உறுப்பு தானம், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 8

ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம். அதையொட்டிய சிறப்புப் பதிவு இது.

ரஞ்சனி
ரஞ்சனி

ஒரு பெரிய பணக்காரர். 71 வயதானாலும் திடகாத்திரமாக, நோய்நொடி எதுவுமில்லாமல் வாழ்ந்து வந்தார். திடீரென்று அவருக்குத் தான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. தான் இனிமேல் ரொம்ப காலம் இருக்க மாட்டோம் என்கிற பயம் அவரை ரொம்பவும் துன்புறுத்தியது. ஒரு மன நல மருத்துவரை அணுகினார். அவர் சொன்ன ஒரு வாசகம் இவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. இவருடைய பயங்களையும் போக்கிற்று.
அந்த வாசகம் தான் ‘உங்கள் உடல் இறப்பினால் மடிய வேண்டியதில்லை’
இதைத்தான் ‘உறுப்பு தானம்’ என்கிறார்கள் மருத்துவத் துறையில்.
உறுப்பு தானம் என்றால் என்ன?
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் தனது உறுப்பின்  ஒரு பகுதியை அல்லது முழு உறுப்பை, அந்த உறுப்பு தேவைப்படும் – ஆனால் கிடைக்காமல் – இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு தானமாகக் கொடுத்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாகும்.
உறுப்பு தானம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

 ஒன்று உயிருடன் இருக்கும்போது செய்யும் தானம்.
 இன்னொன்று இறந்த பின்னர் செய்வது.
உயிருடன் இருக்கும் போது தானமாக எந்தெந்த உறுப்புகளை கொடுக்கலாம்?
 நமக்கு இரண்டு சிறுநீரகம் இருப்பதால் ஒன்றை தானமாகக் கொடுக்கலாம்.
 நுரையீரல், குடல், கணையம், ஈரல் ஆகியவற்றின் ஒரு பகுதி
 ரத்தம்
இறந்த (அதாவது ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட பின்னர்) பின் தானம் செய்யக் கூடிய உறுப்புகள்:
 இரண்டு சிறுநீரகங்கள்
 கணையம்
 கண்கள் (கார்னியா எனப்படும் விழித்திரை)
 குடல் முழுவதும்
 இதயம்
 நுரையீரல்
இயற்கையான மரணத்தின் பின் கார்னியா, இதய வால்வுகள், தோல், எலும்புகள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கலாம். முழு உடலையும் கூட மருத்துவக் கல்லூரிகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

Actress Angana Roy

யார் தானம் கொடுக்கலாம்?
 நாம் எல்லோருமே வயது, மதம், ஜாதி, இனம் தாண்டி தானம் செய்யலாம். பெற்றோர்களின் சம்மதத்துடன் குழந்தைகளும் தானம் செய்யலாம்.
 தீவிர புற்றுநோய், தீவிர HIV நோய், இரத்தத்தில் நுண்ணுயிர் நச்சேற்றம் (Sepsis) இருப்பவர்கள் தானம் செய்ய முடியாது.
 நோயாளிகளின் இரத்த சம்பந்த உறவினர்களான சகோதர சகோதரிகள், பெற்றோர், 18 வயதுக்கு மேற்பட்ட மகன், மகள் ஆகியோர் தகுதியுடையவர்கள். இவர்களைத் தவிர, அத்தை, மாமா, சித்தப்பா, அவர்களது வாரிசுகளும் தானம் செய்யலாம்.
 70, 80 வயதானவர்களும் தங்கள் உறுப்புகளை தானம் செய்ய முன் வரலாம். உறுப்பு தானத்திற்கு வயதை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.

இந்தியாவில் உறுப்பு தானம் என்ன நிலையில் இருக்கிறது? ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் நோயாளிகள் உறுப்பு தானம் பெற காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் 0.16 பேர் மட்டுமே தானம் செய்ய முன் வருகிறார்கள்.

கடைசி நிலை சிறுநீரகக் கோளாறுகள் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 175 நபர்களை தாக்குகிறது. அதாவது 2.1 லட்சம் இந்தியர்கள் சிருநீரகத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வருடத்திற்கு 3,000 – 4,000 சிறுநீரகங்கள் மட்டுமே மாற்றிப் பொருத்தப் படுகின்றன.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக உயர்ந்த அளவில் (கலவரப்படக் கூடிய நிலை)  நிகழ்கின்றன. அதாவது 1.4 லட்சம் வருடத்திற்கு! கடுமையான தலைக் காயங்களினால் ஏற்படக்கூடிய மூளைச்சாவு இதில் 65% என்று டில்லியின் உள்ள AIIMS ஆய்வு கூறுகிறது.

பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் தானம் செய்ய முன்வருவதில்லை. இதற்குப் பல காரணங்கள்.

