நோய்நாடி நோய்முதல் நாடி – 11

ரஞ்சனி நாராயணன்
மனிதக் கண்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போலவே காமிராவும் வேலை செய்கிறது. நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் (ஆகிஸிபிடல் கார்டெக்ஸ் பகுதி) செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது. பொருளை அறிவதோடு மட்டுமல்ல; அது அசைகிறதா? சின்னதா? பெரியதா? நாலு கால்களா, இரண்டு கால்களா, என்று சகலத்தையும் நமது கண்கள் மூலம் நமது மூளை அறிந்து இந்த விளக்கங்களையும் அந்தப் பொருளின் வடிவத்துடன் ஒரு இடத்தில் சேர்த்து வைக்கிறது. அதே பொருளை மறுபடி பார்க்கும்போது – அட! இது எதிர் வீட்டு நாய்! – என்று நம் மூளை சொல்லுகிறது. நமது பொது அறிவுத் திறன் 80% நமது கண்களின் மூலமே வளர்கிறது.
நமது கண்களுக்கும் காமிராவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள் வேற்றுமைகள் இரண்டுமே நம்மை அசத்தும்.
நமது கண்கள், காமிரா இரண்டிலும் லென்ஸ் இருக்கிறது. இரண்டு லென்ஸ்களுமே ஒரே மாதிரியான குவி லென்ஸ். பூதக் கண்ணாடியில் இருக்கும் ஒருங்கிணைப்பு லென்ஸ் போன்ற அமைப்பு கொண்டது.
நம் கண்ணில் இருக்கும் லென்ஸின் முன்னாலும் பின்னாலும் திரவம் நிரம்பிய இரு பைகள் போன்ற அமைப்பு இருக்கின்றன. முன் பகுதியில் இருக்கும் திரவம் தண்ணீர் போலவும், பின் பகுதியில் இருக்கும் திரவம் முட்டையின் வெள்ளைகரு போலவும் இருக்கும். நாம் பார்க்கும் பொருளின் உருவம் இந்த இரண்டு திரவப் பகுதிகளையும் தாண்டி நடுவிலிருக்கும் லென்ஸையும் தாண்டி ரெட்டினாவில் பதிகிறது.இந்த உருவமே மூளைக்கும் அனுப்பப்படுகிறது.
காமிராவில் இருக்கும் மெல்லிய இழை (film) ரசாயனப் பூச்சால் ஆனது. இதனால் உருவத்தின் மீது ஒளி விழும் போது அதை அப்படியே சிறைப் பிடித்து விடுகிறது. நமது கண்களில் இருக்கும் விழித்திரையில் எண்ணிலடங்கா கம்பி போன்ற இழைகளும், கூம்பு வடிவங்களும் அலைக் கம்பங்களாக (antennae) செயல் பட்டு நமது மூளைக்கு செய்தியை (உருவத்தை) கடத்துகின்றன. கம்பி இழைகள் ஓரிடத்தில் ஒளி இருக்கிறதா இல்லையா என்பதையும் (கறுப்பு வெள்ளை புகைப்படம் போல) கூம்புகள் பொருளிலிருந்து வரும் ஒளி என்ன நிறம் என்பதையும் மூளைக்குத் தெரிவிக்கின்றன.
விழித்திரையில் ஒரே ஒரு இடத்தில் அதாவது நமது கண்களிலிருந்து மூளைக்கு நரம்பு பிரிந்து செல்லும் இடத்தில் அலைக் கம்பங்கள் இல்லாததால், இதனை பார்வையில்லாப் பகுதி அல்லது வெற்றுப் புள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதனால் தான் இறைவன் நமக்கு இரண்டு கண்கள் கொடுத்திருக்கிறார். ஒரு கண் பார்க்க முடியாததை இன்னொரு கண் பார்க்கிறது. அதுமட்டுமல்ல; ஒரு கண் ஒரு பொருளை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது இன்னொரு கண் இன்னொரு கோணத்திலிருந்து அதே பொருளைப் பார்க்கிறது. நாம் பார்க்கும் பொருளின் முழு உருவமும் முப்பரிமாணத்தில் நமக்குத் தெரிகிறது. உங்கள் மூக்கை நீங்கள் ஒரு கண் மூடி ஒரு பக்கம் பாருங்கள். இன்னொரு கண்ணால் இன்னொரு பக்க மூக்கைப் பார்க்கலாம்.
ஆனால் காமிராவில் இந்த வெற்றுப் புள்ளி இல்லை அதனால் காமிராவிற்கு ஒரு லென்ஸ் தான்.
நமது கண்ணின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமான வேலையை திறம்படச் செய்து நமக்குத் தெளிவான பார்வை கிடைக்கச் செய்கிறது. நம் கண்ணில் இருக்கும் விழிவெண்படலம் எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் ஒளியை வாங்கி அவற்றை பாப்பாவின் வழியே உள்ளே செலுத்துகிறது. மேலும் இது நம் கண்ணின் லென்ஸ் –ஸிற்கு ஒரு மூடி போல இருக்கிறது.
நமது ஐரிஸ் (கருவிழிப்படலம்) மற்றும் கண்பாவை (பாப்பா) இவை காமிராவில் இருக்கும் aperture (இடைக்கண்) போல செயல்படுகின்றன.
கண்களுக்கு பின்புறத்தில் இருக்கும் விழித்திரை தான் காமிராவில் இருக்கும் பிலிம் போல செயல்படுகிறது.
