நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?!

நோய்நாடி நோய்முதல் நாடி-5

ரஞ்சனி
ரஞ்சனி

சென்றவாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் ‘சித்த வைத்தியத்தில் சருமப் பராமரிப்பு’ என்பது பற்றி ஒரு மருத்துவர் பேசியபோது ஒரு கருத்தை முன் வைத்தார். ‘சருமப் பராமரிப்பு பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி அதில் காட்டும் கிரீம்களை வாங்குவதில் செலவழிக்கும் பணத்தில் பாதியை நல்ல உணவுகள் சாப்பிடுவதில் செலவழித்தால், இந்தக் க்ரீம்களுக்கு வேலையே இருக்காது. வெளிபூச்சு எத்தனை பூசினாலும் சருமத்திற்கு பளபளப்பு என்பது உள்ளிருந்து வருவது’ மருத்துவரின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.

நமது ஆரோக்கியமும் இப்படித்தான். நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நமது ஆரோக்கியம் காக்கப்படும். தலைவலிக்கு என்ன சத்துள்ள உணவு என்று கேட்கிறீர்களா? மனதை அலைபாயாமல் வைத்துக் கொள்வதுதான் தலைவலிக்கு மருந்து, சத்துள்ள உணவு எல்லாம்.

குழந்தைகளுக்கு வரும் தலைவலிகள்:

பள்ளி கிளம்பும் நேரத்தில் சில குழந்தைகள் தலைவலிக்கிறது என்பார்கள். பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்துவிட்டு வாருங்கள். குழந்தையிடமே சற்று நிதானமாக உட்கார்ந்து பேசுங்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம்.

 

எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்களை அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ வேண்டி இருக்கிறது, பாவம். பள்ளியில் ஆசிரியை மட்டுமல்ல; ஆயாக்களும் இருக்கிறார்களே. பள்ளியில் அசுத்தமான கழிப்பறைகள். இயற்கையின் அழைப்புக்களை சரியானபடி கவனிக்கவில்லை என்றால் கூட தலைவலி வரும். பக்கத்து இருக்கை பையனுடன் சண்டை. அவன் ‘நான் எங்கப்பாவை அழைத்து வருகிறேன்’ என்றால் இவனுக்குத் தலைவலி வரும்.

ப்ரோக்ரஸ் கார்ட் வந்தால் தலைவலி வரும். இதெல்லாம் போகப்போக சரியாகிவிடும்.

சில குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே கண் பார்வைக் கோளாறு வரும். கரும்பலகையில் எழுதியிருப்பது தெரியாது. கண்ணை கஷ்டப்படுத்திக் கொண்டு பார்க்க முயற்சிக்கும் போது தலைவலி வரும். இப்படி இருந்தால் உடனே கவனியுங்கள்.

விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். பந்து தலைமேல் விழுந்ததா என்று கேளுங்கள். ஜலதோஷம், ஜுரம் அவற்றுடன் வரும் தலைவலி ஜலதோஷம், ஜுரம் சரியானவுடன் போய்விடும். ஜலதோஷம் வந்தால் காதுகளும் பாதிக்கப்படும். காதில் தொற்று இருந்தாலும் தலைவலி வரலாம்.

அதிக நேரம் வெயிலில் விளையாடிவிட்டு வந்தால் தலைவலி வரக் கூடும்.

எப்போது மருத்துவ உதவி தேவைப்படும்?
 இரவில் தலைவலி என்று தூங்காமல் எழுந்து வந்தால்
 லேசாக ஆரம்பித்த வலி போகப்போக அதிகமானால்
 குழந்தைக்கு காரணமில்லாமல் எரிச்சல், கோவம் வந்தால்
 வாந்தி எடுத்தால்
 கழுத்து வலி, கழுத்து இறுக்கம் மற்றும் ஜுரம்  இருந்தால்
 பார்வையில் வேறுபாடுகள் தென்பட்டால்
 தலையின் வெளிப்புறத்தில் குறிப்பிட்ட இடத்தில் வலி/வீக்கம் இருந்தால்
உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இந்தக் காலக் குழந்தைகள் வெளியே போய் விளையாடுவது என்பதே அபூர்வமாகிவிட்டது. அலைபேசி அல்லது கணணியில் வீடியோ விளையாட்டுக்கள் தான் விளையாடுகின்றன. ‘மாலை முழுதும் (வெளியில் போய்) விளையாட்டு’ என்பதை சொல்லிக் கொடுங்கள். பக்கத்தில் பூங்கா இருந்தால் அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் பிற குழந்தைகளுடன் விளையாடுவது பலவிதங்களில் அவர்களுக்கு நன்மை பயக்கும். ‘கூடி விளையாடு பாப்பா’ என்பதன் பொருள் புரியும்.