உறுப்பு தானம் பற்றிய அறியாமையும்  அதற்கான விடைகளும்:   எனது மதம் இதை ஆதரிக்கவில்லை. எந்த மதமுமே உறுப்பு தானத்தை மறுப்பதில்லை. ‘கொடை’ என்பதை எல்லா மதங்களுமே ஆதரிக்கின்றன. நாம் இறந்த பிறகு நம் உறுப்புகளை கொடுப்பதன் மூலம் ஒருவரை வாழ வைக்க முடியுமானால் அதைவிட கொடை வேறென்ன இருக்க முடியும்? நீங்கள் உங்கள் மதத்தலைவரை ஆலோசனை கேட்கலாம்.

 எனது குடும்பம் இதை விரும்பாது. உங்கள் குடும்பத்தினரிடம் மருத்துவ ஆலோசகர் பேசுவார். உறுப்பு தானத்தின் மூலம் இன்னொருவருக்கு வாழ்வை அளிக்க முடியும் என்று அவர் சொல்லும்போது எல்லாருமே சம்மதிப்பார்கள். ஒரே ஒருவர் தனது உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிப்பதன் மூலம் ஒன்பது பேர்களை வாழவைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 நான் என் உறுப்புகளைக் கொடுக்கத் தயார் என்ற தெரிந்தால் எனது மருத்துவர் என்னைப் பிழைக்க வைக்க முயற்சி செய்ய மாட்டார். சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவ மனைக்குச் செல்லும்போது உங்கள் மருத்துவர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பதில்தான் கவனம் செலுத்துவார். அதுதான் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் தொழிலின் தர்மம். அவருக்கும் உறுப்பு தானத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதுவும் இல்லாமல் மூளை சாவு ஏற்படும்போது தான் உறுப்பு தான் என்கிற விஷயமே பேசப்படும். மூளைச் சாவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை பலவிதங்களில் பரிசோதித்த பின்னரே உறுப்புகள் எடுக்கப்படும்.

 நான் இறப்பிற்குப் பின் மேலுலகம் போக முடியாது. புராணங்கள், சாஸ்த்திரங்களின்படி, உடல் எரிந்து அல்லது மண்ணோடு மண்ணாகிவிடும். உடலிலிருந்து விடுபட்ட ஆன்மா தான் மேலுலகம் செல்லும். நீங்கள் இறந்தவுடனே ஆன்மா விடுதலை பெற்றுவிடும். உங்கள் ஆத்மா நிச்சயம் மேலுலகம் போகும். இறக்குமுன் நீங்கள் தானம் கொடுத்த புண்ணியமும் சேர்ந்து ஆன்மாவை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்.

 என் உடலை சிதைத்து விடுவார்கள். தானம் கொடுப்பவரின் உடல் எந்தவிதத்திலும் சிதைக்கப்பட மாட்டாது. இறந்தவருக்குரிய மரியாதை கொடுக்கப்படும்.

 நான் ஒரு இந்து. உறுப்புகளை தானம் செய்தால், அடுத்த பிறவியில் அந்த உறுப்புகள் இல்லாமல் பிறப்பேன். சாஸ்த்திரங்களின்படி  உடல் என்பது அழியக்கூடியது. ஆன்மா தான் மறுபடிப் பிறக்கும். அப்படிப் பிறக்கும் ஆன்மா புதுப் பிறவியில் எல்லா உறுப்புகளுடனும் பிறக்கும்.

 எடுக்கப்படும் உறுப்புகள் பணக்கார, பிரபலங்களுக்குத்தான் பயன்படும். நிஜமாகவே தேவைப்படும் ஒருவருக்கு பயன்படாமல் போனால்? ஒருவருக்கு மாற்று உறுப்பு பொருத்த வேண்டுமானால், நோயின் தீவிரம், எத்தனை நாளாக காத்துக் கொண்டிருக்கிறார், இரத்த வகை, மற்ற மருத்துவ தேவைகள் இவையே முன்னிலைப் படுத்தி பார்க்கப்படும்.

 நான் கொடுக்கும் உறுப்புகளுக்காக என் குடும்பம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை. தவறான செய்தி. யார் மாற்று உறுப்பு பெறுகிறாரோ, அவரே பணம் செலுத்த வேண்டும்.

இப்படிக் கொடுத்தவர்கள், பெற்றவர்கள் இருக்கிறார்களா?

சென்ற வருடம் ஒரு விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட  அன்மோல் என்கிற 21 வயது இளைஞனின் பெற்றோர்கள் அவனது எல்லா உறுப்புகளையும் தானம் செய்ய முன் வந்தனர். இவரால் ஒன்பது நபர்கள் புது வாழ்வு பெற்றார்கள்.

