பகுதி நேரமாக அல்லது வீட்டிலிருந்தபடியே சீட்டு நடத்துவது எப்படி என்று கடந்த பதிவில் பேசியிருந்தோம்.. இந்தப் பதிவில் உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள்? இதோ இந்த ஐந்து பாயிண்டுகள்…
1. எத்தனை வருடமாக, அவர் உங்களுக்குத் தெரியும்? குறைந்தபட்சம் 2, 3 வருடங்களாவது அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ‘6 மாதங்கள்தான் தெரியும், பரவாயில்லை’ என்றெல்லாம் விலக்கு தந்து சீட்டில் சேர்த்துக்கொண்டு அவஸ்தைப் படாதீர்கள்.
2. சொந்த வீட்டில் இருக்கிறாரா? வாடகை வீட்டில் இருக்கிறாரா? அப்படி எத்தனை வருடங்களாக அங்கே வசிக்கிறார்? என்கிற விவரங்களை கேட்டு பெறுங்கள்.
3. சீட்டில் சேர விரும்பும் பெண் அல்லது அவருடைய கணவர் என்ன வேலை செய்கிறார்? அடிக்கடி மாற்றலாகக்கூடிய வேலையில் இருக்கிறாரா என்கிற விவரங்களும் அவசியம். அடிக்கடி மாற்றலாகக்கூடிய வேலை என்கிறபட்சத்தில் சீட்டு இறுதிவரை பணம் கட்டுவார் என்பதற்கான உறுதியை எப்படி பெறுவது என்று யோசியுங்கள். உறுதியளிக்க முடியாதபட்சத்தில் அந்த நபரை நிராகரித்து விடுங்கள்.
4. சீட்டில் சேர விரும்பும் நபர், தன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்துதான் சீட்டில் சேர்கிறாரா என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு வேளை அந்த நபரால் சீட்டுத்தொகையை சரியாக கட்ட முடியவில்லை எனில், அவர் வீட்டுக்குத் தெரிய கேட்கும்போது தர்மசங்கடாமாகி விடக்கூடாது. சில பெண்கள் கணவருக்குத் தெரியாமல் சீட்டுப் போட விரும்பலாம். ஆனால் அது அவருடைய கணவருக்கு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தெரிய வரும்போது உங்களைப் பற்றி தவறான பிம்பம் உருவாகிவிடக் கூடும். எனவே.. இதிலும் கவனமாக இருங்கள்.
5. சீட்டு நடத்துபவரைப் போலவே, சீட்டில் சேருபவரும் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்.
இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்து சீட்டு சேர்த்து நடத்துங்கள்.