
விருந்து சாப்பாட்டில் ரவா கேஸரி சுலபமானது. எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது. நல்ல நெய்விட்டுப் பதமாகக் கிளறினால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். ஸொஜ்ஜியும்,பஜ்ஜியும் பேர் சொன்னாலே பெண் பார்க்கும் வைபவம்தான் யாவருக்கும் ஞாபகம் வரும். அந்தநாள் ஸொஜ்ஜி தான் ரவா கேஸரி. இப்போது மருமகள் வந்தே ஸொஜ்ஜியும்,பஜ்ஜியும் கொடுக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் வேண்டாம். விருந்தில் கேஸரியைச் செய்து கொடுப்போம். அவரவர்களுக்கு பஜ்ஜி ஸொஜ்ஜி ஞாபகம் வரும். கோந்து மாதிரி இருந்ததா,
வேகாத கட்டியும்,களரியுமாக இருந்ததா, சொட்டச் சொட்ட வாசனையான நெய் மணத்துடன் ,உதிர் உதிரா முந்திரிப்பருப்புடன் இருந்ததா எல்லாம் ஞாபகத்துக்கு வரும்
பெண் பார்த்து வருவதுடன் நிற்காமல் பஜ்ஜி, ஸொஜ்ஜியை அலசாது யாரும் இருக்க மாட்டார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும், பஜ்ஜி ஸொஜ்ஜி தீர்மானித்த மனைவியோ,கணவரோ எதிரிலிருக்கும் போது ஸொஜ்ஜி ருசிதான்.
அதே ஸொஜ்ஜிதான் இந்த கேஸரி.
வாங்க, வாங்க.! நான் எப்படி தயாராகிறேன் பாருங்க.
என்ன என்ன வேண்டும் பாருங்கள்
வேண்டியவைகள்
1. ரவை – ஒரு கப் (சற்றுப் பருமனான பன்ஸி ரவை நன்றாக இருக்கும்.)
2. சர்க்கரை- ஒன்றரை கப்.
3. நெய்- கால் கப்பிற்கு அதிகமாகவே இருக்கட்டும்.
4. முந்திரி – 10 அல்லது12
5. ஏலக்காய் – 4 பொடிக்கவும்.
6. குங்குமப்பூ- 10 இதழ். இல்லாவிட்டால் கேஸரி கலர் சிறிது. எதுவானாலும், ஒரு ஸ்பூன் பாலில் கலக்கிக் கொள்ளவும்.
7. திராட்சை -விருப்பத்திற்கு
இப்போது செய்வோம்.
1. அடி கனமான வாணலியோ, ப்ரஷர் பேனோ எடுத்துக் கொள்வோம்.
2. இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க விடுவோம்.
3. முந்திரி திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து எடுத்து வைப்போம்.
4. மீதி நெய்யை பேனில் நன்றாகக் காயவைத்து, ரவையைக்கொட்டி வறுப்போம். மிதமான தீயில் ரவை நன்றாக பொரிந்த மாதிரி வறுபடட்டும். கலர் மாறட்டும். ரவை வறுபட்ட வாசனையே தெரியும்.
5. கேஸை சிம்மில் வைத்து ,கொதிக்கும் தண்ணீரை, ரவையில் விட்டுக் கிளறுவோம். குங்குமப்பூ பாலையும் சேர்ப்போம்.சூடான ரவை. கொதிக்கும் தண்ணீர். சீக்கிரம் வேகும். ஜாக்கிரதை.
6. ரவை இப்போது ஜம் என்று உப்புமாவைப்போல தண்ணீரை இழுத்துக்கொண்டு வேகும். பார்க்கவே அழகாக வரும்.
7. ஒரு நிமிஷம் மூடி வைப்போம்..
8. வெந்த ரவைக்கலவையில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறுவோம்.
9. கொஞ்சம் நீர்க்க ஆகி, கிளறக்கிளற கெட்டியாகப் பந்துபோல சேர்ந்து வரும். ஏலப்பொடியையும் சேர்த்துக் கிளறுவோம்.
10. இறக்கிவைத்து, வேறு பாத்திரத்தில் மாற்றி, முந்திரி,திராட்சையால் அழகு செய்வோம். கலந்து பரிமாறுவோம்.
