தனி மனிதனின் ஆரோக்கியம் என்பது அவன் தன்னை சார்ந்த சமூகத்துக்குச் செய்யும் உதவி

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!
9 ஆம் நம்பர் வெளியே வந்தார். மிகவும் சிறிய வயது. காலில் ஏதோ அடி. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து வகைகள் ஒவ்வொன்றிலும் 5 கொடுங்கள் போதும் என்று வாங்கிக் கொண்டார். வசதி இல்லாதவர், அதிகம் படிக்காதவர் என்று அவரது நடை உடை பாவனைகளிலிருந்தே தெரிந்தது. பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டேன்.
ஒவ்வொருவராக மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து, மருந்துக் கடைக்காரரிடம் மருத்துவர் சொன்ன மருந்துகளில் பாதி அளவே வாங்கிக் கொண்டு போனார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மருந்துகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக anti- biotic மருந்துகள்.
இவர்களுக்கெல்லாம் யார் சொல்வது இதை என்று ஆயாசம் ஏற்பட்டது.
அதே சமயம் படித்தவர்கள், வசதியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடையே எத்தனை பேருக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது.
- எல்லோருக்குமே ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்ற நினைவு தான், இல்லையா?
- நம்மில் பல பேர் நமக்கும் எல்லாம் வரக் கூடும் என்று நம்பவே தயாராக இல்லை.
- போனமுறையும் இதேபோல ஜுரம், தலைவலி என்று மருத்துவரிடம் போனேன். அந்த மருந்துகளே இன்னும் சாப்பிடாமல் அப்படியே இருக்கு’ என்று சொல்லி பல மாதங்கள் ஆன பின்னும் மறுபடி ஜுரம் தலைவலி வரும்போது அதே மாத்திரை மருந்துகளை பயன்படுத்துபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
- மருத்துவரைப் பார்க்காமலேயே நேராக மருந்துக் கடைக்குப் போய் மருந்துக் கடைக்காரரிடம் சொல்லி மருந்து வாங்குபவர்கள் நிறையப் பேர்கள். இது எத்தனை ஆபத்து என்று தெரியுமா?
- ‘எனக்கு ஒரு வியாதியும் இல்லை. நான் ஏன் வியாதியைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்?’ என்று பலர் சொல்லுகிறார்கள்.
- ‘நான் மருத்துவரிடம் போகவே மாட்டேன். போனால் ஏதாவது ஒரு வியாதி பேரை சொல்லுவாங்க’ என்று சொல்பவர்கள் நம்மில் ஏராளம்.
என்னுடைய இன்னொரு தோழி. ஆயுர்வேத மருந்துகள் பற்றித் தெரிந்தவர். வீட்டிலேயே யோகாசனமும் சொல்லித் தருகிறார். வங்கி உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஒரு நாள் எனக்கு தொலைபேசி ‘ என்ன ரஞ்சனி, இந்த சர்க்கரை வியாதி ரொம்ப பாடா படுத்துகிறது. ஒரு நாள் குறைகிறது. ஒரு நாள் ஏறி விடுகிறது’ என்று அங்கலாய்த்தார். சர்க்கரையின் அளவு ஒரே மாதிரி இல்லாமல் ஏறி இறங்குவதாலேயே அல்லவா ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார். படித்தவரே இப்படிப் பேசுகிறாரே என்று இருந்தது.
எதற்கு இதெல்லாம் சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வரும் வாரத்திலிருந்து நான்குபெண்கள் தளத்தில் நாம் இதைப்பற்றித்தான் ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்ற தலைப்பில் பேசப்போகிறோம்.
எனக்கு மருத்துவக் கட்டுரைகள் படிப்பது மிகவும் பிடித்த விஷயம். படிப்பதோடு நிற்காமல், அந்தக் கட்டுரைகள் வரும் செய்தித்தாளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுவேன்.
ஆனந்த விகடனில் வெளிவந்த ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ புத்தகங்களை நிறைய தடவை படித்திருக்கிறேன். இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஓ! ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே! தும்கூர் மருத்துவரிடம் ஒரு இளைஞன் காலில் அடி என்று வந்திருந்தான் என்று சொன்னேன் இல்லையா? என் முறை வந்து நான் உள்ளே இருக்கும்போது திரும்பவும் வந்தான். அவன் வாங்கி வந்த மருந்துகளை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று மறுபடி மருத்துவரைக் கேட்க. கூடவே அவன் மனைவி.
மருத்துவர் சொன்னார்: ‘நீ இந்த மாத்திரைகளை சாப்பிடுவதுடன், உடனடியாக பெங்களூர் போய் அங்கு மஹாவீர் ஜெயின் மருத்துவ மனைக்குப் போய் உன் கால்களை காண்பித்து விட்டு வா. உனக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் கால் காயம் ஆற நீண்ட நாட்களாகிறது. உடனே போய் காண்பி’ என்றார். அவன் போன பின்பு என்னிடம் சொன்னார்: ‘எத்தனை சின்ன பையன் பாருங்கள். சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. காலில் சொரணையே இல்லை. கட்டை விரல் முழுக்க காயம் பரவியிருக்கிறது. தானாகவே ஏதோ வைத்தியம் பண்ணிக் கொண்டு முற்றிய பிறகு வந்திருக்கிறான். எப்படிப் புரிய வைப்பது?’
