
ருசியுங்கள்
வேண்டியவைகள்
மிளகாய் வற்றல் – 15
தனியா – அரை கப்
கடலைப் பருப்பு – அரை கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
பெருங்காயம் – சின்ன கட்டி
வேண்டியவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.
செய்முறை
நல்ல மிதானமான தீயில் வெறும் வாணலியில் பருப்புகளைத் தனித்தனியாக , சிவக்க வறுத்துக் கொள்ளவும். தனியாவை கருகாமல் வறுக்கவும். மிளகாயை துளி எண்ணெய் விட்டு வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில்,கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். சீரகம்,பெருங்காயத்தையும் உடன் போடவும். இப்போது கறிப்பொடி தயார். மஞ்சள் பொடியும் கலக்கலாம். காற்றுபுகாத பாட்டிலில்களில் எடுத்து வைத்து அழுத்தமாக மூடி வைக்கவும். வேண்டும் போது உபயோகப் படுத்தலாம். கெடாது.
இந்தப் பொடியை எந்த காய்கறி வதக்கினாலும் அதில் சேர்த்து வதக்கலாம். கத்தரிக்காய், வாழைக்காய், காலிப்ளவர் என விருப்பமான காய்கறிகளுடன் சேர்த்து வதக்கினால் ருசியாக இருக்கும். கூட்டுகள், வற்றல் குழம்பு முதலானவைகளிலும் சிறிது சேர்த்தால் நன்றாக இருக்கும் கரம் மஸாலா பிடித்தவர்கள் இதனுடன் சிறிது லவங்கப் பட்டை,கிராம்பு, இரண்டொருஏலக்காயும் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளலாம். அதிகம் பொடிக்க வேண்டாம் என்று தோன்றினால் எல்லாவற்றையும் நான்கில் ஒரு பங்காகக் குறைத்து கணக்கிட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
இந்தப் பொடி கையிருப்பில் இருந்தால், ஒரு கடுகைத் தாளித்துக் கொட்டிவிட்டு, காயை வதக்கி, இந்தப் பொடியைப் போட்டிருக்கலாம். ருசியும் அதிகம். வேலையும் குறைவு இந்தக் கறிப்பொடி போட்டு செய்த,மாதிரிக்காகச் செய்த வாழைக்காய் கறியையும் பாருங்கள்.
வேண்டியவைகள்
வாழைக்காய் நம்பக்கம் கிடைக்கும் மொன்தன் காய் – ஒன்று
ஒரு சிட்டிகை – மஞ்சள் பொடி
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
கறிப்பொடி – ஒன்றரை டீஸ்பூன்.
ருசிக்கு – உப்பு
சில கறிவேப்பிலை இலைகள்.
துளி புளித் தண்ணீர்.
செய்முறை
வாழைக்காயைத் நன்றாகத் தோல் சீவி. திட்டமான துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசி வடிக்கட்டவும். பாத்திரத்தில் புளித்தண்ணீருடன் அதிகம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, வாழைக்காய்த் துண்டங்களைச் சேர்த்து வேகவிடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். காய் திட்டமாக வெந்ததும் வடிக்கட்டியில் கொட்டி காயை வடிய விடவும்.
காய் முற்றியதாக இருக்கட்டும். இல்லாவிட்டால் குழைந்து அளிந்து விடும். வாணலியை அடுப்பில் சூடாக்கி எண்ணெயைவிட்டுக் காய்ந்த்தும் கடுகை வெடிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி காயைச் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். கறிப்பொடியைத் தூவி, சட்டுவத்தால் காயைச் சற்று சேர்த்தாற்போல நசுக்கிக் கிளறவும். காரமும்,பொடியும் சேர்ந்து பதமாகும். இறக்கி உபயோகிக்கவும்.
வாழைக்காயில் இன்னும் பல விதங்கள் செய்யலாம். ஒரு காலத்தில் பிரதான கறியாக இருந்த வாழைக்காயின் இடத்தை விருந்து சமையல்களில் உருளைக்கிழங்கு பிடித்து விட்டது. உருளைக் கிழங்கிலும் இந்தப்பொடி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். துளி புளித்தண்ணீர் சேர்த்து வேக விடுவது வாழைக்காய் கறுப்பாகாமல் இருப்பதற்குதான்.
