சமையல், சீசன் சமையல்

புடலங்காய் கறியும் புடலங்காய் பச்சடியும்

ருசி

காமாட்சி
காமாட்சி

கறிவகைகளில் மிகவும் சுலபமாகத் தயாரிக்க முடிவது புடலங்காய்  கறி. காய் நறுக்கவும் அதிக நேரம் தேவையில்லை. எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது.   பத்திய சமையல்,சிரார்த்த சமையல் என்று எல்லா சமையல்களிலும்  தேடி வாங்கிச் சமைப்பதுண்டு. கூட்டு,கறி,பச்சடி,மோர்க்குழம்பு, துவையல்,பகோடாக்கள் என  மனதிற்குப் பிடித்த வகைகளில்   செய்து சுவைக்கலாம். குட்டை வகை, வெகு நீண்டவகை, வரிகளுடன் கூடியவை, பச்சை, சாம்பல்பூசிய  இளம் நிறம் என பலவகைகளில் கிடைக்கிறது. இளசான  காய்களாயிருந்தால்   விதைகளை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. சற்று முற்றிய காயாயின் விதைகளை நீக்கிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான விஷயங்களடங்கிய காயிது.

வேண்டியவைகளைப் பார்ப்போமா?
நல்ல பிஞ்சு புடலங்காய் – அரைக்கிலோ
பயத்தம் பருப்பு – கால் கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்.   அதிகமும் போடலாம்.
பச்சை மிளகாய் – 2   காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – சின்ன துண்டு   நசுக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் பொடி – சிறிது
உப்பு – ருசிக்கு ஏற்ப
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தாளித்துக் கொட்ட – வகைக்கு அரை டீஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு

செய்முறை:
புடலங்காயை அலசி  இரண்டாக நறுக்கி அதிலுள்ள  விதைகளை நீக்கவும். காயைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம் பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து   வடிக்கட்டவும். நறுக்கிய  புடலங்காயை ஒரு பாத்திரத்திலிட்டு,  உப்பு,மஞ்சள் சேர்த்து கையினால்   கசக்கியமாதிரி அழுத்திப் பிழியவும். புடலங்காய்   நீர் விட்டுக் கொள்ளும். இப்போது வடிக்கட்டிய பயத்தம் பருப்பை அதனுடன் சேர்த்துக் கலந்து அழுத்திய மாதிரி  வைக்கவும். நன்றாகச் சிறிது நேரம்   ஊற வைக்கவும்.
காயிலிருந்து வந்த தண்ணரில் பருப்பும் நன்றாக ஊறும். வாணலியில் எண்ணெயைக்   காயவைத்து   கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச் சேர்த்துச் சிவந்ததும் நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சியைச் சேர்த்து வதக்கி,   புடலங்காய்க் கலவையைச் சேர்த்து வதக்கவும். நிதானத்தீயில் வைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து  மூடி வைத்து வதக்கவும்.
தீ சிம்மிலிருந்தால் போதும்.   வதங்கும் போதே தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும். ஒரு துளி சர்க்கரை சேர்ப்பவர்களும் உண்டு.   கீழிறக்கி வைத்து உபயோகியுங்கள். உப்பு சரியா பாருங்கள். பச்சைக் கொத்தமல்லி சேருங்கள். கறிப்பொடி இருந்தால் காரத்திற்கு அதையும் உபயோகிக்கலாம்.

P1020016
பச்சடியும் பிரமாதமில்ல. சிறிய  அளவில்   புடலங்காயை வதக்கித் தயிரில் ஆற வைத்துச் சேர்க்கவும். தேங்காய், இஞ்சி,மிளகாயை அரைத்துச் சேர்த்து,தக்காளியுடன்,உப்பும்
சேர்த்துக் கலக்கி,  கடுகு தாளிக்கவும். பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். புடலங்காய்த் தயிர்ப் பச்சடி தயார்.
P1020014

மிகுதி வகைகளைப் பின்னொரு சமயம் பார்ப்போம்.

“புடலங்காய் கறியும் புடலங்காய் பச்சடியும்” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. வணக்கம்
  அம்மா

  சுவையான சமையல் பற்றி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா காமாட்சியம்மாவுக்கும் எனது பாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. புடலங்காய் கரி செய்யும் வகை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தமுறை நீங்கள் சொல்லியிருப்பது போல செய்கிறேன். பச்சடி முதல் தடவையாகக் கேள்விப் படுகிறேன். பச்சடிக்கு இளம் காய்தான் சரிப்படும் இல்லையா?
  படங்கள் water mark உடன் பிரமாதம்!

  1. வாழைத்தண்டில் கூட இப்படிச் செய்வதுண்டு.
   புடலங்காய் வதக்கும் போது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இப்படிப் பருப்பு போடுவதால் கறியும் சற்று அதிகமாகக் கிடைக்கும்.
   வீட்டுத் தோட்டத்தில் காய்க்கும் போது மிகஇளசாகப் பறித்துச் செய்வார்கள். பிஞ்சு
   வெள்ளரிக்காய் மாதிரி இருக்கும்.
   கடையிலும் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும்.
   சென்னையில் வகைவகையாகப் புடலங்காய்.
   பார்த்தாலே எனக்கு மகிழ்ச்சிதான்.
   உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியானதொன்று.
   நன்றி அன்புடன்

 3. படங்களே சாப்பிடத்தூண்டுகிறது பிரமாதம் என் பாட்டி பிஞ்சு புடலங்காயில் தயிர் பச்சடி செய்வார். எங்கள் வீட்டிலேயே இந்தக் கொடி இருந்தது அதனால் நிறைய சுவைத்திருக்கிறோம் நனறி அம்மா

  1. என் சமையல் உங்கள் பாட்டியின் ஞாபகத்தைக் கொண்டுவருகிறது. இந்த வார்த்தை நாங்களெல்லாம் ஒரே வகையில் சமைக்கிறோம் என்ற நினைவை உண்டாக்குகிரது. மெத்த மகிழ்ச்சி. சென்னைப்
   புடலங்காய்க் கறி. தமிழ்நாட்டுக் காய். படங்கள்
   பிடித்திருக்கிரது. இப்படி அழகாக வந்தது.நன்றி
   அன்புடன்

 4. அம்மா… கறியும் பச்சடியும் கண்களைப் பறிக்க வாய் எஉசியை நினைத்து சப்புக்கொட்டுகிறது…:)

  அருமையான சைட் டிஷ்! கறி செய்முறை முழுவதும் எனக்கு இது புதிது.
  செய்து பார்க்கின்றேன் அம்மா!
  அருமை! மிக்க நன்றி அம்மா பகிர்விற்கு!

  1. அம்மா… கறியும் பச்சடியும் கண்களைப் பறிக்க வாய் எஉசியை நினைத்து சப்புக்கொட்டுகிறது…:)

   எழுத்துப் பிழை… வாய் ருசியை நினைத்து..
   என்று வரவேண்டும்.
   மன்னிக்க வேண்டுகிறேன்மா…

 5. கவிதையான மறுமொழி .மனதில் நினைத்ததை, வாய் ருசி பார்த்துச் சப்புக்கொட்ட வைத்து விட்டது. எதிரில் படங்கள் வேறு. ரஸித்துப் படிக்க வேண்டிய மறுமொழி.
  சிலஸமயம்
  டைப் பண்ணும் போது இப்படி ஆகி விடுகிறது. இதற்கெல்லாம் மன்னிப்பெதற்கு?அன்புதான் முக்கியம்.
  அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.