உறவை மேம்படுத்துதல், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, தங்க மீன்கள்

அப்பா குழந்தை உறவை மேம்படுத்துவது எப்படி?

தங்கமீன்கள்
அப்பா-மகள் உறவின் அற்புதத்தைச் சொல்லும் ‘தங்கமீன்கள்’

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே 
என்கிற பிரபல பாடல் வரிகளை இனி மாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில் குழந்தைகள் வளர்ப்பில் இனி அப்பாக்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கப்போகிறது. இந்திய குடும்பங்களைப் பொறுத்தவரை அப்பாவுக்கான இடம் போற்றுதலுக்குரியது. அதாவது அவ்வளவு சாமான்யமாக அவரை அணுக முடியாது. இதுதான் முந்தைய தலைமுறையில் அப்பாவுக்கான பிம்பம். ஆனால் இப்போதுள்ள பிள்ளைகள் தன் அப்பாவிடம் பெண் தோழிகள் பற்றியெல்லாம்கூட பேச முடியும் என்கிற சூழல் மாறியிருக்கிறது. குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாகியிருப்பதை மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள்.
குழந்தைகளுக்கான எழுத்தாளர் இரா. நடராசன் இதுகுறித்து சில முக்கியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்…
‘‘தந்தை, பிள்ளைகள் உறவில் இப்போது முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. முந்தைய தலைமுறையில் தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா, பெரியப்பா-பெரியம்மா, சித்தப்பா-சித்தி, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து வசிக்கிற கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை இருந்தபோது அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான உறவு, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவாகவே இருந்தது. அப்பாவிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால்கூட அம்மா மூலமாகத்தான் அந்தக் குழந்தை கேட்கும். ஆனால் இப்போதிருக்கும் தனித் தனி குடும்பங்களில் தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு மேம்பட்டிருக்கிறது.
இன்றைக்கு டி.வி.களில், சினிமாக்களில் நாம் பார்க்கும் அப்பாக்கள், தங்கள் பிள்ளைகளுடன் தோழமையோடு உறவாடுகிறவர்களாக இருக்கிறார்கள். சமூகம் மாறியிருப்பதற்கு உதாரணங்கள் இவை. ஆனால் இந்த மாற்றம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி?
1. இன்றைய பெற்றோர் தங்களின் நிறைவேறாத விருப்பங்களை, தான் படிக்க விரும்பி படிக்க முடியாத ஒரு படிப்பை தன் பிள்ளைகள் படித்தே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள், வற்புறுத்துகிறார்கள். தன் பிள்ளைகளின் விருப்பத்துக்கும் உண்மையாக மதிப்பளிக்கும் பெற்றோர் நிச்சயம் இதை செய்ய வேண்டாம்.
2. நிறைய அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு பிரச்னை தங்கள் குழந்தைகளுடன் செலவிட நேரமில்லை என்பதுதான். இப்படி நேரம் செலவிட முடியாதவர் செய்யும் குறுக்கு வழிமுறைதான் பணத்தை செலவிடுவது. 8 வது படிக்கும்போதே பைக் வாங்கித் தருவது, திடீர் என்று நட்சத்திர ஹோட்டல் விருந்து அழைத்துச் செல்வது என அந்த வயதுக்கு தேவையில்லாத விஷயங்களை நிறைய அப்பாக்கள் செய்கிறார்கள். இதுபோல ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்குவது உங்கள் மகனுடைய வாழ்வில் ஒரு ஒழுங்கை கொண்டுவராது. மாறாக, என்ன தவறு செய்தாலும் ஏதாவது ஒருவகையில் லஞ்சம் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்கிற விதையைத்தான் அவனுடைய மனதில் பதிக்கிறீர்கள்.
3. இன்றைய குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே தனிமையை பழக்கிவிட்டுவிடுகிறார்கள். தனி அறை, அவனுக்கான தனி பொருட்கள் என ஆரம்ப வயதுகளிலேயே தனிமையை பழக்கிவிட்டுவிடுகிறோம். இது பின்நாளில் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு அகப் பிரச்னைகளை உருவாக்கிவிடும். உங்கள் குழந்தைகளோடு எப்போதும் அளவளாவிக் கொண்டிருங்கள்.
4. குழந்தைகளுக்கு எதையும் உங்கள் விருப்பப்படி வாங்கித்தராதீர்கள். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுங்கள். உதாரணத்துக்கு ஒரு புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்று ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி?, ஐ.பி.எஸ். ஆவது எப்படி? என்கிற புத்தகங்களை வாங்கித்தராமல் அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கவும் படிக்கவும் அனுமதியுங்கள்.
5. பணத்தை வைத்து இதெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லித்தராமல் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சொல்லிக்கொடுங்கள்.
6. இதையெல்லாம் செய்யும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான உறவு தோழமையோடு அமையும்.’’ என்கிறார்.

“அப்பா குழந்தை உறவை மேம்படுத்துவது எப்படி?” இல் ஒரு கருத்து உள்ளது

  1. உண்மைதான் அப்பாவின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் இருந்தால்தான் குழந்தைகள் பாதுகாப்பையும் பொறுப்பையும் உணர்ந்து கொண்டு வளரமுடியும். அம்மாவும் மற்ற உறவினர்களும் அதற்கு பாலமாக இருக்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.