இதுதான் பக்குவம்
விடும் நெய்யை முதலிலேயே விட்டு விடுவதால் ரவை அழகாக வறுபடும். கட்டிதட்டாமல் வேகும். பிரகு நெய் விடவேண்டி அவசியம் இல்லை. ரவை சரியாக வறுபடாவிட்டால் மாவு கிளறின மாதிரி ஆகிவிடும். நன்றாக வறுபட்ட ரவையின் தன்மை வெந்த பிறகு கையில் ஒட்டாது. வேண்டுமானால் பிறகும் சிறிதுநெய் விடலாம். கேஸரி, ,ரவை,வறுபடுவதிலும், திட்டமான நீரில் ரவையை வேக வைப்பதிலும் இருக்கிறது. குங்குமப்பூ, ஏலக்காய், நெய் வாசனையுடன் கிளறும்போதே வாசனை ஊரைத் தூக்கும்.
பதமாய்,பக்குவமாய், கேஸரி கிளறத் தெரிந்து விட்டால் இதைவிட சுலபமான இனிப்பு வேறு எதுவுமே கிடையாது. நெய் ஒத்துக்கொள்ளாத பெரியவர்களுக்கு, சிறிது நெய்யில் ரவையை வறுத்து பாலைவிட்டுக் கிளறி வேகவைத்து, சர்க்கரை ,சேர்த்துக் கிளறவும். இதுவும் ருசியாக இருக்கும்..
ஒருமுறைக்கிருமுறை சிறிய அளவில் செய்து ருசி பாருங்கள்..
நான் குங்குமப்பூ சேர்த்திருக்கிறேன். லைட் கலர். உங்கள் விருப்பத்துக்கு கலர் கூட்டிக் குறைக்கலாம். அடுத்த ரெசிபியில் பார்க்கலாமா?
உங்கள் முன்னுரை அசத்துகிறது! அம்மா, அப்பா இவர்கள் பெண்ணைப் பற்றி பேசுவார்கள். கூட வந்த சொந்தங்கள், கேசரி, பஜ்ஜி, காப்பி இவைகளை அலசுவார்கள்.
மறுபடி வருகிறேன்.
அருமை அருமை!
இதே போலத்தான் நான் எப்போதும் செய்கிறேன். என் மாமனாருக்கு என் கைப்பட கேஸரி செஞ்சு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கேன். (பெண் பார்க்கும் வைபவமெல்லாம் இல்லையாக்கும்) கேசரின்னா… அது துளசி செய்யணுமுன்னு எல்லோர் வயித்தெரிச்சலையும் கொட்டிக்க வச்சுருக்கார். பாவம்.அவர் போய்ச் சேர்ந்து இப்போ ஒன்னரை வருசமாச்சு:(
எப்ப கேஸரி செஞ்சாலும் அவர் நினைவுதான்.
கேஸரி நன்றாகச் செய்யத் தெரிந்து விட்டால் ட்ரேட்மார்க் நமக்குத்தான். உங்கள் மாமனார் எவ்வளவு கேஸரி,அதுவும் துளஸின் கைபக்குவ கேஸரியின் ரஸிகர் என்று தெரிகிரது..உங்களுடைய
ச்ரத்தாஞ்ஜலியைப் பாராட்டுகிறேன். இப்படி ஒரு நிகழ்வு கட்டாயம் ஞாபகமூட்டும். நல்லதொரு மாமனார்.
பின்னூட்டக் கேஸரி அழகும்,அன்பும் கலந்தது.. நல்ல டேஸ்ட். நன்றி
உங்களுக்கு. அன்புடன்
வாவா ரஞ்ஜனி ஸொந்த பெண், பிள்ளைகளுக்காக ஸொஜ்ஜி பஜ்ஜி
செய்தோ,சாப்பிட்டோ இரண்டுமில்லை. ஸினேகிதர்களுக்காக வேண்டியது. செய்து,எல்லாம்.. பெண்பார்ப்பது என்பது கூட ஒரு அழகான நிகழ்வாக இருந்தது. நன்றாகச் சொன்னாய் அலசலை. அன்புடன்
ஆகா… சூப்பர்…
குறிப்பை சேமித்துக் கொண்டேன்… நன்றி…
சேமித்துக் கொண்டீர்களா? குறிப்பைத்தான்.. மிகவும் நல்லது.அன்புடன்
கேசரி அருமை.
