நோய்நாடி நோய்முதல் நாடி – 7

பிள்ளை உறங்காவில்லி தாசர் என்று ஒருவர். தன் மனைவியின் கண்ணழகில் மயங்கி அவளையே சுற்றிச்சுற்றி வந்து ஊராரின் கேலிக்கு ஆளானார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் காவிரிக் கரையில் தன் சிஷ்யர்களுடன் அமர்ந்திருந்த போது தாசர் தனது மனைவிக்கு வெயில் படாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டு அவளது கண்களையே பார்த்துக் கொண்டு செல்வதை கண்டார். அவரை திருத்திப்பணி கொள்ள நினைத்து அவரை அழைத்து அவர் செய்யும் செயலுக்குக் காரணம் கேட்டார்.
‘ஸ்வாமி! அவளது கண்களைப் பாருங்கள். இத்தனை அழகான கண்களை பார்த்த பின்னும் அதற்கு அடிமையாகாமல் இருக்க முடியுமா?’ என்றார் வில்லிதாசர்.
ஸ்ரீ ராமானுஜர் கேட்டார்: ‘ஏனப்பா! இதைவிட அழகான கண்களை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரும் கண்களைக் காண்பித்தால் உன் அடிமைத்தனத்தை விட்டு விடுவாயா?’
வில்லிதாசரும் ஒத்துக்கொள்ள ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கம் பெரிய கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு சயனித்திருக்கும் பெரிய பெருமாளின் திருக்கண்களை காண்பிக்க அக்கணமே வில்லிதாசரும், அவரது மனைவி பொன்னாச்சியும் பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டனர்.
‘பரியனாகி வந்து அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்தமலன் முகத்துக்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட – அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்ற திருப்பாணாழ்வாரின் வாக்குப்படியே பெரிய பெருமாளின் திருக்கண்கள் எல்லோரையும் பைத்தியம் பிடிக்க வைக்கும்.
எங்கள் ஊர் புரந்தரதாசரும் ‘கண்கள் இருப்பது எதற்கு? ஸ்ரீரங்கப்பட்டினம் கஸ்தூரி ரங்கனை காண்பதற்கு அல்லாமல்?’ என்கிறார். இளங்கோவடிகள் ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?’ என்கிறார்.
மருத்துவக் கட்டுரையா, ஆன்மீகக் கட்டுரையா என்று நீங்கள் கேட்கும் முன் இதோ விஷயத்தை மாற்றி விடுகிறேன். கண் என்பது சாதாரண விஷயத்திலிருந்து ஆன்மிகம் வரை எத்தனை முக்கியம் என்பதை சொல்லவே இதெல்லாம். இந்த வாரத்திலிருந்து இன்னும் சில வாரங்களுக்கு கண் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
கண் பற்றிய எனது அனுபவங்களையும் சொல்லுகிறேன். ஒரு நாள் எனது வகுப்பில் வெள்ளை பலகையில் எழுதிவிட்டு வந்து உட்கார்ந்தேன். எனது மாணவர் ஒருவர் நான் எழுதியதில் சந்தேகம் கேட்க, திரும்பி வெள்ளைக் பலகையைப் பார்த்தால், எனக்கு ஒன்றுமே தெரியவில்லை! ரொம்பவும் பயந்துவிட்டேன். உடனே கண் மருத்துவரைப் பார்க்க அவர் சொன்னார்: கண்ணில் புரை வளர்ந்திருக்கிறது. கண் விழியின் நடுவில் வளர ஆரம்பித்திருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். ‘ஒரே நாளில் இரண்டு கண்களிலும் செய்துவிடுங்கள்’ என்றேன். மருத்துவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘அப்படிச் செய்ய முடியாது. இரண்டு நாட்களாவது இடைவெளி வேண்டும் என்றார். செவ்வாய் அன்று ஒரு கண், வெள்ளி அன்று ஒரு கண் என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஏன் இவ்வளவு அவசரம் என்றால் அடுத்தடுத்து வகுப்புகள்; எத்தனை நாட்கள் மாணவர்கள் பொறுப்பார்கள்? இன்னொன்று ஒரே நேரத்தில் இரண்டு கண்களுக்கும் மருந்து போட்டுக் கொண்டு சரி செய்து கொண்டு விடலாமே என்ற எண்ணமும் தான். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நானே கைபேசியில் அலாரம் வைத்துக்கொண்டு சொட்டு மருந்து போட்டுக் கொண்டு வெகு விரைவில் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன். எதற்குச் சொல்லுகிறேன் என்றால் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைமை இல்லை.
