நோய்நாடி நோய்முதல் நாடி! – 9

‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்..’
என்று பாடிக் கொண்டே போகும்போது மனிதன் மட்டும் பிற பொருட்களைப் பார்த்து மற்றவற்றை படைத்தானா? இறைவனின் மிகச்சிறந்த படைப்பான மனிதனிடமிருந்து எதுவுமே உண்டாகவில்லையா என்ற கேள்வி எழுகிறது, இல்லையா?
ஏன் இல்லை? நம் கண்களைப் பார்த்துத்தான் கேமிரா படைக்கப்பட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.
நாம் கண் என்று சொல்வது புருவம், இமை, இமைக்குள் காணப்படும் வெண்மைப் பகுதி (Sclera), இதன் மேல் படர்ந்திருக்கும் கஞ்சங்டைவா எனப்படும் மெல்லிய திசு, ஐரிஸ் எனப்படும் கண்ணின் வண்ணப் பகுதி, இதற்கு நடுவில் சிறு துளை ‘பாப்பா’ (pupil) இவையே.
ஐரிஸ் நீலம், பச்சை, பிரவுன், கருப்பு என்று பல வண்ணங்களில் இருக்கும். நம் தோலின் அடியில் இருப்பது போலவே கண்களிலும் இந்த நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி இருக்கிறது.
‘பாப்பா’ என்று பெயர் தானே தவிர இது செய்யும் காரியங்கள் எல்லாமே பெரியவை. இதன் வழியாகத்தான் நாம் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லுகின்றன. ஐரிசை மூடி இருக்கும் படலம் தான் கார்னியா. வண்ணமில்லாமல் இது இருப்பதற்கு காரணம் இங்கு இரத்தக் குழாய்கள் இல்லை.
இமை சரி, கண்ணை ஒட்டி இருக்கிறது. புருவம் எப்படி கண்ணுடன் சேரும் என்று கேட்பவர்களுக்கு: கண்ணிற்கு பாதுகாவலன் புருவம் அதனால் அதுவும் கண்ணின் ஒரு பகுதியே. நெற்றியில் வழியும் வியர்வை கண்ணினுள் போய்விடாமல் காக்கிறது நம் புருவங்கள். அழகுக்காக புருவங்களை திருத்திக் கொள்பவர்கள் கவனிக்க!
இன்னொரு பாதுகாவலன் இமை. தூசி கண்ணில் விழாமலும் பூச்சிகள் கண்ணிற்குள் போகாமலும் காக்கிறது. அதிக வெளிச்சம் கண்ணை பாதிக்காமல் இருக்க உடனே மூடிக் கொள்ளுகிறது. கண்ணின் ஈரப்பசையை அடிக்கடி மூடி திறந்து பாதுகாக்கிறது. இதைத்தான் கண்சிமிட்டல் என்கிறோம்.
அதிக வெளிச்சம் பற்றிப் பேசும்போது ‘பாப்பா’ ஆற்றும் வேலையைப் பற்றியும் சொல்ல வேண்டும். அதிக வெளிச்சத்தில் ‘பாப்பா’ சுருங்குகிறது. ஒரு சின்னப் புள்ளியாகி விடுகிறது. குறைந்த அல்லது போதிய வெளிச்சம் இல்லாத போது பெரிதாகி நமது பார்வையை கூர்மையாக்குகிறது. இதற்கு பாப்பாவின் இரண்டு உதவியாளர்கள் உதவுகிறார்கள். ‘ஸ்விங்க்டர்’ என்னும் தசை நார் சுருங்கும்போது பாப்பா சிறிதாகிறது. ‘டைலேடர்’ என்னும் தசை நார் சுருங்கும் போது பாப்பா பெரிதாகிறது.
இந்த அமைப்பைத்தான் கேமராவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். கேமரா வைத்திருப்பவர்களுக்கு aperture என்ற அமைப்பைப் பற்றி தெரிந்திருக்கும். நம் கண்களில் இருக்கும் பாப்பா சுருங்கி விரிய உதவும் தசை நார்களைப் போல கேமராவில் அமைந்திருக்கும் அமைப்பு இது.
ஆனால் கடவுள் படைத்திருக்கும் இந்த அமைப்பு மனிதனின் கண்டுபிடிப்பைப் போல பன்மடங்கு சிறந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? அதேபோல நம் கண்கள் ‘ஃபோகஸ்’ செய்வதும் இறைவனின் அற்புதம்! தூரத்தில் இருக்கும் பொருளை கூர்ந்து கவனிக்கவும், அடுத்த நொடி பக்கத்தில் நிற்கும் நபரை துளிக்கூட கஷ்டமில்லாமல் பார்க்கவும் முடியும் நம் கண்களால்.
நம் கண்களைப் பற்றிய சில தகவல்கள்:
நமது கண்களுக்கு இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வேலை செய்யும் பகுதிகள் இருக்கின்றன.
ஒரு நிமிடத்திற்கு 12 தடவை நாம் கண் சிமிட்டுகிறோம் – அதாவது 10,000 சிமிட்டல்கள் ஒரு நாளைக்கு!
