அரிசி வடாம், கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ருசியுங்கள்

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

காமாட்சி
காமாட்சி

ருசி -9

நல்ல வெயில் சீஸன். வெயில் வீண்போகாமல் டின்களில், டப்பாக்களில் வெயிலைப் பிடித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.? நல்ல நல்ல வடாமாக இட்டு காயவைத்து, வெயிலைப் பிடித்து வைத்தோமானால், மழை, குளிர், காலங்களில் மகிழ்ச்சியாக வறுத்து சாப்பிட உதவும். எனக்கு  எந்த குளிர் ஊரில் இருந்தாலும் சரி கிடைக்கும் வெயிலிற்குத் தக்கபடி வடாம் செய்யாது விடமாட்டேன். முன் நாளில் வடாம் உலர்த்த தென்னை மட்டைகளில் கீத்து என்று ஒன்றைப் பின்னுவார்கள். மட்டையை நடுவில் இரண்டாகப் பிரித்து, எதிரும், புதிர் என்பார்கள் அப்படி எதிர்எதிராக வைத்து  பாய்போல் தொகுத்து ஒரு நீண்ட ட்ரே போலச் செய்து விடுவார்கள். புரிவதற்காக ட்ரே என்று சொல்கிறேன். ஒத்தையாகப் பின்னினால் மறைப்புகள் கட்ட, சில சமயம், மண் வீடுகளின் கூறையாகக் கூட பயன்படும் இந்தத் தென்னை மட்டைகள். இப்போது அந்த விசாரமில்லை. பாலிதீன் பேப்பர்கள் பரவலாக உபயோகப் படுத்தப்படுகிறது. வடாமிட இரட்டை கீத்து இரவல் வாங்கவேண்டாம்.

பாய் மீது வெள்ளைத் துணியை விரித்து வடாமிட்ட காலமும் உண்டு. சரி நாம் இப்போது அரிசி வடாம் செய்முறையைப் பார்ப்போமா?
பச்சரிசியில் மெஷினில் மாவரைத்து செய்யும் முறையைப் பார்க்கலாம்
வேண்டியவைகள்
பச்சரிசி (பழையதாக இருக்கட்டும்) – ஒரு கிலோ
ஜவ்வரிசி – கால் கிலோ
அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து ஒட்ட வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியில் பரவலாக உலர்த்தவும். அடிக்கடி அரிசியைப் பரவலாகத் துழாவிவிட்டால் சீக்கிரம் உலரும். நன்றாக உலர்ந்த அரிசியுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை மெல்லிய சல்லடையில் சலித்துக் கொள்ளவும். மாவு கிளருவதற்கு அலுமினியம் குக்கரை உபயோகிக்கலாம்.

அதுதான் நடை முறையில் இருக்கிறது முதலில் ஓரளவு மாவிற்கு பதம் சொல்கிறேன்.  செய்து பார்த்து விட்டுச்செய்யுங்கள். ஒரு இரண்டு கப் பிடிக்கும்படியான 1 டம்ளர்  மாவு எடுத்துக் கொள்வோம். 7, 8 பச்சை மிளகாயை துளி தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பின்னும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வடிக்கட்டிக் கொள்வோம்.
நல்ல எலுமிச்சம் பழம் ஒன்றின் சாற்றை எடுத்து, ஒரு துளி உப்பு சேர்த்துத் தயாராக வைப்போம்.

ஒரு டேபிள் ஸ்பூன் மாவை 1  கரண்டி தண்ணீரில் கரைத்து வைப்போம். பாத்திரத்தில் மூன்று டம்ளர் தணணீரைக் கொதிக்க வைப்போம்.. அதில் கரைத்த மாவைக் கொட்டிக் கிளறினால் கஞ்சி போலாகும். தீயைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தீயைக் குறைத்து இப்போது அரைத்த மிளகாயைச் சேர்ப்போம். உத்தேசமாக முக்கால் டீஸ்பூன் உப்பைப் போடுவோம். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரே சீராக மாவைச் சேர்த்துக் கிளறுவோம். கூழாகி, கெட்டியாக இறுக ஆரம்பிக்கும். எலுமிச்சை சாற்றைச் சேர்த்துக் விடாது கிளறவும். கிளறினால் மாவு வெந்து வரும். ஈரக்கையால் வெந்த மாவைத் தொட்டால் ஒட்டாது. தீயை நிறுத்தி விடவும். திரும்பவும், நன்றாகக் கிளறி, மூடி வைக்கவும். மாவை ருசி பார்க்கவும். உப்பு வேண்டுமானால் சேர்க்கலாம். வெந்த மாவு,. இட்ட வடாம், எல்லாம்  சாப்பிட ருசியாக இருக்கும். மாவைக் கிளரும் போது தீ குறைப்பது சரியாகக் கிளருவதற்கு உதவியாக இருக்கும். முதலில் கஞ்சியாக செய்வதும் அதற்குதான். இனி வடாம் பிழிய வேண்டியதுதான். வடாம் பிழிய வடாத்துக் குழல் அவசியம். நாழி, அச்சு என்று பல பேர்களில் சொல்லுவார்கள்.