படங்களே சாப்பிடு சாப்பிடு என்று அழைக்கிறது உருளை எல்லோருக்கும் பிடித்த காய் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்
உங்களுடைய பின்னூட்டம் எழுதுவதற்கு தெம்பைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு வயதாகிறது.
எழுதறதை செய்து ருசித்து, படமெடுத்துதான் அனுப்புகிறேன்.
நம் வழக்கம்,எல்லாவற்றிலும்,வெங்காயம், பூண்டு மைனஸில் இருக்கு. வேண்டுமென்பவர்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று இனி எழுத வேண்டும்.நன்றி. அன்புடன்
அருமையான பொடியும் வாழைக்காய்க் கறியும்…
ம்.ம் ப்ரம்மாதம் அம்மா…
வறுத்த பருப்பு மல்லி மிளகாய்யையும் பொடியையும் தனியாகவே பார்க்கும்போதே வாசனை கணனிக்கூடகவே என் மூக்கில் எட்டியது.
நல்ல நல்ல குறிப்புகள் எல்லாமே சுலபமும் ருசியும்.
உங்க டிப்ஸ் அதுவும் உபயோகமானதே… :).
ரொம்ம்ப நன்றிமா…
இளமதி வாஸனை எல்லாம் நீயே பிடித்து விடாதே. உன்னுடைய மா எழுதினால் கட்டாயம் நீ ருசிக்கவே செய்வாய். அதைவிட அருமையான பின்னூட்டம் கொடுத்திடுவாய். எனக்கும் ஸந்தோஷமே! உபயோகமாயிருந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்? அன்புடன்_
vDvTàDàCD
வாவ்… சூப்பர்… செய்து பார்க்கச் சொல்கிறேன்… நன்றி அம்மா…
பொடியைச் செய்யச் சொல்லுங்கள். கரிவகைகள் தானாகவே ருசிக்கும். அன்புடன்
ஆஹா! நான் செய்யும் பொடி மாதிரியே இருக்கிறதே! வாசனை தூக்குகிறது!
வாழைக்காய் கறியமுது நான் சற்று வித்தியாசமாகச் செய்வேன்:
வாழைக்காயை தோலுடனேயே சற்று பெரிய பெரிய துண்டங்களாக நறுக்கி குக்கரில் நீர் விடாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும், தோலை உரித்துவிட்டு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அந்த எண்ணையிலேயே உப்பு, மஞ்சள் பொடி, இந்தப் பொடி எல்லாவற்றையும் போட்டு, வெந்த வாழைக்காயை கையால் மசித்துப் போட்டு பிரட்டி எடுத்து விடவேண்டும்.
நீங்கள் சொல்லியிருப்பது போல முற்றல் காயாக இருந்தால் உதிர் உதிராக வரும்.
ஒருமுறை உங்கள் கையால் நிஜமாகவே சாப்பிட வேண்டும்!
குக்கரில் நீர் விடாமல் வேக வைத்து, நீராவியில் வேகவைத்து என்று கொள்ளவேண்டும் அல்லவா/
இந்த வாழைக்காயில்தான் எத்தனை முறைகள்.. குறிப்புக்குள்
குறிப்புகள் . ஸந்தோஷம். உன் குறிப்புக்கு.
பொடி இருந்தால் ஸௌகரியம்தான்..
இன்னும் வாழைக்காயை சுட்டு உதிர்த்து, பொடி செய்வார்கள். அது தெரியுமா?
நானே வந்து சமைத்துப் போடுகிறேன். ஆசை இருக்கிறது.
பின்னூட்டத்திற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
குறிப்புக்குள்
காமாட்சிம்மா, கறிப்பொடி – வாழைக்காய் பொடிக்கறி ரெண்டும் செய்து ருசித்து விட்டேன். நல்ல வாசனையாக ருசியாக இருந்தது. சீக்கிரமே ப்ளாகில் போடுகிறேன். நன்றிம்மா! 🙂
ருசித்தும், ப்ளாகில் போட்டும், பின்னூட்டம் எழுதியதற்கும் நன்றி மஹி.மிக்க ஸந்தோஷம் மஹி.