அவன் மட்டுமல்ல நம்மில் பலரும் நோயை பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே இருக்கிறோம்.
நோயைப் பற்றிய தெளிவான அறிவு இருந்தால் போதும், பாதி நோய்களை சரி செய்துவிடலாம்.
ஆரோக்கிய பாரதம் என்று ஒரு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை டிடி பொதிகையில் மாலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை தினமும் வருகிறது. நம்மில் எத்தனை பேர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்? ஒவ்வொரு நோய் பற்றியும் தினமும் அந்தந்தத் துறைகளில் பிரபலமாக இருக்கும் மருத்துவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்.
நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டுமென்று தான் நம்மில் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். நெருப்பு என்றால் வாய் சுடாது, இல்லையா?
யாரையும் பயமுறுத்தாமல் அதேசமயம் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு உண்மையான நோக்கோடு மருத்துவக் கட்டுரைகள் எழுத இருக்கிறேன். வாசகர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் தேவை.
ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியில் ஒரு மருத்துவர் சொன்னார்: ‘தனி மனிதனின் ஆரோக்கியம் என்பது அவன் தன்னை சார்ந்த சமூகத்துக்குச் செய்யும் உதவி’ என்று. மிகவும் உண்மை.
எப்படி என்று வரும் புதன்கிழமையிலிருந்து எழுத இருக்கிறேன். எப்போதும் போல உங்களுடைய ஆதரவை நாடுகிறேன்.
(தொடரும்)
சிந்திக்க வேண்டிய உதராணம் தும்கூர் இளைஞன்… நல்லதொரு பயன் தரும் தொடரை ஆரம்பித்தமைக்கு நன்றி அம்மா… வாழ்த்துக்கள்…
ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சி – திங்கள் முதல் வெள்ளி – DD பொதிகை – மாலை 7.30 மணி – 8 மணி வரை… மிக்க நன்றி அம்மா…
வாருங்கள் தனபாலன்,
உங்களின் முதல் வருகை இந்தத் தொடரின் வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
புதிய தொடர் தொடர வாழ்த்துக்கள் ஆரோக்கியம் நோய் பற்றிய விழிப்புணர்வு கட்டாயம் தேவை பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
வாருங்கள் விஜயா!
உங்களின் தொடர்ந்த வரவு எனக்கு உற்சாகமளிக்கிறது. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரொம்பவே ஸந்தோஷமாயிருக்கு. ஜாக்கிரதை,ஜாக்கிரதையாயிருங்கோ என்று எச்சரிக்கைகள் அவசியம்.. படிக்கிறேன். ஸ்வாரஸ்யமா எதிர் நோக்குகிறேன்
அன்புடன்
ன்.
வாருங்கள் காமாக்ஷிமா!
உங்களது உற்சாக வார்த்தைகள் எனக்கு டானிக். மருத்துவக் கட்டுரை எழுதுமுன் உங்கள் உற்சாக டானிக் பருகுவது நன்றாக இருக்கிறது.
Thank you, Ranjani, I look forward to read your new serial on ‘health’.
Hope it will be an eye-opener to many and useful to all.
வா ஜெயந்தி.
தினமும் பொதிகையில் ஆரோக்கிய பாரதம் பார்ப்பதன் பலன் என்று கூடச் சொல்லலாம்!
குழந்தை பராமரிப்பு போலவே இந்தத் தொடரும் சிறப்படைய வாழ்த்துகள். எங்கள் ஆதரவு எப்போஓஓதும் உண்டு.
சில நிகழ்ச்சிகளில் மருத்துவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் தேவையான மருந்துகள் தவிர கூடுதலாக ஒன்றிரண்டு எழுதுவதாக.அவை சத்து மாத்திரை என்கிறார்கள்.எவை தேவையில்லாதவை என்று எப்படி தெரிந்துகொள்வதென்றும் தெரியவில்லை.இதுபற்றி தெரிந்தாலும் எழுதுங்கோ.நன்றி.
வாங்க சித்ரா!
உங்கள் ஆதரவை ‘எப்போஓஓதும்’ கொடுத்து வருவதற்கு முதலில் நன்றி!
சிலருக்கு anti-biotic மருந்துகள் சாப்பிட்டால் வாயில் புண்கள் வரும். அதற்காகவே B complex மாத்திரை தருவார்கள். இதில் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. நிச்சயம் எழுதுகிறேன். குறித்துக் கொண்டு இருக்கிறேன்.
நேயர் விருப்பம் தான் முதலில்!
நல்ல விழிப்புணர்வு பதிவு. பயணத்திலே இருந்து கொண்டு இருப்பதால் விட்டு, விட்டு படிக்கிறேன். உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
தொடர்கிறேன்.
வாருங்கள் கோமதி!
பரவாயில்லை. நிதானமாகப் படியுங்கள். உங்களின் தொடர் வருகைக்கும், அன்பான அக்கறையான கருத்துக்களுக்கும் நன்றி!
புதிய தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! நன்றி!