‘உனக்கு நான் எப்படியாவது உதவ நினைக்கிறேன்’ என்று சிறுநீரக செயலிழப்புக்  கோளாறால் துன்பப் பட்டுக்கொண்டிருந்த திருமதி ரக்ஷாவைப் பார்த்து சொல்லுவார் அவரது பக்கத்து வீட்டு பெண்மணி திருமதி பாரதி. அது நிஜமாகவே நடக்கப் போகிறது என்று இருவருமே நினைத்திருக்கவில்லை. திருமதி பாரதி எதிர்பாராமல் விபத்துக்குள்ளானார். மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகச் சொல்ல, திருமதி பாரதியின் கணவர் அவரது சிறுநீரகத்தை திருமதி ரக்ஷாவிற்குப் பொருத்தும்படி மருத்துவர்களைக் கேட்டுக் கொண்டார்.

‘சிறுவயதிலேயே தாயை இழந்த எனக்கு தாயைப் போன்றவர் திருமதி பாரதி. அவரால் இன்று எனக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு அவர் ஒரு தேவதை,’ என்று நடந்ததை இன்னும் நம்ப முடியாமல் கண்களில் நீர் வழியக் கூறுகிறார் திருமதி ரக்ஷா. இது நடந்தது பெங்களூரில்.

எங்கள் வீட்டில் சமீபத்தில் பரமபதித்த மூதாட்டி ஒருவர் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுத்து விடும்படி சொல்லியிருந்தது எங்கள் எல்லோரையும் நெகிழ வைத்தது.

அதேபோல சுமார் பத்து வருடங்களுக்கு முன் எங்கள் உறவினர் ஒருவருக்கு சிறுநீரில் யூரியா அளவு அதிகமாக இருப்பாதால் சிறுநீரகம் எந்த நிமிடத்திலும் செயலிழக்கலாம் என்ற நிலை வந்தபோது அவரது மனைவி தனது ஒரு சிறுநீரகத்தை கணவருக்கு தானமாக அளித்தார். அன்று இந்தச் செயல் ரொம்பவும் அபூர்வமாக கருதப் பட்டது. சமீபத்தில் இவர்கள் இருவரையும் சந்தித்தேன். இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது மனதுக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது.

சென்னையில் மோகன் ஃபவுண்டேஷன் 15 வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டோனர் அட்டைகளை விநியோகித்திருக்கிறது. 3,500 உறுப்பு தானங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

ஆன்லைனில் டோனர் அட்டை பெற www.ileadindia.com  இல் பதிவு செய்துகொள்ளலாம்.

உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட இடங்களில் மேலதிகத் தகவல்கள் பெறலாம்.

நாம் இறந்தபின் நம் உடல் மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதைவிட இன்னொருவரை வாழ வைக்க பயன்படுமாகில் செய்யலாமே.

“உறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்!” இல் 23 கருத்துகள் உள்ளன

 1. நாம் இறந்தபின் நம் உடல் மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதைவிட இன்னொருவரை வாழ வைக்க பயன்படுமாகில் செய்யலாமே.//

  நல்ல செயல். செய்யலாம். கண் தானம் எழுதி கொடுத்து இருக்கிறோம் நானும், என் கணவரும். உறுப்பு தானமும் கொடுக்கலாம்.
  நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.

 2. அப்பாடி. எவ்வளவு விஷயங்கள். ஒன்றன் பின் ஒன்றாய்.
  தானங்களில் சிறந்தது உறுப்பு தானங்கள்தான்.
  அதற்கேற்றார்போல உதாரணங்கள்.
  எவ்வளவு விஷயங்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவும்.
  படிபடி இன்னமும் படி, என்று சொல்கிறது உண்மையான விஷயங்கள். அருமையான பதிவு. அன்புடன்

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   நான் படித்ததையெல்லாம் பகிர்ந்து விட்டேன்! அதான் இவ்வளவு விஷயங்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய பதிவு இது! ஒருவர் தன் உறுப்புக்களை தானம் செய்தால், ஒன்பது பேருக்கு அவை பயன்படும், ஆச்சரியமான உண்மை! நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!!

 4. தானத்தில் சிறந்தது உறுப்புத் தானம். ஆனால் அதை படித்தவர்களே செய்வதில்லை.உங்கள் பதிவு நல்ல விழிப்புனர்வைத்தரும் பதிவு.

 5. உறுப்பு தானத்திற்கு முதலில் ஒவ்வொருவரும் மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு உதவும் அருமையான விழிப்புணர்வு பதிவு. ஒன்று விடாமல் நன்றாக எழுதியிருக்கீங்க.

 6. அன்புடையீர்,

  உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html

  தங்கள் தகவலுக்காக!

  நட்புடன்
  ஆதி வெங்கட்
  திருவரங்கம்

 7. வணக்கம்
  இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.