சுத்தம் செய்து துடைத்து உபயோகம் செய்யவும். ஓமப்பொடி பிழியும் அச்சை உபயோகித்து சிறிய வட்டங்களாக வடாம் தயாரிக்கலாம்.  நல்ல வெயில் வேண்டும். பாலிதீன் பேப்பரை கனமான துணியின் மேல் பரத்தி நான்கு புறமும் வெயிட் வைத்து இடுகளம் தயாரிக்க வேண்டும். பேப்பரை ஈரத்துணியால் நன்றாகத் துடைக்கவும்.

Rice vadaam

கிளறிய மாவை வேறொரு அகலமான பாத்திரத்தில் திட்டமாக போட்டுக் கொண்டு மாவைக் குழவிபோல ஷேப்பில் அச்சினுள் வைத்து,  மேல் பாகத்தினால் அழுத்திப் பிழியவும். தண்ணீர் தொட்டு கையை ஈரமாக வைத்து மாவை எடுத்தால் கையில் அதிகம் ஒட்டாது. கிளறிய மாவை உருளைக்கிழங்கு மசிக்கும் கரண்டியால் அவ்வப்போது இடும் மாவை மசித்தாலும், நன்றாக இடவரும்.

முதலில் ஓமப்பொடி அச்சில் சிறிதும்  பாக்கி மாவை முறுக்கு அச்சிலும் நீண்டதாகப் பிழியலாம். முருக்கு அச்சில்,  நாடா மாதிரி பிழியும் அச்சில் மாவைப் போட்டு இட்டால் வெகு வேகமாக முடிந்து விடும். நீண்ட கோடுகளாக இதைப் பிழியலாம். வெயில் தாழ்ந்தவுடன் வீட்டினுள் எடுத்து ஒரு துணியைப்போட்டு மூடிவைக்கவும்.. காய்ந்திருந்தால் வடாத்தைத் திருப்பிப் போட்டு மறுநாளும் வெயிலில்
காயவைக்கவும்.. நன்றாகக் காய்ந்தபின் எடுத்து வைத்து வறுத்து ருசிபார்த்து அதிக அளவில் தயார் செய்து ஸ்டாக் வைக்க வேண்டியதுதான்.
ஒரு வடாம் குறிப்பு இவ்வளவு நீண்டதா? இல்லை. பழக்கமானவர்களுக்கு ஒன்றுமே இல்லை.
வடாம் இட கற்கும், வேண்டியவர்களுக்குப் பிர யோஜனமாக இருக்க வேண்டுமென்ற நோக்கம்தானே தவிர வேறொன்றுமில்லை.

என் குறிப்பு : ஜெனிவாவில் இடும் போது நல்ல கார்ட் போர்ட் அட்டைகளின் மீது பாலிதீன் கவர்களால் மூடி அதன்மேல் இட்டதால்  சௌகரியமாக இருந்தது  எது உலர்த்துவதானாலும் இப்படி ட்ரேக்கள் தயார் செய்தால் வைத்து எடுக்க, சுலபமாக இருந்தது எனக்கு.

தொடர்புடைய பதிவுகள்
கோடை கால சீசன் சமையல்

வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு
அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

Advertisements

“வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?” இல் 22 கருத்துகள் உள்ளன

 1. நல்ல வெயில் சீஸன். வெயில் வீண்போகாமல் டின்களில், டப்பாக்களில் வெயிலைப் பிடித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.? நல்ல நல்ல வடாமாக இட்டு காயவைத்து, வெயிலைப் பிடித்து வைத்தோமானால், மழை, குளிர், காலங்களில் மகிழ்ச்சியாக வறுத்து சாப்பிட உதவும்.//
  அருமையாக சொன்னீர்கள்.
  நன்றாக இருக்கிறது வடாம்.

