குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?

செல்வ களஞ்சியமே பகுதி 2

ரஞ்சனி
ரஞ்சனி

நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார்.
ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார்.
சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த தேநீரை, ஏற்கனவே நிறைந்திருந்த கோப்பையில் ஊற்றினார். கோப்பையிலிருந்து தேநீர் வெளியே வழிய ஆரம்பித்தது. வந்தவர் பதறிப்போய் ‘நிறுத்துங்கள், நிறைந்த கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!’ என்றார்.
துறவி சிரித்துக் கொண்டே, ‘காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியும். இல்லையா? நீங்கள் உங்கள் தலையில் இருப்பதை வெளியில் கொட்டி விட்டு வாருங்கள். அப்போதுதான் நான் பேசுவது உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.
இந்தக் கதை சொல்வது என்ன?
எந்த ஒரு புதிய விஷயம் ஆனாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். திறந்திருக்கும் மனதில் தான் புதிய எண்ணங்கள் நுழைய முடியும், இல்லையா?
கருவுற்றிருக்கும் இளம்பெண்களும் முதலில் மனதளவில் தயார் ஆக வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று.
திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை கு.பி.மு. (குழந்தை பிறப்பதற்கு முன்), கு. பி. பி. (குழந்தை பிறந்த பின்) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

தி.மு – இருந்த வாழ்க்கையே தி.பி. தொடராது. இதை எல்லா பெண்களுமே அனுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோலத்தான் கு.பி.மு இருக்கும் நிலை வேறு, கு.பி.பி. இருக்கப் போகும் நிலை வேறு.
உங்கள் குழந்தையை பாலூட்டி, சீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல அவளுக்கு ஒரு நல்ல ரோல் மாடல் அம்மாவாகவும் இருக்கப் போகிறீர்கள். உங்களது குழந்தைத்தனம் மாறி ஒரு தாயாக உருவாக வேண்டும். மிகப் பெரிய மாற்றம் இல்லையா?

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறீர்கள். நாளை முதல் தினம். ஒரு வாரத்திற்கு முன்பே ஷாப்பிங் செய்து புது டிரெஸ், புது கைப்பை, புது ஸ்லிப்பர்ஸ் என்று எல்லாமே புதிது – வாங்கியாயிற்று. வெளி விஷயங்கள் எல்லாம் ரெடி. மனம்?

பள்ளிக்கூடம் போலல்ல கல்லூரி. பள்ளியில் ஆசிரியர்கள் ஸ்பூனால் படிப்பை ஊட்டி விடுவார்கள். கல்லூரியில் நீங்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். பாடங்களும் அதிகம். உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும்.
அதே போலத்தான் குழந்தை பிறப்பதும். எல்லாமே புதிராக இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல; குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. இத்தனை நாட்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு திடீரென வெளிச்சமான ஒரு உலகம்; நாமே சாப்பிடவேண்டும்; நாமே வெளியேற்ற வேண்டும். பசித்தால் அழ வேண்டும். அம்மாவின் தயவில் சுகமாக நடந்து வந்தது எல்லாம் இப்போது குழந்தை தன் முயற்சியில் தானே செய்து கொள்ளவேண்டும்.
அம்மாவின் அரவணைப்பு அதிகம் தேவைப்படும் குழந்தைக்கு. அம்மாவின் வயிற்றில் கதகதப்பாக இருந்த குழந்தை அதை வெளியிலும் தேடும். பிறந்த குழந்தைக்கு கழுத்து உறுதியாக இருக்காது. அதனால் மிகவும் பத்திரமாக அதை தூக்க எடுக்கவேண்டும்.

