சீட்டுகளிலேயே பெண்கள் மத்தியில் ரொம்பவும் கவர்ச்சியானது நகைச் சீட்டு! தங்க நகைகளின் மீது நமக்குள்ள அதீத ஆர்வம்தான் காரணம். ஆனால் நகைச் சீட்டு லாபகரமானதா? நகைச் சீட்டில் சேர்ந்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லை என்கிற அறிவிப்புகள் உண்மையா? இதுபற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம்…
நகைக்கடைகளின் வருமானம் நகைகளை விற்பதைவிட நகைச் சீட்டு மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை நகைக்கடைகளில் சீட்டுப் பிரிவில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் எல்லா நகைக்கடைகளும் போட்டிபோட்டுக் கொண்டு நகைச் சீட்டில் கவர்ச்சிகரமான திட்டங்களையும் விளம்பரங்களையும் அறிவிக்கின்றன.
நகைச்சீட்டால் நகைக்கடைகளுக்கு லாபம் என்பது சரிதான். ஆனாலும் சிறுகச் சேர்த்த பணத்தை நகைக்காக சீட்டில் போடும் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் லாபம்?
பொதுவாக நகைச் சீட்டில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. முதலாவது குறிப்பிட்ட மாதத்துக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் அந்த குறிப்பிட்ட மாத முடிவில் ஒரு தொகையுடன் நகைக்கடை ஒரு மாத தொகையை வட்டியாகச் சேர்த்து ஒரு தொகையைத் தரும். அந்த தொகைக்குள் நகைகளை வாங்கிக் கொள்ளலாம். (உதா. மாதம் ரூ.500ஐ 15 மாதம் செலுத்தினால் 16 வது மாதத்தில் ரூ. 7500 கிடைக்கும். வட்டியாக ரூ. 500ஐ நகைக்கடைத் தரும். போனாஸாக சீட்டின் ஆரம்பத்தில் ரூ-. 200க்கான கிஃப்ட்டைத் தருவார்கள்). சில கடைகள் நகைச்சீட்டு மூலமாக நகைகள் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போடுவதில்லை. இந்தத் திட்டத்தில் இருக்கும் பெரிய மைனஸ்… சீட்டு ஆரம்பிக்கும் போது இருந்த தங்கத்தின் விலை 15 மாத இறுதியில் ஏறியிருக்கும் என்பதால் நாம் சேர்த்த பணத்தின் மதிப்பு குறைந்து போய்விடும் என்பதுதான்.
அடுத்த திட்டம்… நாம் மாதந்தோறும் கட்டும் பணத்துக்கு ஏற்ற தங்கத்தை அந்த மாதமே நம் கணக்கில் வரவாக வைத்து, இறுதி மாதம் நாம் கட்டிய பணத்துக்கு ஏற்ற தங்கத்தை தருவார்கள். தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலைப்படத் தேவையில்லை என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு. இந்தத் திட்டத்திலும் சேதாரம், செய்கூலி இல்லை என்கிற சலுகைகள் உண்டு.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தத் திட்டங்கள் எல்லாமே சரிதான் என்பதுபோலத்தான் தோன்றும். உண்மையில் நகைச் சீட்டு சேர்ந்து 15 மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும் தொகையைவிட சாதாரணமாக வங்கிகளில் ஆர்.டி. மூலமாகக் கிடைக்கும் தொகை அதிகம்.
உதாரணத்துக்கு… ரூ. 500ஐ 16 மாதங்கள் 9 சதவீதம் வட்டி விதத்தில் வங்கியில் ஆர்.டி.யாக செலுத்தினால் ரூ. 8530 கிடைக்கும். இதுவே நகைச் சீட்டில் போனஸ் கிஃப்ட்டையும் சேர்த்து நமக்கு கிடைக்கும் தொகை ரூ. 8200தான்!
நேரடியாக நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் போடுவார்களே என்கிறீர்களா? இதிலும் ஒரு தந்திரம் இருக்கிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் நகை வாங்கினால் மட்டும்தான் அந்த சலுகை. அந்தத் தொகைக்கு மேல் நகை வாங்க நேரிட்டால் அதற்கு இந்த சலுகைப் பொருந்தாது. அதேபோல் தங்க நகைக்கு மட்டுமே இந்தச் சலுகை. வெள்ளி, டைமண்ட், பிளாட்டினம், ரூபி நகைகளுக்கும் இந்தச் சலுகை கிடையாது.
தங்க நகை வாங்கியே ஆக வேண்டும் என்கிறவர்கள் நாம் மேலே சொன்ன இரண்டாவது வகையான திட்டங்களில் சேர்ந்து வாங்கலாம். பணத்தைச் சேர்த்துவிட்டு பிறகு, விரும்பிய வெள்ளி, டைமண்ட், ரூபி நகைகள் வாங்க நினைப்பவர்கள் வங்கி ஆர்.டி., போஸ்ட் ஆஃபிஸ் ஆர்.டி.யிலேயே பணத்தைப் போட்டு நகைகள் வாங்கலாம்.
Superrrrrr…..