  1. உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. வீட்டில் செ.ய்தால் வடாம் வருஷம் பூரவும் வைத்துச் சாப்பிட உதவியாக இருக்கும்..அன்புடன்

 2. படிக்கும்போதே நாக்கில் நீரூகிறது ஆனால் உடம்பில் குடிலொண்டுள்ள சர்க்கரையும் உயர் இரத்த அழுத்தமும் அப்பளம் வடாம் திங்கக் கூடாது என பிடிவாதம் பிடிக்கிறதே என்ன செய்வது?

  1. இப்படி எல்லாம் மனதில் ஆசை இருந்தால் சர்க்கரை குறைபாடு + ரத்த அழுத்தம் குறையாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா…

   வடாம் செய்முறை குறிப்பிற்கு நன்றி…

   1. வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு அங்கம்தான். உடலஸௌகரியங்களுடன் ஒத்து வாழ் என்பது புதுமொழி.
    உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

  2. அதனாலென்ன ? விரும்பிச் சாப்பிடுபவர்களுக்குச் செய்து போடலாமே? நான் எத்தனை வகைகள்எழுதுகிறேன்.? எது நமக்கு ஸௌகரியமோ அதைத்தான் சாப்பிட முடியும். எல்லாமே ஒத்துவராது. கொடுத்து ஸந்தோஷப் படுவோமே.
   ஒரு விள்ளல் பார்க்கலாம். அன்புடனும்,நன்றியுடனும்

 3. அம்மா.. ரொம்ப நல்ல குறிப்பு இதும்மா. ஆனா என்ன இங்கை நான் இருக்கிற ஜேர்மனில இப்ப இருக்கிற குளிருக்கு ம்ஹூம்ம்ன்னு ஒரு ஆழ்ந்த பெருமூச்சோட மனசுக்குள்ல நினைச்சு வாயை சப்புக்கொட்டிக்கிட வேண்டியதுதான்… :).
  இருந்தாலும் வருகிற சம்மர் வெயில் நால்லா இங்கை இருந்தா பார்த்துக்கலம்ன்னு புக்மார்க் பண்ணிவைச்சிருக்கேன் உங்க குறிப்பை.

  நல்ல உபயோகமான சிறுசிறு ரிப்ஸ்களுடன் பார்த்து பார்த்து குறிப்பெழுதுறிங்கம்மா. வாழ்த்துக்கள்!. மிக்க நன்றிம்மா குறிப்புக்கும்.. 🙂

 4. இளமதி அங்கு வெயில் சீஸன்லே எங்காவது சுற்றிப்பார்க்க, அல்லது தாய்நாடு போக கிளம்பிடுவிங்க இல்லையா? நான் வீட்லியே இருப்பதால்

  ஜெனிவா ஸம்மரிலேயும் இருக்கும் பால்கனியிலும், மதியத்திற்கு மேல்
  பெட்ரூம் வெயிலிலும், கூடகூட என் வடாம்கள் காயும. ஒரே ஒர்க் ஷாப்தான் எனக்கு. பொழுது போயிற்று.. என்ன கிடைக்காத இடம் என்று ஒன்றுமே இல்லையே ஜெர்மனி எப்படி? என் குறிப்புக்கு உன் பாராட்டுதல்கள். மகிழ்ச்சியம்மா! வாவா.தொடர்ந்து வா. அன்புடன்

 5. ஜெர்மனிலேர்ந்து வந்து வடாம் சாப்பிட்டுவிட்டு போயாச்சு. இங்க இருக்கற பெங்களூர்லேருந்து இவ்வளவு லேட்!

  அம்மாவோட சேர்ந்து வடாம் போட்டிருக்கிறேன். தனியாக இன்னும் செய்ததில்லை. உங்கள் குறிப்பு – டேபிள் ஸ்பூன் மாவை நீரில் கரைத்து முதலில் சேர்ப்பது புதிதாக இருக்கிறது.

  இங்கும் இந்தமுறை கோடை வெயில் கொளுத்துகிறது. அதனால் வடாம் போடலாம்!

  1. தாராளமாக வடாம் இடலாம். மாவை நீரில் கரைத்து சேர்த்தால்
   கஞ்சிமாதிரி பசை வரும். மாவைக் கொட்டிக் கிளறினால் கட்டி தட்டாது, மாவு ஒழுங்காகக் கிளற வரும். நான் வேண்டுமானால் வருகிறேன். நிறைய தினுஸு தினுஸாக வடாம் இடலாம்.
   இது ஒன்றுதானா? கூழ் வடாம் இன்னும் ருசியாக இருக்குமே?அன்புடன்

 6. காமாக்ஷிமா,

  வடாமுக்கு மாவு தயாரிப்பது முதல் பொரித்து சாப்பிடுவதுவரை எழுதிவிட்டு இடையிடையே டிப்ஸும் கொடுத்து…சூப்பர்.