நமது கண்கள் ‘பளிச்’ விளக்குகளுக்கு சட்டென்று பழகி விடுகிறது. ஆனால் இருட்டில் பார்ப்பது கொஞ்சம் கடினம். இதனால் தான் இருட்டு அறைக்குள் நுழையும்போது அல்லது இரவில் தூக்கம் வராமல் எழுந்து வரும்போது தடுமாறுகிறோம். மாறும் ஒளிக்கேற்ப நம் கண்ணைப் பழக்குவது நம் விழித்திரை.
நமது கண் மடல் (eye லிட்) நமது கண்ணை மூடிப் பாதுகாக்கிறது. தொடர்ந்து பார்க்கும் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுப்பதே இந்த கண் மடல்களின் வேலை.
கண்ணின் லென்ஸ்: புரதம் நிரம்பியது. ஓவல் வடிவானது. சின்ன உறைபோன்ற இதைச் சுற்றி தசைகள் உள்ளன. இவை கடினமான உழைப்பாளிகள். பக்கத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும்போது இவை பருத்து கேட்டியாகிவிடுகின்றன. தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது இவை தளர்ந்து தட்டையாகின்றன.
இது நீலம், இது பச்சை என்று நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் மனிதனுக்குத் தான் அதிகம் வண்ணத்துப்பூச்சிகளுக்கும், சில பறவைகளுக்கும் கூட இந்தத் திறன் உண்டு. மற்ற உயிரினங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி எப்போதுமே கறுப்பு வெளுப்பாகத்தான் காட்சி அளிக்கும். வண்ணங்களை பிரித்து அறியும் செல்கள் சரியாக வேலை செய்யவில்லை அல்லது செயலிழந்திருக்கும் போது சில வண்ணங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதனை நிறக்குருடு என்கிறோம்.
தொடர்ந்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.
புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.
கண்ணான பதிவு கண் நிறைந்த பதிவு கணகளின் அற்புதத் தன்மையை விவரிக்க வார்த்தகளே இல்லை என சொல்லலாம் மிக அருமையான பகிர்வு பாராட்டுக்கள் ரஞ்சனி
வாருங்கள் விஜயா!
வருகைக்கும் கண்ணனான கருத்துரைக்கும் நன்றி!
கண்ணையும், கேமராவையும் ஒப்பிட்டு, எல்லோருக்கும் புரியும் வகையில் அறிவியல் ரீதியாக விளக்கிய விதம் அற்புதம்!
வாருங்கள் மஹா!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
உங்கள் மூக்கை நீங்கள் ஒரு கண் மூடி ஒரு பக்கம் பாருங்கள். இன்னொரு கண்ணால் இன்னொரு பக்க மூக்கைப் பார்க்கலாம்.//
அழகாய் சொன்னீர்கள்.
கண்பற்றிய விழிப்புண்ர்வு பதிவுக்கு நன்றி.
வாருங்கள் கோமதி!
வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் கருத்துரைக்கும் நன்றி!
படித்துத் தெரிந்து கொள்ள இவ்வளவு விஷயங்கள். அருமையாக ஒற்றுமைகளைக் கூறியுள்ளீர்கள். முத்துக் கோத்த மாதிரி அழகாக விஷயங்கள் சேகரித்து வழங்குகிறீர்கள்.
பாராட்டுகள். ஒருதரம் படித்தால் போதுவதில்லை. திரும்பப் படிக்கிறேன். கண்ணைப் பற்றிய செய்திகள். தெரிந்து கொள்ள உதவும் ஸமாசாரங்கள். அன்புடன்
படித்துத் தெரிந்து கொள்ள இவ்வளவு விஷயங்கள். அருமையாக ஒற்றுமைகளைக் கூறியுள்ளீர்கள். முத்துக்கோத்த மாதிரி அழகாக விஷயங்கள் சேகரித்து வழங்குகிறீர்கள்.
பாராட்டுகள் உங்களுக்கு. கண்ணைப் பற்றிய விஷயங்கள் ஒருதரம் படித்தால் போதுவதில்லை. திரும்பப் படிக்கிறேன். அன்புடன்
வாருங்கள் காமாக்ஷிமா!
முதல் தடவை காமென்ட் போகவில்லை என்று திரும்பவும் எழுதி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.
வருகைக்கும், திரும்ப திரும்பப் படித்ததற்கும் நன்றி!
தெளிவான விளக்கம்… நன்றி அம்மா….
வாருங்கள் தனபாலன்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
உங்கள் பதிவைக்கண்டதும் ஆச்சரியம். நேற்று ஒருவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனே கம்யூட்டர் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்றார். காரணம் கேட்டால் கண் எப்படி செயல்படுகின்றது என்பதை நான் பார்க்க வேண்டும் என்றார். உடனே யூ டியூப் ல் சென்று ஒரு படத்தை கொஞ்சம் நேரம் போட்டுக் காட்டினேன். நீங்கள் இது போன்ற பதிவை அடுத்த முறை எழுதும் போது யூ டியுப் பை துணைக்கு வைத்துக் கொள்ளலாமே?
வாருங்கள் ஜோதிஜி!
நிச்சயம் உங்கள் யோசனையை நான்குபெண்கள் தளத்திற்கு தெரிவிக்கிறேன்.
வருகைக்கும் இந்தத் தொடரை தொடர்ந்து படித்து உற்சாகம் அளிப்பதற்கும் நன்றி!
விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!