குழந்தை படுக்கையில் படுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். முதலில் இடது கையை நன்றாக விரித்து, விரல்களை அகலமாக்கிக் கொள்ளுங்கள். கையை குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் அடியில் கொடுங்கள். வலது கையை குழந்தையின் பிருஷ்ட பாகத்தில் வைத்து குழந்தையை மெதுவாக உங்கள் பக்கம் கொஞ்சமாக ஒருக்களித்துக் (நிதானம்… நிதானம்…) கொள்ளுங்கள்.
குழந்தையின் தலை, கழுத்து, கொஞ்சம் முதுகுப் பகுதி எல்லாம் உங்கள் விரிந்த இடது கையில் இருக்கட்டும். கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்கவும். உங்கள் பிடி கெட்டியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தைக்கு எந்தவிதமான அழுத்தமும் தெரியக் கூடாது.

ரம்பா அம்மா
ரம்பா அம்மா

நிதானமாக குழந்தையை உங்கள் மார்பின் மேல் சாய்த்துக் கொள்ளுங்கள். இப்போது குழந்தையின் தலை உங்கள் முழங்கை பகுதிக்கு வரும்படி மெதுவாக உங்கள் இடது கையை குழந்தையின் தலையிலிருந்து பிருஷ்ட பாகத்திற்கு கொண்டு வாருங்கள். வலது கையை எடுத்து விடலாம்.

சுமார் மூன்று மாதங்கள் வரை குழந்தையை இந்த முறைப்படியே தூக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு 6 மாதங்கள் கூட தலை சற்று தள்ளாடியபடியே இருக்கும். அதனால் அதிக கவனம் தேவை.
குழந்தையின் தலை உங்கள் கைகளிலோ அல்லது முழங்கையிலோ (நீங்கள் கையை மடக்கும் போது மேல் கைக்கும், முழங்கைக்கும் நடுவில் வரும் ‘எல்’ போன்ற அமைப்பிலோ) பதிந்து இருக்க வேண்டும்.
இத்தனை எழுதுவதால் எப்படி இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் சில நாட்கள் பழகியவுடன் சரியாகிவிடும்.

குழந்தையுடன் நிறைய பேசுங்கள். அதை பார்த்து சிரியுங்கள். குழந்தையின் பார்வை முதல் சில மாதங்களில் நிலைபெற்றிருக்காது. சில சமயம் நடிகை ரம்பாவின் பார்வை பார்க்கும்! அதையும் ரசியுங்கள்.

அடுத்த பகுதி: முதல் 1,000 நாட்கள்

செல்வக் களஞ்சியமே – பகுதி 1

“பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?” இல் 31 கருத்துகள் உள்ளன

 1. தி.மு; தி.பி; கு.மு’; கு.பி ;))))) ஆம் இவற்றிலெல்லாம் பெண்களுக்கு எவ்வளவு புதுப்புது விஷயங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் [சிலருக்கு ஏமாற்றங்கள்] ஏற்படத்தான் செய்கிறது.

  குழந்தையை எப்படித்தூக்க வேண்டும், எவ்வாறு சர்வ ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், எப்படி அருகில் போட்டு அணைத்துக்கொண்டு, கதகதப்பைத்தர வேண்டும் என எவ்வ்வளோ மிகச்சிறந்த மிக அவசியமான செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள். மிகவும் பயனுள்ள பகிர்வு.

 2. ஒரு குழ்ந்தை பிறக்கும் போது தான் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பதை

  மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  இளம் தாய் மார்களுக்கெல்லாம் குழ்ந்தை பிறந்த ஒரு சில மாதங்கள்

  பெரிய சவாலான நேரம் தான்.

  உங்கள் பதிவு அவர்களுக்கு நல்ல உதவிகரமாக இருக்கும். குழந்தையை

  எப்படித் தூக்க வேண்டும் என்பதை மிக மிகத் தெளிவாக

  விளக்கியுள்ளீர்கள். இளம் தாய்மார்கள் பயனடைவார்களாக.

  அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  ராஜி

  1. வாருங்கள் ராஜி,
   குழந்தை பிறந்தவுடன் நம் வாழ்க்கையே அந்தக் குழந்தையை சுற்றி அமைந்துவிடுகிறது, இல்லையா?