  “எலுமிச்சம் பழம் ஒன்றின் சாற்றை எடுத்து ஒரு துளி உப்பு சேர்த்து”___ நேரமிருந்தால் எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்ப்பது எதற்குனு கொஞ்சம் சொல்லுங்கமா.

  “வெந்த மாவு,. இட்ட வடாம், எல்லாம் சாப்பிட ருசியாக இருக்கும்”____ சீரகம்,பெருங்காயம் வாசனையுடன் கஞ்சி சூப்பரா இருக்கும்.

  போன வருடம் நிறைய போட்டுவைத்தேன்.இந்த வருடம் வெயிலைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன்.

 7. வெயிலை எங்க‌ பக்கமும் கொஞ்சம் அடிக்கச்சொல்லுங்க.

  டைனிங்டேபிள்,செயர்ஸ் ஒன்றையும் விடமாட்டேன்.எல்லாவற்றிலும் போட்டு காலையில் பெட்ரூம்,நேரம் போகப்போக லிவிங் ரூம் என‌ இடம்பெயர்ந்துவிடும்.

  “ஒத்தையாகப் பின்னினால் மறைப்புகள் கட்ட, சில சமயம், மண் வீடுகளின் கூறையாகக் கூட பயன்படும் இந்தத் தென்னை மட்டைகள்” _____இவை எனக்கு நல்ல பரிச்சயம் அம்மா.அப்பா இருந்தவரை தென்னை மட்டைகளை இரண்டாயிரம்,ஐந்தாயிரம் என வெட்டி வந்து ஆள் வைத்து தென்னங்கீற்று பின்னுவாங்க.பார்த்துக்கொண்டே இருந்ததால் எனக்கும்கூட எப்படி பின்னுவது எனத்தெரியும்.பழைய நினைவுகளுக்குப் போயாச்சு.

  வத்தலுடன்,நினைவுகளையும் சேர்த்துக் கொடுத்ததற்கு நன்றிமா.

  1. சிலசமயம் எலுமிச்சை சாறு சற்று கசப்பாக இருக்கும். உப்பு சேர்ப்பது இந்த கசப்பை போக்கத்தான். இது என் மாமியார் சொன்ன குறிப்பு. இருந்தாலும் நம் காமாஷிமா என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

   இதுக்குத்தான் முதல் பெஞ்சுல உட்கார வைக்கக் கூடாது முந்திரிக்கொட்டைகளை!

   1. தகவலுக்கு நன்றிங்க.காமாக்ஷிமாவின் வேலை பளுவை குறைச்சிட்டீங்க.

    “ஆஹா! தோழி என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும்!
    வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வந்துவிட்டீர்களே!”_____இதை யாரோ, எங்கோ சொன்னதாகக் கேள்வி.

    இப்படியே போனால் ப்ரமோஷன் கொடுத்து அடுத்த வகுப்புக்கு அனுப்பிட வேண்டியதுதான்.

 8. ரஞ்ஜனி அவர்களின் மாமியார், நான் எல்லோரும் ஒரே வகுப்பில்,ஒரே சிலபஸ்ஸில்தான் படித்திருப்போம். எலுமிச்சை சாறு தனியாக வைத்தால் கசந்துவிடும். நீங்கள் பார்த்ததில்லையா?ஒரு மூடி எலுமிச்சை உபயோகப்படுத்திவிட்டு, அடுத்த மூடியை உப்பில் ஒற்றிதான் வைப்பார்கள்.இதெல்லாம்,தற்காப்பும்,சிக்கனமும்.
  அடுத்தது மாவை சிறிது கரைத்துவிட்டு கஞ்சி மாதிரி செய்து கொண்டு, மாவைப் போட்டுக் கிளறினால் கட்டி தட்டாது மாவு ஒழுங்காகக் கிளர வரும்.
  அது மாவுகிளற சுலபமாக வருவதற்கு வேண்டியதான கஞ்சி. இதெல்லாம்
  புதுசா மாவு கிளறுபவர்களுக்கு. ரஞ்ஜனிக்கும் பங்கு உண்டு நல்ல பெயரில்.
  நன்றி.அன்புடன்

 9. இன்னும் வேறுவிதமான வடாம் வேணுண்னாலும் கேளுங்க. நான் சென்னை வரேன்.சும்மா எழுதறேன். எனக்கு எதுவும் வேண்டாம். நான்கு பெண்கள் போதும். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.