நமது கண்விழியில் 1/6 பங்கு மட்டுமே வெளியில் தெரிகிறது.
இமை கூந்தலின் வயது 5 மாதங்கள் மட்டுமே.
ஒரு நொடியில் 50 பொருட்களை நம் கண்கள் கவனிக்க முடியும்.
சுமார் 10 மில்லியன் வண்ணங்களை பிரித்து அறிய முடியும்.
நமது உடலில் உள்ள திசுக்களில் கார்னியா மட்டுமே இரத்தக் குழாய் இல்லாத ஆனால் இயங்கும் பகுதி.
பிறந்த குழந்தைக்கு வண்ணங்கள் தெரியாது.
ஷார்க் எனப்படும் சுறா மீன்களின் கார்னியா மனித கண்களில் இருக்கும் கார்னியாவை ஒத்திருக்கும்.
நமது கண்விழியின் எடை 28 கிராம்.
பிறந்த குழந்தையின் கண்களில் பிறந்த 6 முதல் 8 வாரங்கள் வரை கண்ணீர் சுரக்காது.
நாம் அழும்போது மூக்கிலிருந்தும் தண்ணீர் வரக் காரணம் கண்ணீர் மூக்கின் வழியே வடிவதுதான்.
பார்வை நரம்புகள் விழித்திரையைக் கடக்கும் இடத்தில், நமது கண்களில் சிறிய வெற்றுப் புள்ளி (Blindspot) இருக்கிறது. நமது மூளை இன்னொரு கண்ணிலிருந்து வரும் தகவலைக் கொண்டு இந்த பார்வை இடைவெளியை இட்டு நிரப்பிக் கொள்வதால் இந்த வெற்றுப் புள்ளி இருப்பது தெரிவதில்லை.
பகல் இரவு பாராது நூறு சதவீத திறமையுடன் செயல்படும் ஒரே உறுப்பு நமது கண்கள்.
இமைகள், கண்ணுக்கு வெளியே இருக்கும் தசைகளுக்கு ஓய்வு தேவை; அதேபோல கண்ணின் ஈரப்பசையையும் அவ்வப்போது மறுநிரப்பு செய்ய வேண்டியிருக்கும். நமது கண்களுக்கு ஓய்வு தேவையே இல்லை.
நமது மொத்த அறிவுத் திறனில் 85% கண்களின் பங்களிப்பே.
கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தும்ம முடியாது.
நமது விழித்திரையில் 120 மில்லியன் கம்பிகள் இரவுப் பார்வைக்காகவும், 8 மில்லியன் ஒளி கூம்புகள் வண்ணங்களை அறியவும் உள்ளன. பகல் வேளைகளில் விழித்திரை மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
நமது கண்களும் கேமராவும் – அடுத்த வாரம்.
KADAVUL IRUKIRAAR…..ITHAI PADITHA PINNARAVATHU PURINTHU KOLLUNGAL.
வாருங்கள் வேணுகோபால்!
கடவுள் நிச்சயம் இருக்கிறார். கடவுளை பலமாக நம்புபவள் நான்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நம் கண்களைப் பற்இறைவனின் அற்புதம்! தூரத்தில் இருக்கும் //பொருளை கூர்ந்து கவனிக்கவும், அடுத்த நொடி பக்கத்தில் நிற்கும் நபரை துளிக்கூட கஷ்டமில்லாமல் பார்க்கவும் முடியும் நம் கண்களால்.//
கண்களைப் பற்றிய தகவல்கள் அருமை.
வாங்க கோமதி!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
கண்ணைப் பற்றிய விஷயங்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கிறது. நமது கண்ணேயானாலும் நமக்குத் தெரியாத விஷயங்கள்தான்
பெரும்பாலும். பாட்டோடு ஆரம்பித்து பலவகை விஷயங்கள். கண்ணைப் போன்ற விசேஷமானகட்டுரை.
பாராட்டுகள் ரஞ்ஜனி. அன்புடன்
வாருங்கள் காமக்ஷிமா!
உங்கள் கண் நன்றாக குனமாயிருக்கும் என்று நினைக்கிறேன். நான் எழுதியிருக்கும் பல விஷயங்கள் நானும் இப்போதுதான் படித்துத் தெரிந்து கொண்டேன்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
‘பாப்பா என்ற பெயர் தானே தவிர,இது செய்யும் காரியங்கள் எல்லாமே பெரியவை’ இப்படி சீரியஸ் ஆன விஷயங்களையும் அழகா சொல்ல உங்களால் தான் முடியும்! புருவம் அழகு படுத்துவோருக்கு நீங்கள் வைத்த கொட்டு சூப்பர்! நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் இன்று! நன்றி!
வாருங்கள் மஹா!
வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி!
கண்ணில் இவ்வல்வு விஷயங்கள் இருக்கிறதா!ஆச்சர்யம் தான்.
கண்ணின் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அருமை.
வாருங்கள் ராஜி!
நான் படித்து வியந்ததை எல்லாம் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!