
ருசி – 3
சமையல்களில் ரசம் நல்ல முறையில் அமைந்து விட்டால் சாப்பாடே ரசித்துச் சாப்பிடும்படியாக இருக்கும். ரசம்தானே என்று அலட்சியமாக வைக்காதீர்கள். பல வகைகளில் ரசம் வைக்கலாம். பத்திய முறைகள், பலவும் இதில் அடங்கும். சிறுகுழந்தைகள், முதியோர்கள், நோயுற்றவர்கள், நோயிலிருந்து தேறி வருபவர்கள், தினப்படி சமையல், விருந்து சமையல், அவசர சமையல் என எதிலும் ‘இது நானிருக்கப் பயமேன்’ என்று அபயம் கொடுக்கும், நாவிற்கு இதமான, ருசியான ரம்யமான உணவுத் துணை இது.
ஒரு காலத்தில் சமையல் என்னவென்று கேட்பவர்களுக்குச் சொல்லும் போது டொமேடோ ரசம் என்று அடை மொழியுடன் சொல்வார்கள் இப்போது அதற்கு அவசியமில்லாது, டொமேடோயின்றி ரசமில்லை என்று ஆகிவிட்டது. புளி, மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு, என இந்தப் பொருள்களுடன் மற்றவையும் சேர்ந்து ரசம், ரசமாகிறது.
இந்த வாரம் சுலபமாக ரசம் தயாரிக்கத் தேவையான ரசப்பொடி எப்படி செய்வது என்று சொல்லித்தருகிறேன்.. அரைத்து வைக்கும் ரசங்களை பிறகு பார்க்கலாம்.
ரசப்பொடி
1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும். இந்த முறை மெஷினில் கொடுத்து அரைப்பதற்காக மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும். வீட்டிலேயே குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும். மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும். இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாஸனையாகவும் இருக்கும்.
நான் முதன் முதலில் செய்த ஜீரா அரைத்த ரசத்தை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்…
தொடர்புடைய பதிவுகள்
நிமிடங்களில் சாம்பார் பொடி
தயாரிப்பது எப்படி?
எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/
பொடி அரைப்பதோடு நிறுத்தி விட்டீர்கள், பொடியை வைத்து ரசம் வைப்பது எப்படி என்றும் சொல்லலாமே..
உங்கள் வரவுக்கு நன்றி. அடுத்து பொடியை உபயோகித்து ரஸம் வைப்பதெப்படிதான். அடுத்த வாரம் வரும்? உபயோகித்துவிட்டுச் சொல்லுங்கள். அன்புடன்
இது நானிருக்கப் பயமேன்’ என்று அபயம் கொடுக்கும், நாவிற்கு இதமான, ருசியான ரம்யமான உணவுத் துணை இது.
ரசமான பகிர்வுக்கு ருசியான பாராட்டுக்கள்..
மிக்க நன்றி அம்மா…
DD யைப் பாத்து உங்கள் தளத்தில் நுழைய முடிந்தது. அதுவே பெரிய ஸந்தோஷமாக இருந்தது. உங்கள் நன்றிக்கு பின்னுமொரு நன்றி. அன்புடன்
ரஸித்து பாராட்டியதற்கு முதல்த்தரமான ரஸமான விருந்து கொடுத்தாற்போல மகிழ்ச்சி ஏற்படுகிரது. நன்றி. அன்புடன்
காமாக்ஷிமா,
ரசப்பொடி கையில் இருந்தால் அஞ்ச வேண்டாம்.நல்ல வாசனையுள்ள ரசத்துக்கு சாமான் எல்லாம் சொல்லிட்டீங்க.இனி பொடி அரைத்து வைக்க வேண்டியது படிப்பவர்களின் வேலை.
“மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்”____எதனால சீரகத்தை வறுக்கக்கூடாதுன்னு சொல்றீங்க.நான் வறுத்துதானே செய்கிறேன்.தெரிந்தால் இனி தவிர்க்கலாம்.
உங்க ஜீரா ரசம் எப்படி இருந்ததுனு சீக்கிரமே வந்து சொல்லுங்க.அன்புடன் சித்ரா.
சீரகம் நுட்பமானது. மிக்ஸி சூட்டிலும்,, மெஷினில் அரைத்தால் மெஷின் சூட்டிலுமே பதமாகி விடும். அதிக சூட்டினால் கலர் மாறிவிடும். கூட்டுகளில் சேர்க்கும் போது கூட வறுக்காமல் சேர்க்கிறோம். பிரமாத வித்தியாஸமில்லை. விருப்பப் படி செய்யலாம். கொஞ்சமாக ரஸப்பொடி செய்து பாறேன். எங்கள் வீடுகளில் எந்த சமையல் செய்தாலும், உடன் ரஸமும் செய்வது வழக்கமாக இருக்கிரது., ரஸமும் பலவிதமாக இருக்கும்
அன்புடன்
சனி, ஞாயிறு மட்டுமே எங்கள் வீட்டில் ரசம் செய்வோம். மற்ற நாட்களில் அலுவலகத்திற்கு மதிய உணவு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால் குழம்பிற்குத்தான் முக்கியத்துவம்.
நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில் ரசப்பொடி செய்கிறேன் அடுத்தமுறை.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!
அதுதானே பார்த்தேன். ரஞ்ஜனி இடாத பின்னூட்டமா? ரஸம்,ரஸமாக இருக்கும்.. செய்யவும்.