முயற்சி செய்து பாருங்கள். உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.