கொஞ்சமாவது சாப்பிட்டீங்களா? நான் நினைத்த அளவிற்கு எங்கும்
வரமுடிவதில்லை. ப்ளீஸ். பொருட்ப் படுத்தாதீர்கள். உங்கள் வரவு ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. நன்றி. எட்டிப் பார்த்து விட்டாவது போங்கள். அன்புடன்
ங்கும்
சூப்பர் புகைப்படங்கள் பார்த்தாலே ருசிக்கச் சொல்கிறது அருமை அம்மா பாராட்டுக்கள்
எல்லோரையும் பார்த்து, ஏதாவது செய்து கொடுக்க ஆசை.
இதுவும் சின்னச் சின்ன ஆசை. அன்பிற்கு நன்றி. அன்புடன்
இங்கு ஒரு வகை ஷீரா என்று மேல்கோட்டை அய்யங்கார்கள் செய்கிறார்கள். மெல்லிசு ரவையில் – சிரோட்டி ரவை – அத்தனை வாசனையாக, உதிர் உதிராக இருக்கும். அதன் கலரைப் பார்த்துவிட்டு, வெல்லம் போட்டு செய்வார்களோ என்று நினைத்தேன். ஆனால் சர்க்கரைதான் சேர்ப்பார்களாம். எப்படி என்று ஒருமுறை கேட்டு செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் கைபக்குவத்தில் ரவா கேசரி இணையம் எங்கும் மணக்கிறது!
எந்த மெல்லிய ரவையானாலும், கொஞ்சம் அதிக நெய்யில் சிவக்க வறுத்து, தண்ணீரை ஒன்றிற்கு ஒன்றறை பாகம் விட்டுச், சர்க்கரை
ரவை அளவே ஸரிபாகம் போட்டுக் கிளறினால் உதிர் உதிராக வரும்.
சிவக்க வறுபட்டரவை வெந்ததும், வெல்லம்போட்டக் கலரையும் கொடுக்கும்.
நார்த் இந்தியர்கள் செய்யும் கெஸரி கூட வெல்லம் போட்ட கலர்தான் வரும்.
இணையத்தில் மணக்கிரதா? எல்லோருக்கும் சொல்லலாமா?
அன்போடு நன்றியும்
Rava Kesari Super O Super.
Melum Melum Kuripugal thodaruttum.
நாங்களும் செய்து சாப்பிட்டோம் என்று எழுதவில்லையா? சூப்பரா செய்து கொடுக்கச் சொல்லுங்கள். அன்புடன்
காமாக்ஷிமா,
பெண்பார்க்கும் வைபவத்தை மறந்து பல வருடங்களாகிவிட்டது. உங்கள் பதிவின் மூலம்தான் நினைவுக்கு வருகிறது. பிசுபிசுப்பு இல்லாமல் செய்வதற்கான பக்குவம் விளக்கமாக உள்ளது.படங்களுடன் அட்டகாசமாய் உள்ளது.எனக்கும் பிடித்த எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட்.பகிர்தலுக்கு நன்றிமா,அன்புடன் சித்ரா.
நாட்டுப் பெண்கள் நம்மைப் பார்க்க வந்து விடுகிரார்களே!
உனக்கும் பிடித்த கேஸரியா. கொஞ்சம் +கண் தொந்திரவு இருக்கிரது.எனக்கு.. இன்னும் தொடருவோமா என்ற யோசனை வந்து விடுகிறது. வேண்டியவர்களின் பின்னூட்டம் உன்னுடையது. நன்றி சித்ரா. அன்புடன்
.
உங்களுடைய இந்த கேசரி செய்முறையும் பாலக் பன்னீர் செய்முறையும் பிரமாதம்!!
தோழிகள் எல்லோருக்கும் எப்பவோ தெரிந்திருக்கிறது எனக்குத்தான் தெரியவில்லை!.
இப்போது கூகுள் தேடலில் கிடைத்தது! செய்து பார்த்தேன். அருமை…சுவையோ சுவை! மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரி காமாட்சிக்கு. 🙂