   குழந்தையைத் தூக்குவது பற்றி யோசனை செய்து யோசனை செய்து எழுதினேன். செயல் சுலபம்; வார்த்தைகளில் விளக்குவது கடினம் என்று இதை எழுதும்போது தெரிந்து கொண்டேன்.

   நன்றி ராஜி!

 3. ரஞ்சனி,

  பிறந்த குழந்தையைத் தூக்குவதை அருமையா விளக்கியிருக்கீங்க.அதை வார்த்தைகளில் விவரிப்ப‌து கடினம்தான்.எதிரில் என்றால் எளிதாகக் காட்டிவிடலாம்.தொடருங்கள்.

  முதல் பகுதியில் நான் பின்னூட்டமிட்டபோது நீங்கதான் எழுதறீங்கன்னு தெரியாது.உங்க பதிவைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன்.

 4. யார் என்று தெரியாமலேயே நல்ல எழுத்துக்களைப் பாராட்டும் உங்கள் குணம் அரிது, சித்ரா. ஆனால் என் எழுத்து நடையைப் பார்த்து ‘guess’ செய்தீர்களா?

  நான் எதை நினைத்து பயந்தேனோ அதை நீங்களும், திருமதி ராஜியும் பாராட்டிவிட்டீர்கள். இதை எழுதும் முன் பலமுறை குழந்தையை எடுத்து, எடுத்து, எடுத்துப் (கற்பனையில் தான்!) பார்த்தேன்!!!

  நன்றி!

  1. ரஞ்சனி,

   படித்து முடித்ததும்,ஓரளவுக்கு guess பண்ண முடிந்தது.ஆனாலும் இந்த தளத்திற்குள் இவங்க எப்படி என நினைத்துக்கொண்டேன்.

 5. நானும் குழந்தையை எப்படி தூக்குவோம் என்று மனதில் கற்பனை செய்து கொண்டு கையைப் பார்த்தால் கையில் குழந்தையில்லை.!ஏதாவது குழந்தை கிடைத்தால் கொஞ்சி மகிழலாம் என்று தோன்றியது. ஸரியாகத்தான் எழுதியிருக்கிறாய். நீ சின்ன வயது பாட்டிதானே!கரெக்டா ஞாபகம் வைத்திருக்கிறாய்.. நல்லபதிவு.

  1. ஆங்கிலத்தில் oxymoron என்று ஒன்று.ஒன்றுகொன்று முரணான வார்த்தைகளை சொல்வது. உதாரணம்: Open Secret

   சீக்ரெட் என்றால் ஓபன் ஆக இருக்காது. ஓபன் ஆக இருந்தால் சீக்ரெட் ஆக இருக்க முடியாது. அதுபோலத்தான் இருக்கிறது நீங்கள் சொல்லும் ‘சின்ன வயது பாட்டி!’

   நீங்களும் குழந்தையைத் தூக்கிப் பார்த்தீர்களா? இரண்டுபேரும் ஒன்றாக இருக்கிறோமே!

   நன்றி!

 6. இளம் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக வெகு கவனத்துடன் எழுதி இருக்கிறீர்கள்.குழந்தையை கற்பனையில் தூக்கிப் பார்த்து எழுதுவது என்றால் உங்களது சிரத்தை அதில் தெரிகிறது. Oxymoron ஐ மிகவும் ரசித்தேன்

 7. வணக்கம்
  அம்மா

  குழந்தை வளர்ப்பு பகுதி2 படித்த பின்புதான் உணர்தேன் ஒரு பெண் திருமணம் செய்து குழந்தை பெற்றால்தான் அவள் அம்மா என்ற கெளரவம் கிடைக்கிறது அப்படி அம்மா என்ற கெளரவம் கிடைத்தும் தான் பெற்றெடுத்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள் தி,மு,தி,பி, இருக்கிற பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பாடம் இது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாருங்கள் ரூபன்! மிக அழகாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

adhi venkat க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.