foto8 copy

அம்மா அப்பாவிற்கு தலைவலி வரும் என்றால் குழந்தைகளுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக ஒற்றைத்தலைவலி பரம்பரையாக வரும்.

புதிதாக ஏதாவது உணவு சாப்பிட்டால் சில குழந்தைகளுக்குத் தலைவலி வரும். உணவை பாதுகாக்க சேர்க்கப்படும் MSG போன்ற பொருட்களால் தலைவலி வரலாம். நம் பாரம்பரிய உணவுகளை விட்டு வேறு உணவுகளை சாப்பிடுவதால் வரும் தலைவலி இது.

பெண் குழந்தைகள் பூப்படைந்தவுடன் சில சமயம் தலைவலிக்கிறது என்பார்கள். ஹார்மோன்களினால் ஏற்படும் தலைவலி இது. ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் செய்யும் அமர்க்களத்தினால் கூட இது ஏற்படலாம்.

குழந்தைகளின் தலைவலிக்கு நிவாரணம்:
 அதிகமான வலி நிவாரணிகள் கொடுக்காதீர்கள்.
 ஓய்வு மிகவும் முக்கியம். அதிக வெளிச்சம் நல்ல காற்றோட்டம் இருக்கும் அறையில் குழந்தையை தூங்க வையுங்கள். தூக்கம், ஓய்வு இவை தலைவலியை குறைக்கும்.
 குழந்தையின் நெற்றியில் ஈரமான துணியை போடுங்கள்.
 ஊட்ட சத்து நிறைந்த பழங்கள் கொடுங்கள். பால் கொடுங்கள். காலி வயிற்றில் இருந்தால் கூட தலைவலி அதிகமாகும்.
 மிகவும் முக்கியமானது இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது கூடாது. அம்மா அப்பா விழித்திருந்தால் குழந்தைகளும் சீக்கிரம் தூங்கமாட்டார்கள்.
 பள்ளியில் குழந்தை எப்படி இருக்கிறார்கள் என்று கண்டறிவது ரொம்பவும் முக்கியம்.
 இரண்டுங்கெட்டான் வயதில் இந்த தலைவலி அதிகம் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். உண்மையில் ஒரு குழப்பமான காலகட்டம் இது.
 நிச்சயம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவ முடியும். உதவ வேண்டும்.
 ஒரு நாட்குறிப்பு வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு வரும் தலைவலி பற்றிய விவரங்களை எழுதுவது பயன்தரும். எப்போது எதனால் தலைவலி வருகிறது என்றறிந்து அதற்கேற்ற தீர்வுகளும் தேட முடியும்.

பெண்களும் தலைவலியும்
பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தலைவலி வரும். மன அழுத்தம் தான் காரணம். ஹார்மோன்களும் தங்களது பங்களிப்பை கொடுக்கத் தவறுவதில்லை. மாதவிடாயை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரோன் ஆகியவை குறைந்தாலோ கூடினாலோ தலைவலி வரும். மாதவிலக்கு வருமுன் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஒற்றைத்தலைவலி வரும்.

குடும்பக் கட்டுப்பாட்டிற்கான மாத்திரைகள் சாப்பிடும்போதும் தலைவலி வரலாம். சில சமயங்களில் இந்த மாத்திரைகளே தலைவலி நிவாரணியாக வேலை செய்யும். சிலசமயம் தலைவலியை அதிகப் படுத்தும். மருத்துவரின் ஆலோசனை பெறுவது உத்தமம்.

உடனடி தீர்வாக கீழ் கண்டவற்றை செய்யலாம்.