என் பாட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்து கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு போவார். அந்த மருத்துவரோ படு கண்டிப்பானவர். கண்ணில் மட்டும் மரத்துப் போக மருந்து போடுவார். அறுவை சிகிச்சையின் போது தலையை துளிக் கூட அசைக்கக் கூடாது. தப்பித் தவறி அசைத்தால் ‘பட்’ டென்று அடித்து விடுவாராம். பாட்டியுடன் கூட தொடர் சிகிச்சைக்கு நாங்கள் யாராவது போவோம். பாட்டி ரொம்பவும் பயப்படுவார். பாவமாக இருக்கும். எந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை நடந்ததோ அதை பச்சைத் துணியால் மூடி விடுவார்கள். மருந்து போட்டுவிட்டு மறுபடியும் போட்டுக் கொள்ளவேண்டும். இப்போது மருத்துவத்துறை எத்தனை முன்னேறிவிட்டது! கண் மருத்துவம் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. அதே சமயம் புது புது நோய்கள் வருகின்றன. நாகரிகம் என்ற பெயரில் நமக்கு ஒத்துக் கொள்ளாத உணவையெல்லாம் சாப்பிடுவது; உடற்பயிற்சி என்பதை மறந்தும் கூட செய்யாமலிருப்பது; எல்லோரிடமும் ஒரு வாகனம் நடைப் பயிற்சி என்பதை அடியோடு மறந்து போனது என்று வரிசையாக பல காரணங்கள் சொல்லலாம். பரம்பரை நோய்கள் தவிர நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் தேவையில்லாத மாற்றங்களும் நமது உடல் நலம் கெட்டுப் போகக் காரணங்கள்.
தொடர்ந்து கண்களைப் பற்றிப் பார்ப்போம்.
மிக அருமையான அவசியமான பதிவு ரஞ்சனி. கண்ணில் வி சி ஹெச் சின்ரோம் என்ற புதுவிதமான வியாதியால் நான் 2000 – 2003 வரை கஷ்டப்பட்டேன் கண்களை ரொம்ப ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்
வாருங்கள் விஜயா!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
வில்லிதாசர் ,திருப்பாணாழ்வார், புரந்தரதாசர்,இளங்கோவடிகள் என்று அருமையான எடுத்துக்காட்டுகள் காட்டி கண்ணின் பயன்பாட்டை அழகாய் சொல்கிறீர்கள் ரஞ்சனி. தொடர்கிறேன்.
வாருங்கள் கோமதி!
பொதுவாக எல்லோரும் ஏதாவது சினிமா பாடலை உதாரணமாகச் சொல்வார்கள். நான்தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்தச் சம்பவத்தை சேர்த்தேன்.
வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!
விளக்கங்கள் மிகவும் பயன் தரும்… நன்றி அம்மா…
வாருங்கள் தனபாலன்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அறுவை சிகிச்சையின் போது தலையை துளிக் கூட அசைக்கக் கூடாது. தப்பித் தவறி அசைத்தால் ‘பட்’ டென்று அடித்து விடுவாராம். நல்லவேளை.. இப்போ அப்படி யாரும் இல்லை.. சுவாரசியமாய் இருக்கிறது.. பயனுள்ளதாகவும்.
வாருங்கள் ரிஷபன்!
உங்கள் வருகை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
கண் பற்றி எழுதத் தொடங்கியுளளீர்கள் மேலும் எதிர்பார்த்தபடி
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.
வாருங்கள் வேதா!
தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீங்கள் சொல்லிய உறங்காவில்லி தாசர் கதை தெரியும் ஆனாலும் உங்கள் பதிவல் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் படிக்கலாமே என்று தோன்றுகிறது. ஒரு சின்ன விண்ணப்பம் .ஒரு தனி வலையில் ஆன்மிகக் கதைகளை எழுதுங்களேன். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
வாருங்கள் ராஜி!
உங்களின் ‘விண்ணப்பம்’ என்ற சொல் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த சொல்லை வைத்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சுந்தரகாண்டம் சொல்லப் படுகிறது. என் தளத்தில் இந்த பாசுரங்களை வெளியிடுகிறேன்.
உங்கள் ஆலோசனைக்கும் நன்றி!
“செவ்வாய் அன்று ஒரு கண், வெள்ளி அன்று ஒரு கண்”______ தைரியம்தான் உங்களுக்கு.
அந்த நாள் கண் சிகிச்சையை நினைக்கும்போதே பயமா இருக்கு.பாட்டி ரொம்பவே பாவம்தான்.
கதை சூப்பரா இருக்கு. முடிந்தால் இதேபோல் குட்டிக்குட்டி ஆன்மீகக் கதைகளாக உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்களேன். நன்றி.
வாங்க சித்ரா!
காலத்தின் கட்டாயம் இப்படி அறுவை சிகிச்சை பண்ணிக் கொள்ள வேண்டும் என்று. இரண்டு கண்களிலும் அ.சி. பண்ண வேண்டும் என்று சொல்லியபின் தள்ளிப் போடுவானேன், என்று.
நீங்களும் ராஜியும் ஒரே வேண்டுகோளை வைத்திருக்கிறீர்கள். யோசனை செய்கிறேன்.
எனது எழுத்துக்களை ரசித்துப் படிப்பதற்கு நன்றி!
Very good intro. for Eye care, Ranjani.
வா ஜெயந்தி!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
இதில் இருந்தே கண்ணானது ஆரோக்கியமாக இருக்க வேண்டியது, வாழ்க்கைக்கு எவ்வளவு
அவசியம் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம்!
நல்லதொரு தொடக்கம், வாழ்த்துக்கள் 🙂
வாங்க மஹா!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!