அரசியல், இலங்கை, புத்தம் : ஓர் அறிமுகம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம் – 2

மயிலை சீனி. வெங்கடசாமி

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல்முதல் இங்குக் கொண்டுவந்தவர் யாவர்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.

இவ்வாறு இவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்தமதத்தைப்பற்றிக் கூறப்படாததுதான். ஆனால், இவர்கள் கருத்து தவறெனத் தெரிகின்றது. பௌத்த மதத்தைப்பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல்களுள் காணப்படவில்லையாயினும், அச்சங்க காலத்து நூல்களில் காணப்படுகின்றன. அதாவது, கடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை, சிலப்பதிகாரங்களில் இந்த மதத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்தமதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் அருளிச்செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி=அரசமரம்; அரசமரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால், பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72 -ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினாலே, அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாடு வந்திருக்கக்கூடும் என்பது தவறாகின்றது. கடைச்சங்க காலத்திலேயே, அதாவது, கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஆயினும், பௌத்த மதம் தமிழ்நாட்டிற்கு முதல்முதல் எப்போது வந்தது என்னும் கேள்விக்கு இது விடையன்று. இக்கேள்விக்கு விடை தமிழ் நூல்களில் காணக்கிடைக்கவில்லை.

ஆகையால், புறச்சான்றுகளைக்கொண்டு ஆராய்வோம். நற்காலமாக, அசோக சக்கரவர்த்தி எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்கின்றன. அசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி. மு. 273 முதல் 232 வரையில்), தமிழ் இந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்துலகாண்ட ஒப்பற்ற மன்னர். அன்றியும், இவர், பௌத்த மதத்தை மேற்கொண்டு, இந்தியா தேசத்திலும் அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார். இவர் இந்திய தேசத்தில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்கு உதவிசெய்கின்றன என்று சொன்னோம். சௌராஷ்டிர தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துகருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது:-

‘காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர்பெருமானுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லாவிடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர,கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப் பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்.’

இந்தச் சாசனத்தில், அசோக சக்கரவர்த்தி தமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பதுமட்டும் கூறப்படுகின்றது. ஆனால், கீழ்க்கண்ட இன்னொரு சாசனத்தில், இவர் தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் பரப்பிய செய்தி காணப்படுகின்றது. பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற இந்தச் சாசனம் (Rock Edict iii), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிட, அறத்தைப் போதித்து அதனால் பெறும் அறவெற்றியே தமக்கு விருப்பமானது என்பதைத் தமது பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றது. இவ்வாறு கூறுகின்ற இந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச்சிக்கு உதவிசெய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு :-

தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாசனம் கி. மு. 258 -இல் எழுதப்பட்டது. அசோக மன்னர், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை – அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச்செய்வதால் வந்த அறவெற்றியை – கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச்செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச்சானப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனர். அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதற்கு வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. மகாவம்சம், தீபவம்சம் என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்தமதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. இலங்கைத் தீவு தமிழ்நாட்டை அடுத்துள்ளதாகையாலும், தமிழ்நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்லவேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்த மதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம்.

ஆகவே, தீபவம்சமும் மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவர்த்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்ற தென்றும், மகாநாடு முடிந்தபின்னர்ப் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், இலங்கைக்கு அனுப்பப்பட்டவர் அசோகரது மகனாராகிய மகிந்தர் என்பவர் என்றும், இந்த மகிந்தர் இத்திரியர், உத்தியர், சம்பலர், பத்திரசாரர், சாமனர சுமணர் என்னும் பிக்குகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு இலங்கை வந்து பௌத்த மதத்தைப் பரவச்செய்தார் என்றும் இந்த நூல்கள் கூறுகின்றன.

இலங்கையிலுள்ள பழமையான புத்தரின் சிற்பம்
இலங்கையிலுள்ள பழமையான புத்தரின் சிலை

இந்த நூல்கள் கூறுகின்ற மகிந்தர் என்பவர் மகேந்திரர் ஆவர். மகேந்திரர் என்னும் பெயர் பாளி மொழியில் மகிந்தர் என்று வழங்கப்படும். இந்த மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரை இலங்கை நூல்கள் அசோகரது மகனார் என்று கூறுகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோகரது தம்பியார் என்று கூறுகின்றன. மகனாராயினும் ஆகுக, தம்பியாராயினும் ஆகுக, இந்த மகேந்திரர் அசோகரால் அனுப்பப்பட்டவர் என்பது மட்டும் உறுதி. அன்றியும், இவருடன் இலங்கைக்கு வந்தவர்களில் ஒருவரான சாமனர சுமணர் என்பவர் அசோக மன்னரது பெண் வயிற்றுப் பேரர் என்பதும் ஈண்டுக்குறிப்பிடத்தக்கது. இந்த மகேந்திரரும் அவரைச்சேர்ந்த ஐந்து பிக்குகளும் கி. மு. 250 -இல் இலங்கைக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனால், அசோக மன்னர் காலத்தில் மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரால் இலங்கைத்தீவில் பௌத்தமதம் பரவியது என்றும், அதே காலத்தில்தான் இலங்கையையடுத்த தமிழ் நாட்டிலும் இந்த மதம் முதல் முதல் வந்திருக்கவேண்டும் என்றும் துணியலாம்.

மகேந்திரர் தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் போதித்ததற்கான சான்றுகள் அடித்த பதிவில்…

“பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு!” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.