ஈரத் துணியை நெற்றியின் மேல் போட்டுக் கொள்ளலாம்.

ஐஸ் பேக் தலை மேலோ, கழுத்தில் வலி இருக்கும் இடத்திலோ வைத்துக் கொள்ளலாம்.

ஐஸ் பேக் –ஐ ஒரு டவலில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.  

உடலை தளர்வூட்டும் பயிற்சிகளான யோகா, தியானம் பழகலாம்.  

அலுவலக தலைவலிகளை வீட்டிற்குக் கொண்டு வராமல் அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வர பழகுங்கள்.

வீட்டில் குழந்தைகளுடன் விளையாடுவது, ஓய்வாக புத்தகம் படிப்பது, மெல்லிய இசை கேட்பது என்று பழகிக் கொள்ளுங்கள்.  

காற்றாட நடை பயிற்சி செய்யுங்கள்.

வேறு எந்தவிதத் தொந்திரவு, அல்லது அறிகுறிகள் இல்லாத தலைவலிகளைப் பற்றி மட்டுமே நான் எழுதி வருகிறேன்.

முதலில் சொன்னதுபோல மனதை இலேசாக வைத்துக் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் குடும்பத்தை கவனிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுவோம்.

நோயின்றி இருப்போம்.

ஒரு விளக்கம்:

விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

Advertisements

“தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?!” இல் 15 கருத்துகள் உள்ளன

 1. face is the index of the mind என்பதுபோல் மனதில் ஓடும் சில பிரச்னைகளால் கூட உடம்பும் பாதிக்கப்படும் என்பது உண்மைதான் அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி

 2. தலைவலி பற்றி நல்லதொரு விளக்கம் தரும் பதிவு!!
  மனதை, நிலகடலை பருப்பை பார்த்து ,அலை பாயாமல் வைத்து வைத்து கொள்வது தான், எனக்கு வரும், பித்தம் சம்பந்தமான தலைவலிக்கு வரும் முன் காக்கும் மருந்து 😀

  1. வாருங்கள் மஹா!
   நீங்கள் சொல்வதுபோல எதை சாப்பிட்டால், அல்லது எதை நினைத்து கவலைபட்டால் தலைவலி வரும் என்று தெரிந்து அதை விலக்குவது நல்லது!
   அச்சச்சோ! வேர்க்கடலை சாப்பிடமுடியாதா?

 3. படிக்க ஆரம்பித்ததும் தலைவலி ஏற்பட்டது. படிக்கப்படிக்க அது மிகவும் அதிகமானது. கடைசியில் தான் தலைவலிக்கான பல்வேறு காரணங்க்ளே புரிய வந்தது.

  தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டி புறப்பட்டு விட்டேன்.

  அருமையான விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள்.

 4. எந்தெந்தப் பிரச்சினைகளால் தலைவலி வருகின்றது எனவும், அதற்கான தீர்வுகளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருப்பது நன்றாக உள்ளது.தொடருங்கள்…

 5. குழந்தை முதல் பெரியவர்கள் வரை நல்ல அலசல். மன அழுத்தம் தலைவலி தரும். மலச்சிக்கல் தலைவலி தரும். நான் ஒற்றைத் தலைவலியால் பலகாலம் கஷ்டப்பட்டேன். வெளிச்சம் ஆகாது, வாந்தி என்று அவஸ்தை இருந்தது. இப்போதுதான் தேவலாம்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   திரு அப்பாதுரை இந்த கட்டுரையின் ஒரு பகுதிக்கு கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை படியுங்கள். அவர் சொல்வதுபோல செய்தால் ஒற்றைத்தலைவலி போகிறதா என்று பொறுங்கள்.
   இணைப்பு இதோ:http://wp.me/p2IA60-tw

 6. தலை வலியே ஒரு பெரிய தலைவலி தான். அதை சரி செய்வது பெரும்பாடு தான் . இத்தனை விளக்கமாக நீங்கள் விரித்திருப்பது உங்களுடை ஆழ்ந்த புலமையும் எழுதுவதற்கு நீங்கள் காட்டும் அக்கறையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
  வாழ்த்துக்கள்…..

  1. வாங்க ராஜி!
   முடிந்த அளவு எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு முயற்சி.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.