ருசியுங்கள்

ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து சாப்பாட்டை ரசித்து சாப்பிடலாம். இப்போது இவையெல்லாம், ஒரு குறிப்பிட்ட கடைகளில் கிடைத்து விடுகிறது. ஆனாலும், நாமாக நமக்கு வேண்டியதைச் செய்வது போலாகுமா? சில பேருக்கு இவைகள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். நான் சொல்லி தெரியவைத்து, ருசிபார்த்து உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள இருக்கும்போது, வேறு என்ன சொல்ல இருக்கிறது.? வேண்டிய சாமான்களைச் சொல்லுகிறேன்.. நீங்களும் செய்யுங்கள். அபிப்ராயமும் எழுதுங்கள். நானும் பதில் எழுதுகிறேன்.!!!!!!
வேண்டியவைகள்
துவரம்பருப்பு-அரைகப்
கடலைபருப்பு-அரைகப்
உளுத்தம் பருப்பு-ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்-ஒரு டேபிள் ஸ்பூன்.
வற்றல் மிளகாய்-3
மிளகு-ஒரு டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-அரை டீஸ்பூன்.
ருசிக்கு-உப்பு
சிலர் கொள்ளும் சிறிது சேர்த்துச் செய்கிறார்கள்.
அதையும் வறுத்துச் சேர்க்கலாம்
செய்முறை:
பருப்புகளை சுத்தம் செய்து கொள்ளவும். நல்ல கனமான வாணலியில் எல்லா பருப்புகளையும்,தனித் தனியே சுமாரான தீயில் சிவப்பாக வருத்துக் கொள்ளவும். மிளகு, மிளகாயையும் வருத்துக் கொள்ளவும். எள்ளைத் தனியாகப் படபடவென்று பொரிந்து சிவக்கும் பதத்தில் வருத்துக் கொள்ளவும். எதற்கும் எண்ணெய் விடவேண்டாம். பருப்புகள் ஆறியபின், எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு ,பெருங்காயத்தையும் சேர்த்து சற்று கரகரப்பான பதத்தில் பொடித்துக் கொள்ளவும். சூடான சாதம்,ஆறின சாதம் எதுவாக இருந்தாலும், நெய்,அல்லது நல்லெண்ணை சேர்த்துப் பிசைந்து சாப்பிட உதிர்,உதிராக நன்றாயிருக்கும்.
பச்சடி,மோர்க் குழம்பு என ஜோடி சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். சாப்பிடும் சமயம் யாராவது வந்து சாப்பிடச் சொல்லும்படி இருந்தால் இருக்கும் சாம்பாரைத் தொட்டுக்கொண்டு,பொடிசாதம் சாப்பிட ருசிதான். நீங்கள் நிறைய சமையுங்கள். ஆனால் இதுவும் , சமயத்துக்கு உதவும். தோசை இட்லியோடு கூட சமயத்தில் சாப்பிட உதவும். ஒத்தாசையாக இருக்கிறதா இல்லையா?
தொடர்புடைய பதிவுகள் – கோடை கால சீசன் சமையல்
வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு
அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?
வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?
நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?
எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/
ருசியாக மட்டுமல்ல சுலபமாகவும் இருக்கு செய்து பார்த்துவிட வேண்டியதுதான் என் பெண்ணுக்கு ரொம்பப் பிடித்த் பொடி இது நன்றி அம்மா
நல்லது. உங்கள் பெண்ணிற்கு பிடித்தது. செய்து பாருங்கள். னன்றாகழே இருக்கும். அன்புடன்
நன்றாகவே திருத்தி வாசியுங்கள்.
வீட்டில் குறித்து வைத்துக் கொண்டார்கள்… நன்றி அம்மா…
ஸமயத்திற்கு உதவும். நன்றி. அன்புடன்
இப்போதெல்லாம் நிறையப் பேர் இதை செய்வதில்லை. பெச்சிளராக இருந்த காலத்தில் அம்மா செய்து கொடுத்து அனுப்புவார்கள். அருமையான சுவை உடையதாக இருக்கும். அதை நினைவு படுத்தியதற்கு நன்றி.
ப்ரோட்டீன் குறைவில்லாமல் காப்பாற்றும்.. ஒரு பருப்புப் பொடி எப்படி அம்மாவை நினைக்கச் செய்கிறது. ருசி அப்படி நன்றாக இ.ருந்திருக்கும்.
உங்கள் நினைவிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
காமாக்ஷிமா,
உங்கள் பருப்புப் பொடி பல பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது, என் தம்பிக்கு மெந்தியக் குழம்பு என்றால் கட்டாயம் பருப்புப்பொடி வேண்டும். சின்ன வயதில் மட்டுமல்ல, இப்போதும் அப்படித்தான்.
நீங்கள் சொல்லியிருப்பது போல திடீரென ஒரு முறை விருந்தினர் வர பருப்புப் பொடியை வைத்துக் கொண்டு சமாளித்தேன்.
என் அம்மா இத்துடன் காய்ந்த கறிவேப்பிலை இருந்தால் சேர்த்துப் பொடி செய்து விடுவாள். கம கமவென்று வாசனை ஆளைத் தூக்கும்!
என் பேரன்களுக்கும் பிடித்த பொடி இது.
அருமையான செய்முறை.
பருப்புப் பொடி ரஞ்ஜனியைக் காணோமே என்று தேடியது. ஆமாம் மெந்தியக் குழம்பு, பச்சமோர் இதெல்லாம் கூட சாப்பிட நந்றாக ிருக்கும்.
கரிவேப்பிலைப் பொடியும் தனியாக இருக்கு.. இன்னும் சில பொடிகளும் இருக்கு. தெலுங்குகாரர்கள் சிறிது வெந்தயமும் போடுவார்கள். கந்திஸுன்னியோ என்னவோ பெயர் சொல்லுவார்கள். கன்னடா மெந்திஹிட்டுவா? பேரன்களுக்குப் பிடிப்பது நல்ல செய்தி. நன்றி. அன்புடன்